ஒரு எஸ்பியின் டைரி



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

         சம்பவம் 1

புத்தாயிரம் ஆண்டின் தொடக்கத்தில் ஒருநாள். முக்கிய நகரத்தின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பரபரப்பு பற்றத் தொடங்கிய காலை நேரம்.

அங்கிருந்த வங்கியில் முகமுடி அணிந்த நால்வர் திடீரென நுழைகின்றனர். ஒருவன் கையில் துப்பாக்கி, மற்றவர்கள் கையில் கத்தி. வங்கியிலிருந்த வாடிக்கையாளர்களை மிரட்டி ஒருபக்கமாக அனுப்புகின்றனர். வங்கி ஊழியர்களை மிரட்டி மறுபக்கத்தில் அடைக்கின்றனர். கணக்காளரை தனியாக அழைத்து, பெட்டகத்தை திறக்கச் சொல்கின்றனர். ‘‘ஒரு சாவிதான் என்னிடம் உள்ளது. மற்றொரு சாவி மேலாளரிடம் இருக்கிறது. அவர் வந்து கொண்டிருக்கிறார்’’ என்று பயந்தபடி சொல்கிறார் அவர். அதை நம்ப மறுக்கும் மர்ம நபர்கள், ‘ஒரு சாவியைக் கொண்டு திற’ என்கிறார்கள். ‘‘ஒரு சாவியால் திறந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் மற்றொரு சாவியால் திறக்க வேண்டும். இல்லையென்றால் எச்சரிக்கை மணி அடிக்கும்’’ என்று கணக்காளர் உயிர் பயத்தில் உண்மையைச் சொல்லிப் பார்க்கிறார்.

அவர்கள் கேட்பதாக இல்லை. மிரட்டி பெட்டகத்தைத் திறக்க வைக்கிறார்கள். உடனே மறு சாவியைப் பயன்படுத்தாததால், எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. அதிர்ச்சியடைகின்றனர் கொள்ளையர்கள். ‘திட்டமிட்டு காட்டிக் கொடுத்து விட்டானே’ என்ற ஆத்திரத்தில், கணக்காளரை கத்தியால் குத்திக் கொல்கிறான் தலைவன் போல இருந்தவன்.

இதற்கு மேல் இருந்தால் ஆபத்து என அந்தக் கும்பல் தப்பி விடுகிறது. மர்ம நபர்கள் திட்டமிட்டபடி வங்கியில் கொள்ளை நடக்கவில்லை. திட்டமிடாத கொலை நடந்து விட்டது.
கடமைக்கும் கம்பீரத்துக்கும் பெயர் பெற்ற அதிகாரி அப்போதுதான் அங்கு பொறுப்பேற்றிருந்தார். உடனே குற்றவாளிகளைப் பிடித்து, கொள்ளைக் கும்பல் கொட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என 4 தனிப்படைகளை அமைக்கிறார். 

சம்பவம் 2

தென்மாவட்டத்தின் குக்கிராமம். செல்ல நாயுடன் அதிகாலையில் நடைப்பயிற்சி செல்கிறான் ஒரு சிறுவன். ஆற்றில் குளித்து விட்டு, எதிரில் வருகிறார் ஒரு வாலிபர். வாலிபரைப் பார்த்து நாய் குரைக்கிறது. ‘எங்க நாய் உங்களைப் பார்த்து குரைக்குதே... அப்ப நீங்க திருடனா?’ என்று சாதாரணமாகத்தான் கேட்கிறான் அந்தச் சிறுவன். அவனை முறைத்துப் பார்த்தபடி, அருகில் உள்ள பெட்டிக்கடைக்குச் செல்கிறான் வாலிபன். கடையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கி, நாயை அழைத்து ஒரு பிஸ்கெட்டை தூக்கி மேலே போடுகிறான். தாவி பிஸ்கெட்டை கவ்வுகிறது அந்த நாய். அப்போது கண்களில் தெறிக்கும் குரூரத்துடன், நாயின் கழுத்தை இறுக்குகிறான் அந்த வாலிபன். சில நொடிகள் அவனைப் பார்த்து குரைத்த பாவத்துக்கு, துடித்துச் சாகிறது நாய். நாயின் மூச்சு அடங்கிய பிறகு, அதன் வாயில் இருந்த பிஸ்கெட்டை கையால் எடுத்து வெளியில் போடுகிறான். சிறுவனின் வீட்டு முன் நாயை தூக்கி எறிந்து விட்டு, கோபத்துடன் விரைகிறான்.

