சங்கடம் தரும் சர்ப்ப தோஷம்Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

               ராகுவும், கேதுவும் பொதுவாக எதிலுமே தடை படுத்தி, தாமதப்படுத்தியே பலன்களைத் தருவார்கள். நிழல் கிரகங்களாக இருப்பதாலேயே அவ்வளவு எளிதில் நிஜத்தைக் காட்டாது. கொஞ்சம் மறைத்தே வைத்திருக்கும். தணலின் மீதுள்ள சாம்பலைப்போல, பாலின் மீதுள்ள ஆடையைப்போல ராகுவும், கேதுவும் உள்ள விஷயங்களை போர்த்தி மறைப்பார்கள். ‘‘பெட்டி நிறைய பணம் இருக்குங்க. ஆனா, சாவிதான் எங்க இருக்குன்னு தெரியலை’’ என்பதைப் போலத்தான் இது. இவர்கள் இருவரும் ஜாதகத்தில் ஒழுங்கில்லாமல் எங்கேயாவது உட்கார்ந்து படுத்த ஆரம்பித்தால், வாழ்க்கையே ஏக்கத்தில்தான் போய் முடியும். ராகுவும் கேதுவும் எதிரெதிர் பாதையில் சமமாகப் பயணிக்கும். இன்னும் பார்த்தால் அது ஒரே சர்ப்பம்தான். ஒன்று தலை மற்றொன்று வால். ஆனாலும், இரண்டும் தனித்தனியான சக்திகளைக் கொண்டது. ஒரே சர்ப்பத்தை இரண்டாகப் பிரித்து ராகு, கேது என்றனர்.

இந்த காளசர்ப்ப தோஷம் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது? அது என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தும்?

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திலோ அல்லது ராசியிலோ ராகு, கேது இருந்தால் அது தோஷமாகிறது. மேலும் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் ராகு, கேது இருந்தாலும் அது தோஷமாகிறது. முதலில் இதற்கான பலன்களைப் பார்ப்போம்.

லக்னத்தில் ராகு இருந்தால் எதையுமே போராடித்தான் பெற முடியும். ‘‘இவன் சொல்லிக் கொடுத்த பையன் எண்பத்தஞ்சு மார்க் வாங்கறான். ஆனா, இவன் அறுவதுதான் வாங்கறான்’’ என்பவரின் பின்னால் ராகுவும் கேதுவும் யோகங்களைக் கொடுக்கமுடியாத தோஷமாக நிற்கிறார்கள். எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவுபட்ட மாதிரியே இருக்கும். ஏனெனில், ராகுவின் பலம் குறையும்போது எதிலுமே, எப்போதும் சின்னதாக அலட்சியங்கள் இருக்கும். ‘‘இவனும் அவனும் ஒரே செட்தான். அவன் பிரமோஷன்ல போயிட்டான். இவன் மட்டும் அதே சீட்ல உட்கார்ந்துக்கிட்டிருக்கான்’’ என்று குறைப்படுவது போல சிறிய விஷயங்கள். முதல் திருமணம் வரை தடையும், சிரமமும் இருப்பதாலேயே திருமணத்தின்போது இந்த தோஷத்தை முக்கியமாகப் பார்க்கிறார்கள்.

தோஷம் பார்க்காது ஏனோதானோ என்று திருமணம் செய்து விடுவது தவறானது. இதனால் வாழ்க்கைத் துணை மீது வீண் சந்தேகங்கள், எதிலும் திருப்தியற்ற தன்மை இருக்கும். ‘‘ஏதோ கல்யாணம் ஆச்சு... ஊரார் பார்வையில் நாங்க புருஷன் பொண்டாட்டி. நான் எதிர்பார்த்ததே வேற; எனக்கு அமைஞ்சதெல்லாம் வேற’’ என்கிற அங்கலாய்ப்பு இருக்கும். இன்னும் குறிப்பாக ஏழில் கேது அமரும்போது மண வாழ்க்கையின் தொடக்கத்தில் சரியான துணைதான் என்று நினைப்பார்கள். வாழ்க்கை நகர நகர அங்கலாய்ப்பு அதிகமாகும். இன்னும் நிறைய தகுதி படைத்தவர்களாக வாழ்க்கைத்துணை இருந்திருக்கலாம் என்று திருப்தியற்று இருப்பார்கள். இவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல தெரிபவர்கள் மீது நாட்டம் கொள்ள ஆரம்பிப்பார்கள். கேது இங்கிருந்து தன் வேலையைத் தொடங்குவார். வாழ்க்கையில் மெல்ல பிரச்னைகள் சூழத் தொடங்கும்.

