கேரள சினிமாவிலும் புகழடைந்த கமல்ஹாசன் கடைசியாக மலையாளத்தில் நடித்த படம் ‘டெய்ஸி’. அதற்குப்பின் 21 வருடங்கள் கழித்து சாஜி சுரேந்திரன் இயக்கத்தில் ‘4 ஃபிரண்ட்ஸ்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதில் கமல் நடிக்க நேர்ந்த கதை கனமானது.
படத்தின் கதையும் கனமானதுதான். புற்றுநோய் பாதித்த நான்கு இளைஞர்களைப் பற்றியது கதை. அந்த நான்குபேரில் ஒரு யுவதியும் உண்டு. அந்த வேடங்களில் ஜெயராம், ஜெயசூர்யா, குஞ்சாக்கோ போபன் நடிக்க, மீரா ஜாஸ்மினும் இவர்களுடன் இணைகிறார். பெரும்பணக்காரரான ஜெயராமையும், ரவுடியான ஜெயசூர்யாவையும், இசைக்கலைஞரான போபனையும், சித்தி கொடுமையால் பாதிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவி மீரா ஜாஸ்மினையும் இணைக்கிறது புற்றுநோய்.
வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கத் துடிக்கும் இளமைப்பருவத்தில் கேன்சர் ஒரு ஸ்பீட் பிரேக்கரைப் போட, அங்கே அவர்களுக்குத் தேவைப்படுகிறது... வாழ்க்கையை எளிதாக எதிர்கொள்ள ஒரு உந்துசக்தி. அந்த சக்தி கொடுக்கும் வேடத்துக்கு ஒரு சக்திமான் தேவைப்பட, தன் வாழ்க்கையிலேயே அப்படி ஒரு நட்பு வட்டத்தை எதிர்கொண்ட கமலைவிடவும் ஒரு சாய்ஸ் இயக்குநர் சாஜி சுரேந்திரனுக்குக் கிடைக்கவில்லை.

அதற்காக கமலிடம் ஜெயராம் பேச, இயக்குநரிடம் கதையைக் கேட்ட கமல் நெகிழ்ந்துபோனார். ‘நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் சினிமாவின் தேவை’ என்ற கருத்தைச் சொன்ன கமல், ‘இதில் நான் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்க, தேவையைச் சொல்லியிருக்கிறார் சாஜி. அதன்படி கமல் கமலாகவே தோன்றி தன் வாழ்க்கையிலேயே சந்தித்த புற்றுநோயாளிகளைப் பற்றிப் பேசியிருக்கிறார். இருபது வருடங்கள் புற்றுநோயுடன் போராடி இறந்துபோன ஸ்ரீவித்யாவிலிருந்து, புற்றுநோயை எதிர்கொண்டு தன்னுடனேயே வாழ்ந்து வரும் கௌதமி வரை உருக்கமாகச் சொல்லி, புற்றுநோயுடன் போராடி வாழ வேண்டியதன் அவசியத்தைச் சொல்லியிருக்கிறார் கமல்.
வெறும் வசனங்களாக இல்லாமல், வாழ்க்கையின் நிதர்சனத்தைக் கூறவே அந்தப்படத்தில் கமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். கமலின் அந்த அன்பை விளக்க இப்போது அதே படத்தை ‘அன்புள்ள கமல்’ என்று தலைப்பிட்டு பி.எஸ்.ஆர். பிலிம் பேக்டரி தமிழில் வெளியிடுகிறார்கள்.

வதை மிகுந்த வாழ்க்கை அமையப் பெற்ற புற்றுநோயாளிகள், மிச்சமிருக்கும் வாழ்க்கையை வலியில்லாமல் வாழச்சொல்லும் கமலின் பேச்சு, மேற்படி நால்வரையும் துக்கத்தைத் தூக்கிப்போட்டு வாழ வழி செய்கிறது. அதன்படி வாழ்வை நேர்மறையாக எதிர்கொள்ள விரும்பும் நால்வரும், போபனின் காதலியுடன் அவரைச் சேர்த்துவைக்க மலேசியா பயணப்படுவதாக போகிறது கதை.
இந்தப் படத்தின் கதையை 2007ல் வெளிவந்த ‘தி பக்கெட் லிஸ்ட்’ என்கிற அமெரிக்கப்படத்தின் இன்ஸ்பிரேஷனைக் கொண்டு உருவாக்கியிருந்தாலும், இந்தியப் படங்களுக்கேயான சென்டிமென்டுகளுடன் படத்தை இயக்கியிருக்கிறார் சாஜி. இதில் நடித்துக்கொடுத்த கமல் எவ்வளவு சம்பளம் பெற்றிருப்பார் என்று நினைக்கிறீர்கள்..? சமூக செய்தி சொல்லும் படமென்பதால் ஒரு பைசா பெறாமல் இலவசமாகவே நடித்துக் கொடுத்திருக்கிறார் கமல்.
‘அன்புள்ள கமல்’ என்கிற படத்தின் தலைப்பு நியாயமானதுதான்..!
வேணுஜி