அதிர்ச்சியில் அறையப்பட்ட சிறுவன், ஓடிச்சென்று தந்தையின் மடியில் விழுகிறான். அழுதபடி நாய்க்கு நேர்ந்த கொடூரத்தைச் சொல்கிறான். அவர் முக்கிய பிரமுகராக இருந்தும், இது குறித்து புகார் செய்யாமல் அமைதியாக இருந்து விடுகிறார்.

சம்பவம் 3

மற்றொரு கிராமத்தில் ஒரு விவசாயியின் வீட்டில் தங்கியிருக்கிறார் ஒரு மர்ம நபர். ‘‘பல ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறேன். யாரும் எனக்கு அடைக்கலம் தரவில்லை. நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் துணிந்து எனக்குப் புகலிடம் கொடுத்துள்ளாய்... உனக்கு என்ன உதவி வேண்டும்’’ என்று கேட்கிறார்.

‘‘ரொம்ப நாளாக பக்கத்து வீட்டுக்காரன் தொல்லை பண்ணிக் கொண்டிருக்கிறான். அவனைக் கொஞ்சம் தட்டிவைக்க வேண்டும்’’ என்கிறார் விவசாயி.

அடுத்த நாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி போட்ட அதிர்ச்சிக் குரல் தெருவையே எழுப்பிவிட்டது. அவர் அருகில் படுத்திருந்த கணவன் தலையில்லாத முண்டமாகக் கிடக்க... வீடு முழுவதும் ரத்தம். அலறித் துடித்தபடி வெளியில் ஓடி வந்தால்... கணவனின் தலை, தெரு ஓரமாக இருந்த குடிநீர்க் குழாய் கட்டையில் வைக்கப்பட்டிருக்கிறது.
மர்ம நபரிடம் அவனைப் பற்றி புகார் சொன்ன பக்கத்து வீட்டு விவசாயியும் விக்கித்து நிற்கிறார்... ‘‘பாண்டிய மன்னன் கட்டளை போல ஆகிவிட்டதே... தட்டி வை என்றால் வெட்டி வைத்து விட்டானே’’ என்று திருடனுக்கு தேள் கொட்டியது போல ஆயிற்று அவருக்கு. இது குறித்து புகார் கொடுத்தும், சாட்சி சொல்ல யாரும் முன்வராததால், வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை.

சம்பவம் 4

தென்மாவட்டத்தின் மற்றொரு கிராமத்தில் இருக்கும் ஒருவனுக்கு நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு. விஷயம் தெரிந்த நண்பன் தட்டிக் கேட்கிறான். ஆனாலும், உறவு தொடர்கிறது. ஒரு இரவில், வெளியில் கட்டிலில் நண்பன் படுத்திருக்க, அவன் மனைவியுடன் கள்ளக் காதலன் பொழுதைக் கழிக்கிறான். ‘‘என் கணவருக்கு இது பிடிக்கவில்லை. தயவுசெய்து வரவேண்டாம்’’ என்று அவள் கெஞ்சுகிறாள். ‘‘இனி அவனால் எப்போதும் பிரச்னை இருக்காது. தைரியமாகத் தூங்கு’’ என்று கொஞ்சுகிறான் கள்ளக் காதலன். காலையில் பார்த்தால், கட்டிலில் படுத்திருந்த கணவன் நெஞ்சினில் ஈட்டி குத்திய நிலையில் பிணமாகக் கிடக்கிறான். ‘கள்ளக் காதலன்தான் செய்திருப்பான்’ என்று தெரிந்தும், மனைவி மவுனமாகிறாள். வழக்கமான கொலை வழக்காகிறது அந்த துரோக மரணம்.

குரூரமாகவும் திட்டமிட்டும் செய்யப்பட்ட வங்கிக் கொள்ளை, குக்கிராமக் கொலைகள் என இந்நான்கு நிகழ்வுகள் குறித்தும் போலீசாருக்குத் துப்பு கிடைக்கவில்லை. இதுபோல இன்னும் சில கொலைகளும் கொள்ளைகளும் தொடரவே, ஒட்டுமொத்த காவல்துறையே திணறும் சூழ்நிலை. இவை வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்திருந்தாலும், இவற்றுக்கிடையில் ஒரு தொடர்பு இருப்பதை அப்போது யாரும் அறியவில்லை. தனித்தனி வழக்குகளாக விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்படி என்ன இந்த வழக்குகளுக்குத் தொடர்பு?  
(பெயர்களும் ஊர்களும் மாற்றப்பட்டுள்ளன...)
துப்பறிவோம்!
அ.கலியமூர்த்தி