இதேபோல ராகு ஏழில் இருந்தால் உணவு விஷயத்திலிருந்து எல்லா விஷயத்திலும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். ‘‘கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணினாத்தான் என்ன. அதே கர்நாடகமா இருக்கணுமா? தன்னோட வகையறாவ பத்தியே அடிக்கடி பேசிக்கிட்டிருக்கா... வெறுப்பா இருக்கு’’ என்று படபடப்பார்கள். சாதாரண இட்லியைக் காட்டிலும், இட்லியை உப்புமாவாக செய்து கொடுத்தால் பிடிக்கும். பொதுவாகவே ஏழில் ராகு இருந்தால் விதம்விதமான எதிர்பார்ப்புகள் இருக்கும். ஏழில் ராகு இருப்போருக்கு அதே மாதிரியான தோஷ ஜாதகம் உள்ளவரை சேர்க்கும்போது புரிதல் எளிதாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் அடுத்தவர் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்வார்கள். வாழ்க்கைத்துணையை சந்தோஷப்படுத்துதலும் எளிதாகும். தாம்பத்யத்திலும் பிரச்னைகள் இருக்காது. 

உங்கள் ஜாதகத்தில் லக்னம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்; அல்லது ல என்று எழுதப்பட்டிருக்கும். அதற்கு அடுத்த கட்டமான இரண்டாம் இடத்தில் ராகுவும், எட்டாம் இடத்தில் கேதுவும் இருந்தால் அதுவும் தோஷம்தான். இரண்டாமிடம் என்பது தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தைப் பற்றிச் சொல்கிறது. இரண்டாமிடத்தில் ராகு இருந்தால் கொஞ்சம் ஓவர் பட்ஜெட் போடுபவராக இருப்பார்கள். எதையுமே மிகைப்படுத்தாமல் பேசத் தெரியாது. தேவைகளை அறியாமல் செலவு செய்தபடி இருப்பார்கள். ‘‘நூடுல்ஸ்னா ஒரு பாக்கெட் வாங்கிட்டு வரமாட்டீங்களா... இப்படி இருவது பாக்கெட்டா வாங்கிட்டு வர்றது’’ என்று அடிக்கடி வீட்டில் திட்டு வாங்குவார்கள். சிறிய சிராய்ப்பிற்கே பயந்து புலம்புவார்கள்.

இரண்டில் ராகு இருந்தால் இரண்டு கல்யாணம் என்பார்கள். அது தோஷம் பார்க்காமல் திருமணம் செய்பவருக்குத் தானே தவிர எல்லோருக்கும் அல்ல! குற்றாலத்தில் குளித்தாலும், ‘‘இதெல்லாம் ஒரு அருவி. இதுக்குப்போய் இவ்ளோ தூரம் செலவு பண்ணிக்கிட்டு வரணுமா’’ என்று எரிச்சலடைவார்கள். வாழ்வில் சின்னச்சின்ன சந்தோஷங்களை ரசித்து அனுபவிக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உள்ளதை உள்ளபடி உரைக்கும் வாழ்க்கைத்துணை எப்படி ஒத்து வரும்? இதேபோல தோஷமுள்ள ஜாதகரை சேர்த்தால்தான் நல்லது. இதனால் இரண்டு எதிர்மறை இணையும்போது நேர்மறையான எண்ணங்கள் உருவாகும். வாழ்க்கையில் இனிமை கூடும்.  

