காற்றின் கையெழுத்துKungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

     திருமணம் என்பது ஒரு பெண்ணுக்குத் திரையாக இருக்கக்கூடாது; இன்னொரு திசையாக இருக்க வேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தி இயக்குநர் ஜெயதேவி என்னை ஒரு பாடல் எழுதச் சொன்னார். படம், ‘பவர்’. இசை வித்யாசாகர். மணமகளான குஷ்புவை பாடகர் ஹரிஹரன் வாழ்த்துவதுதான் சூழல்.

‘மலரே நீ வாழ்க
மஞ்சள் நிறம் வாழ்க
வண்ணக் கனவெல்லாம் வாழ்கவே!

இரவே பகலாக
நிலவே நீ வாழ்க
இசையே இசையாக வாழ்கவே!

வீட்டின் மூலையிலே
இருக்கும் சமையலறை
இருவரின் படுக்கையறை
இறைவனின் பூஜையறை
இவை மட்டும் வாழ்க்கை இல்லையடி
உலகங்கள் இன்னும் உள்ளதடி

ஒரு கிளையில் பூக்கும் பூக்கள் & அந்தக்
கிளையில் வாழ்வது இல்லை
ஒரு மாலையாகும்போதும் & தம்
வாசம் இழப்பதும் இல்லை
திருமணம் எல்லைகள் அல்ல
உறவுகள் முடிவதும் அல்ல
இந்த உலகம் முழுவதும் இங்கே
நீ வாழும் வீடுதானே’
என்று எழுதினேன்.

பெரும்பாலான பெண்களுக்கு இன்று வீடுதான் உலகமாக இருக்கிறது. ஒரு பெண் குங்குமச்சிமிழுக்குள் கூடடைந்த பறவையாக இருக்கிறாள். அவளது ஒரு சிறகு கட்டில் விரிப்பாகவும் இன்னொரு சிறகு தொட்டில் சேலையாகவும் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

‘‘எத்தனை படிப்பு, பட்டம், பதவி, பணம் இருந்தாலும் நிறைவான திருமண வாழ்க்கையே அவளது வெற்றியைத் தீர்மானிக்கும் என்ற சமூக மதிப்பீடு பரவலாக இருக்கிறது. இதனால் பொதுவாழ்வில் ஈடுபடுதலும், ஒரு குறிப்பிட்ட துறையில் சமூகத்துக்கான பெண்களின் பங்களிப்பும் தேவையற்றதாக்கப்படுகிறது’’ என்கிறார் சிவகாமி ஐ.ஏ.எஸ்.

நான் படித்த ஒரு வாழ்வின் நிகழ்வு இது...

ஜமீலா நிஷாத் ஹைதராபாத்தின் உருது பெண்கவி. தந்தை ஓவியர். நன்றாக தபேலா வாசிப்பார். ஜமீலா நடனமாடுவார். ஆனால், அவரது எட்டாவது வயதில் ‘பெண்கள் ஆடக்கூடாது’ என்று அவரது தந்தையால் கால்கள் கட்டப்பட்டன.

தந்தையைப் போல ஓவியம் வரைவார். அவர் பணியாற்றிய ஓவியக்கல்லூரியில் ஜமீலா படிக்க நினைத்தபோது அவரது பன்னிரண்டாவது வயதில் கைகள் கட்டப்பட்டன. ‘பெண்கள் கல்லூரிக்குப் போகக்கூடாது. அங்கே பெண்களை நிர்வாண மாடல்களாக நிற்க வைத்து பையன்கள் வரைவார்கள். அவர்களோடு உன்னால் வரைய முடியாது’ என்று காரணம் சொன்னார் தந்தை. அங்கே வேறு சில பெண்கள் படிக்கத்தான் செய்தார்கள். பிறகு &

‘என்னைப் பல வண்ணங்களில்
கண்டிருக்கலாம் நீ
ஆனால் அவை &
வெறும் வண்ணங்கள்தான்;
நானல்ல’
என்று கவிதை எழுதத் தொடங்கினார் ஜமீலா.

பதினைந்து & பதினாறு வயதில் திருமண ஏற்பாடு. ஓவியரை அல்லது கவிஞரை மணக்க விரும்பினார். மீசை மீது அவருக்குக் கொள்ளைப் பிரியம். ஆனால், அவருக்குப் பார்த்த மணாளருக்கு மீசை இல்லை; தலையும் வழுக்கை. நல்லவர் என்பதை நம்பும்படி செய்தார்.

புகுந்த நாளிலிருந்தே மாமியாரோடு போராட்டம். கொழுந்தன்மார், நாத்தியார் யாருமே பேசுவதில்லை. கணவரைக் காதலித்தார்; நேசித்தார். நாள் முழுவதும் இசைமழையில் நனைந்தார்கள். அதன் பிறகு ஏழு வருடங்கள் வரை எதுவுமே எழுதவில்லை.

