நியூஸ் வே

      ‘‘அசின் ஒரு மூன்றாம்தர நடிகை. அவருக்கு நடிக்கவே தெரியவில்லை. பாலிவுட்டில் அவருக்கு எதிர்காலமே இல்லை’’ என ஒரு டி.வி பேட்டியில் கடுப்போடு சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் முகேஷ் பட். கோபத்துக்குக் காரணம்? தான் எடுக்கும் லோ பட்ஜெட் படம் ஒன்றில் அசினை நடிக்கக் கேட்டிருக்கிறார் முகேஷ். சம்பளமும் குறைவு; முன்னணி நடிகருக்கும் ஜோடி இல்லை. அதனால் அந்தப் படத்தை அசின் நிராகரிக்க, இப்படி சர்டிபிகேட் கிடைத்தது. கால்ஷீட் கொடுக்கலைன்னா இப்படியெல்லாமா திட்டுவார்கள்?

னது பிறந்த நாளை குடும்பத்தினருடன் டெல்லியில் கொண்டாடினார் தாப்ஸி. ‘‘வருஷம் பூராவும் ஷூட்டிங் ஷூட்டிங்னு வெளியிலதான் இருக்க வேண்டியிருக்கு. அதனாலதான் நெருங்கிய சில நண்பர்களை மட்டும் வீட்டுக்கு வரவழைச்சு சிம்பிளா கொண்டாடியாச்சு’’ என்கிறார் வெள்ளாவி அழகி.

'எப்போ கல்யாணம்’ என்ற கேள்விக்குத்தான் இதுவரை டென்ஷனாகி வந்தார் சுஷ்மிதா சென். இப்போது இன்னொரு கேள்வியும்! ஆங்கிலே யர்களை எதிர்த்துப் போராடிய ஜான்சி ராணி லட்சுமிபாய் வரலாற்றை திரைப்படமாக எடுக்கப் போவதாகவும், அதில் தானே ராணியாக நடிக்கப் போவதாகவும் சொல்லியிருந்தார் சுஷ். எந்த ஊருக்குப் போனாலும், ‘எப்போ படம் வருது’ என ஆளாளுக்கு விசாரிக்கிறார்கள். ஆனால் மெகா பட்ஜெட்டில் இப்படி ஒரு படம் எடுக்க தயாரிப்பாளர் சிக்கவில்லை. அதனால் இந்தக் கேள்விக்கு டென்ஷன் ஆகிவிடுகிறார் சுஷ்.

‘ஹலோ ஜெய்ஹிந்த்’ & இசைஞானி இளையராஜா முதன்முதலாக இசையமைக்கப் போகும் மராத்தி மொழிப் படம். இதற்கான வேலையில் பிஸியாக இருக்கும் ராஜா, விரைவில் தனது ரசிகர்களுக்காக டிவிட்டரிலும் வலம் வரப் போகிறார்.

பிரபுதேவா டைரக்ஷனில் விஷால் - சமீரா ரெட்டி இணையும் ‘வெடி’ படத்தின் ஷூட்டிங் கொல்கத்தாவில் நடக்கிறது. புகழ்பெற்ற தட்சிணேஸ்வர் காளி கோயிலில் சில காட்சிகளை படம்பிடிக்க ஆசைப்பட்டார் பிரபுதேவா. ஆனால் எவ்வளவோ முயற்சி செய்தும் அனுமதி கிடைக்கவில்லை. வேறு வழியின்றி பாரக்பூர் அன்னபூர்ணா கோயிலில் அந்தக் காட்சிகளை ஷூட் செய்தார்கள்.