இரண்டில் கேது இருந்தால் அளந்து பேசுவார்கள். சில வார்த்தைகள் பேசினாலும் அதில் ஆழமான அர்த்தங்கள் இருக்கும். வார்த்தைகள் மத்தாப்பூ போல இல்லாமல் அஸ்திரம்போல கூர்மையாகப் பாயும். ‘‘பக்கத்துல உட்கார்ந்து பாசமா பத்து நிமிஷம் பேசினேன். தப்பா புரிஞ்சுக்கறதால பதினோராவது நிமிஷம் சண்டை வருதுங்க...’’ என்பார்கள். எனவே, இப்படி இரண்டில், அதாவது வாக்கு ஸ்தானத்தில் கேது இருப்போருக்கு அதேபோல ஜாதகரைத்தான் சேர்க்க வேண்டும்.

இதேபோல எட்டில் ராகு, கேது இருந்தாலும் தேவையில்லாத பயத்தை உருவாக்கும். அடிமனதில் தனக்குப் பிடித்த குணங்களைக் கொண்ட மனிதர்களை உருவாக்கிக் கொண்டு வாழ்வர். வீண் கனவுகளில் வாழ்க்கையை நடத்துவார்கள். ‘‘அழகு இருந்தா படிப்பு இல்ல... படிப்பு இருந்தா அழகு இல்லை... அதனால கொஞ்சம் மெதுவாவே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்’’ என்று வாழ்க்கைத்துணை தேடலை தொடர்வார்கள். அப்படியே அமைந்து விட்டால் ஒருவருக்கு காள சர்ப்ப தோஷம் இருந்து மற்றவருக்கு இல்லையெனில் ராகுவும், கேதுவும் படமெடுத்து ஆடத் தொடங்கி விடுவார்கள். தான் கண்ட பொருத்தங்களெல்லாம் எப்படி காணாமல் போனது என்று அப்போது விழிப்பார்கள். இல்லாத விஷயங்களை நினைத்து, ‘இப்படி ஆயிடுமோ... அப்படி ஆயிடுமோ’ என்று பயப்படுவார்கள்.  ஏனெனில், எட்டாம் இடம் என்பது சூட்சும ஸ்தானமாகும். அந்த இடத்தில் நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் அமரும்போது இல்லாத விஷயங்களை சூட்சுமமாக இருப்பதுபோலவே காட்டிக் கொண்டிருப்பார்கள்.

ராகு, கேது தோஷம் வராமல் தடுக்க முடியுமா?

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineதாராளமாக முடியும்! எங்கேனும் குருவிக் கூடு, பாம்புப் புற்றிருந்தால் அதனால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லையெனில் இடிக்காதீர்கள். நிழல் கொடுக்கும் மரங்களை வெட்டுவதற்கு முன்பு யோசியுங்கள். அரசு இடத்தை தந்திரமாக வளைக்கும்போது ராகு உங்களை வளைப்பார். ராகுவும் கேதுவும் பாட்டன் பாட்டிக்கு உரித்தான கிரகங்கள் ஆதலால் முன்னோர்களின் சொத்துக்களையோ, அவர்கள் வாழ்ந்த வீடுகளையோ நியாயமில்லாமல் விற்க வேண்டாம். முக்கியமாக கேதுவின் அருளைப்பெற வேண்டுமெனில் கோயில் சொத்துகளைத் தொடக்கூடாது. கற்றுக் கொடுத்த குருவை மதிக்க வேண்டும். புண்ணிய தீர்த்தங்களை மாசுபடுத்தக் கூடாது. பரம்பரையாக வணங்கி வந்த குலதெய்வம் மற்றும் கிராம தேவதைகளின் வழிபாடுகளைத் தொடருங்கள். கருமியாக இருக்காமல் கருணை வள்ளலாக இருங்கள். பிறன்மனை நோக்குவதும், களவாட நினைப்பதும் கடுமையான களத்திர தோஷமாக மாறும். கன்றுக்கு பால் விடாமல் ஒட்ட ஒட்ட பால் கறப்பது கூட தோஷத்தை அதிகரிக்கும். பொய் சாட்சி கூறுபவரின் வாக்கு ஸ்தானத்தில் தானாக ராகுவோ, கேதுவோ அமர்வது நிச்சயம். 