தேனிலவு நாட்களில் ஒரு நாள்... ‘‘விவாகரத்து வாங்கிக்கொள் ஜமீலா. திருமணம் என்றால் என்ன; வாழ்க்கை என்றால் என்ன என்றுதான் உனக்குப் புரிந்துவிட்டதே. ஒரு ஓவியர் துணைவராக வர வேண்டும் என்று விரும்புகிறாய்; நானே ஒரு ஓவியரைப் பார்த்துத் துணையாகத் தருகிறேன்’’ என்றார் கணவர். ‘‘வேண்டாம்; நான் இப்படியே வாழ விரும்புகிறேன்’’ என்றார் ஜமீலா.

தான் வாழ நினைத்த வாழ்க்கையை, தனது விருப்பத்தின்படி ஜமீலா வாழ்ந்தாரா என்கிற கேள்வி எழுகிறது. கடந்துபோன பருவத்தின் கண்ணீர்தான் அவரது காலடியில் பதிலாக விழுந்து கிடக்கிறது.

குடும்பம் என்பது இங்கே ஆண்களின் அதிகார விளையாட்டாகத்தான் இருக்கிறது. பெண்கள் அவர்களது கைகளில் மரப்பாச்சி பொம்மைகளாகவும் தலையாட்டும் பொம்மைகளாகவும் இருந்து, மறைந்து போகிறார்கள்.

பெண் விடுதலைக்கு ஆரம்பப்படிகளாக பாரதி தனது கட்டுரையில் பத்துக் கட்டளைகளை எழுதியிருக்கிறான்.

‘பெண்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தக்கூடாது. விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக்கூடாது. புருஷன் இறந்த பிறகு ஸ்த்ரீ மறுபடி விவாகம் செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்த்ரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும். பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷனோடு பேசக்கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும். தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்தியோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக்கூடாது’ என்றெல்லாம் சொல்லும் பாரதி, ‘பெண் உயராவிட்டால் ஆண் உயராது’ என்று அடித்துச் சொல்கிறான்.
கண்ணீரிலும் ஜென்னியைக் காதலித்த காரல் மார்க்ஸ்செல்லம்மாவின் தோளில் கைபோட்டு நடந்த பாரதி கமலாம்பிகையோடு கசிந்துருகிய திரு.வி.க.

ஆண்களும் பெண்களும் இவர்களின் கண்களால் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும்போதுதான் வாழ்வின் வட்டம் முழுமையடையும். இல்லையென்றால் வடிவமற்ற வாழ்க்கை வதைத்துக்கொண்டேதான் இருக்கும்.

திருவள்ளுவருக்கு ஸ்டிக்கர்;
தமிழருக்கு அல்வா!

‘சீட்லெஸ் திராட்சை
கார்ட்லெஸ் போன்
வயர்லெஸ் ரேடியோ
ஃபிலிம்லெஸ் கேமரா
ரிம்லெஸ் (மூக்குக்கண்ணாடி) ஃபிரேம்
போன்லெஸ் சிக்கன்

& இந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்திருப்பவை பாடபுத்தகம் இல்லா மாணவர்கள், பாடத்திட்டம் இல்லாப் பள்ளிக்கூடங்கள்’ என்று சமச்சீர்க்கல்வியைக் கொண்டுவரத் தயங்கும் தமிழக அரசைக் கண்டித்து, பேராசிரியர் தி.மு.அப்துல்காதர் எழுதிய கட்டுரையை வாசித்தேன். அவருக்கே உரிய ஆணித்தரமான வாதங்கள். உச்ச நீதிமன்றத்தில் இவரை வாதாட விட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

திருவள்ளுவரையும் திருக்குறளையும் சங்கப்பாடல் வரிகளையும் பச்சை ஸ்டிக்கர் போட்டு ஒட்டி மறைக்கும் பச்சைத் துரோகத்தை தமிழ் கூறும் நல்லுலகம் மௌனமாக, ஒரு சிறு கண்டனக்குரல் கூட எழுப்பாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏனென்று கேட்கிறார்.

ஆகஸ்ட் மாதம் 10ம் தேதிக்குள் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தருகிறார்களோ இல்லையோ, ஆக்ஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடி, கொடியேற்றி மிட்டாய் தருவார்கள். இதை மூன்றுவிதமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டு மாதம் புத்தகம் இல்லாமல் படித்து ஒத்துழைத்தற்காக மாணவர்களுக்குத் தரப்படும் இனிப்பு; அல்லது இனிமேல் மொத்தமாகப் படிக்கப் போவதற்காக அரசு தருகிற ‘இலவச குளுக்கோஸ்’; அல்லது அல்வா.

ஒப்பந்தம்

நம்மிருவருக்குமிடையே
ஓர் ஒப்பந்தம்
கொஞ்ச காலம்
நீ நானாகவும்
நான் நீயாகவும்
வாழவேண்டுமென.
ஒப்பந்தக் காலம்
முடிவடைந்த பொழுதொன்றில்
சந்தித்துக்கொண்டோம்
நீ நீயாகவும்
நான் நானாகவும்
 சுகிர்தராணி
(சலசலக்கும்)
பழநிபாரதி