சென்னையைச் சேர்ந்த கனிமொழியின் வீடு ஓவியக் கண்காட்சிக்கூடம் போலவே இருக்கிறது. திரும்பின பக்கமெல்லாம் ஓவியங்கள்!
‘‘பத்து வருஷமா ஓவியத்துறைல இருக்கேன். 30க்கும் மேலான ஓவியங்கள் வரையத் தெரியும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு ஓவியம் பிரபலம். அப்படி எல்லா மாநிலங்களோட ஸ்பெஷல் ஓவியங்களையும் வரைவேன். இது தஞ்சாவூர் ஓவியம்... இது மதுபானி... இது வொர்லி... இது ரிவர்ஸ் கிளாஸ் பெயின்ட்டிங்...’’ என ஒவ்வொன்றையும் காட்டி விளக்குகிறார். அத்தனைக்கு மத்தியிலும் தனித்து நிற்கிறது ரேடியம் பெயின்ட்டிங்.
‘‘ரேடியம் பெயின்ட்டிங் குறிப்பா எந்த மாநிலத்துலயும் ஸ்பெஷல்னு சொல்றதுக்கில்லை. சமீபகாலமா மக்கள் மத்தில ரொம்ப பிரபலமா இருக்கு. அன்பளிப்பா கொடுக்க, பலரும் ரேடியம் பெயின்ட்டிங்கைத்தான் விரும்பறாங்க’’ என்கிற கனிமொழி, கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.
என்னென்ன தேவை?‘‘கார்ட்போர்ட், வெல்வெட் துணி, பிரஷ், ஃபேப்ரிக் பெயின்ட், கார்பன் பேப்பர், பேனா, ரேடியம்... பொருட்களுக்கு 300 ரூபாயும், ஃபிரேம் போட 500 ரூபாயும் போதும்.’’
என்ன ஸ்பெஷல்?‘‘ரேடியம் தான் ஸ்பெஷல். ரேடியத்துக்கு எப்பவுமே பளபளக்கிற தன்மை உண்டு. வெளிச்சம் கம்மியான இடங்கள்லயும் பளீர்னு தெரியும். வெல்வெட் துணில, ஃபேப்ரிக் அல்லது போஸ்டர் கலர்களோட ரேடியம் கலந்து போடறப்ப, இந்த பெயின்ட்டிங்கோட அழகு பல மடங்கு கூடும். சாமிப் படங்கள், இயற்கைக் காட்சிகள், கார்ட்டூன்னு எதை வேணாலும் வரைய முடியும்ங்கிறது இன்னொரு சிறப்பு.’’
விற்பனை வாய்ப்பு? லாபம்?‘‘ஒரு படத்தை முழுசா முடிக்க 4 நாளாகும். 16க்கு 20 இன்ச் அளவுள்ள ஒரு ஓவியத்துக்கு 800 ரூபாய் செலவானா, அதை 3,500 ரூபாய் வரைக்கும் தாராளமா விற்க முடியும். குறைந்தபட்சம் 500 ரூபாய்லேர்ந்து அளவைப் பொறுத்து விலையை அதிகரிக்கலாம். பிறந்த நாள், கிரகப்பிரவேசம், திருமணம்னு எந்த சந்தர்ப்பத்துக்கும் அன்பளிப்பா தரலாம். ஆர்ட் கேலரி, பரிசுப்பொருள் விற்பனைக் கடைகள், சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும் இடங்கள்ல விற்பனைக்குக் கொடுக்கலாம். 50 சதவீதத்துக்கும் மேலான லாபம் நிச்சயம்.’’
பயிற்சி?‘‘4 நாள் பயிற்சிக்குக் கட்டணம் ஆயிரம் ரூபாய்.’’
ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்