தவறான எண்ணங்களை, தர்மமில்லாத தீங்கான காரியங்களை செயல்படுத்தினால் ஒருவரின் ஜாதகத்தில் அது மோசமான இடங்களில் அமர்ந்து தோஷமாக தன்னை காட்டிக் கொள்கிறது என்று பார்த்தோம். எனவே கட்டுப்பாடு காப்பாற்றும். வெளிப்படையாகச் சொல்வதானால், ‘திருடுவதற்கு வாய்ப்பு கிடைத்தும் திருடாமல் இருந்தால்’ ராகு அவருக்கு யோகத்தை கொடுப்பார். இதுதான் சூட்சுமம். மனம் நாலா விதமாகவும் நினைக்கத்தான் செய்யும். ஆனால் செயலாக மாற்றும்போது, அதற்குரிய பலனை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். ‘‘நான் இதைப் பண்ணும்போது யாரும் பக்கத்துலயே இல்லையே’’ என்று காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு போக முடியாது. காலதேவன் உங்களை எப்போதும் கவனித்துக் கொண்டிருப்பான். 

வழிபாடும் பலன் தரும். கோயில்களுக்குச் செல்லும்போது தோஷம் மாயமாகி மறைந்து விடுவதில்லை. ஆனாலும் அந்த வழிபாடு, காளசர்ப்ப தோஷத்தை எதிர்கொள்ளக் கூடிய சக்தியைத் தரும். சர்ப்பத்தின் சக்தியைவிட மேன்மையான சக்தி உங்களுக்குள் ததும்பும். காளசர்ப்ப தோஷத்திற்கான பரிகாரக் கோயில்கள் நிறைய உள்ளன. பொதுவாக திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, சீர்காழிக்கு அருகேயுள்ள கீழ்ப்பெரும்பள்ளம் போன்றவை பலருக்குத் தெரியும். இதுபோலவே பழமையான இன்னும் சில தலங்கள் உள்ளன. அவற்றில் கும்பகோணம் & திருவாரூர் பாதையில் நன்னிலத்திற்கு அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியம் என்கிற தலமும், புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருப்பேரையூரும் பிரதானமானவை. ஸ்ரீவாஞ்சியத்தில் ராகுவும் கேதுவும் இணைந்த அரிய கோலம் கொண்ட சிலையை தரிசிக்கலாம். மிகச் சக்தி வாய்ந்த சந்நதியாக அது விளங்குகிறது.

அதேபோல நாகலோகத்திற்குள் புகுந்து விட்டோமோ என்று வியப்பளிக்கும் வகையில் திருப்பேரையூர் நாகநாதர் கோயில் விளங்குகிறது. கோயிலின் மதிலில் தொடங்கி குளக்கரை முழுவதும் நாகர் சிலைகள். கோயிலிலேயே தோஷத்திற்கான பரிகாரங்கள் செய்கின்றனர். இந்த இரு ஆலயங்களையும் தரிசித்து கோயிலில் சொல்லக்கூடிய பரிகாரங்களைச் செய்யுங்கள். தோஷங்களின் வீர்யம் தானாகக் குறையும்.

திருமணத்துக்கு இவ்வளவு விஷயங்களையும் பார்த்துத்தான் ஆக வேண்டும். நான்கு மாசம் பயன்படுத்தி தூக்கி எறியும் சட்டைத் துணியையே, ‘சாயம் போயிடுமா... பியூர் காட்டனா... என்ன பிராண்ட்’ என்று நாலு கடை ஏறி இறங்கி வாங்குகிறோம். வாழ்நாள் முழுவதும் கைகோர்த்து வரக்கூடிய வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு, ஜாதகத்தை பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது. அதனால்... இந்த வரன்களின் நட்சத்திர, ராசி, ஜாதகப் பொருத்தங்கள் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்...

மாற்றம் தரும் மந்திரம்

காளசர்ப்ப தோஷத்திலிருந்து மீள்வதற்காக சொல்ல வேண்டிய மந்திரம்...
ராஹோரிதம் கவசமீப்ஸித வஸ்துதம் ய
பக்த்யா படேதனு தினம் நியதஸ்ஸசிஸ்ஸன்
பராப்னோதி கீர்த்திமதுலாம்ச ஸ்ரியஸ்ஸம்ருத்திம்
ஆரோக்யமாஸு விஜயாத்யஸுர ப்ரஸாதாத்
(தீர்வுகளைத் தேடுவோம்...)
 முனைவர் கே.பி.வித்யாதரன்