நான் ஜோதிடத்தில அவ்வளவு நம்பிக்கை உள்ளவன் இல்லை. ஒருதடவை என் ஜாதகத்தைப் பார்த்த ஜோசியர் ஒருத்தர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ‘‘உங்களுக்கு நேரம் சரியில்லை. இந்த நேரம் கிரகங்கள் உங்களை ஜெயிலுக்கு அனுப்பி வைக்கிற நிலையில இருக்கு. ஜாக்கிரதையா இருங்க...’ன்னார். எனக்கு சிரிப்புதான் வந்தது. ‘‘நான் எந்த தப்புதண்டாவுக்கும் போகிற ஆள் இல்லை...’’ன்னு சொல்லிட்டு அதை அப்படியே மறந்தும் போனேன்.
அடுத்து நான் புகைப்படமெடுக்க ஒத்துக்கிட்ட படம், ‘மனிதனின் மறுபக்கம்’. ஒரு தூக்கு தண்டனைக் கைதியோட சூழ்நிலையையும், நியாயத்தையும் சொல்ற படம். சிவகுமார் அதில தூக்கு தண்டனைக் கைதியா அற்புதமா நடிச்சிருந்தார். அதுக்கான ஷூட்டிங்கை பெங்களூர் ஜெயில்ல எடுத்தார் டைரக்டர் கே.ரங்கராஜ். சிரமப்பட்டு அனுமதி வாங்கினாங்க. சினிமா ஷூட்டிங் நடக்கிற இடத்தில நடிக, நடிகையர்களோட டெக்னீஷியன்கள், புரொடக்ஷன் ஆட்கள்னு நிறைய பேர் இருப்பாங்க. இந்தக் கூட்டத்தோட கலந்து எந்தக் கைதியும் தப்பிப் போயிடக்கூடாதுன்னு ஒரு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.
அதன்படி யூனிட் சம்பந்தப்பட்ட எல்லா ஆட்களுக்கும் சிறைச் சாலைக்குள்ள போக, வர டோக்கன் தந்திருந்தாங்க. அந்த டோக்கனைக் காண்பிச்சுட்டு என்ட்ரி போட்டுட்டு உள்ளே போய், சாயங்காலம் ஷூட்டிங் முடிஞ்சு வெளியே போகும்போதும் அப்படியே என்ட்ரி போட்டுட்டுப் போகணும். இப்படியே பல நாட்கள் போச்சு. ஷூட்டிங்கோட கடைசி நாள். கொஞ்சம் லேட்டானாலும் எல்லா காட்சிகளும் எடுத்து முடிச்சுட்டாங்க. அவங்க முடிச்சபிறகு ஸ்டில் எடுக்கவேண்டிய வேலை இருந்ததால நான் கடைசியா கிளம்ப வேண்டியிருந்தது. என்னோட கேமரா, ஸ்டாண்ட், உபகரணங்களை எடுத்துட்டு கிளம்பியப்ப யூனிட்டைச் சேர்ந்த எல்லாருமே போயிருந்தாங்க. வெளி கேட்டுக்கு வந்ததும் வழக்கம்போல என்னோட டோக்கனை சென்ட்ரி கேட்டார். பாக்கெட்ல கைவிட்ட எனக்கு அதிர்ச்சி. டோக்கனைக் காணலை.
என்னையும், என் கேமராவையும் பார்த்தால் நான் ஸ்டில் போட்டோகிராபர்தான்னு தெரிஞ்சாலும், விதிகளை மீறி என்னை வெளியே அனுப்ப அவரால முடியலை. அதோட, இப்ப மாதிரி அப்ப எல்லார் கையிலும் செல்போன் வசதியும் இல்லை. அதனால சிறைச்சாலை போன்லேர்ந்து சினிமா கம்பெனிக்கு போன் போட்டு அங்கிருந்து ஆட்களையும் எனக்கான சான்றுகளையும் கொண்டு வரச்சொன்னாங்க. இதுக்கெல்லாம் பலமணி நேரம் பிடிச்சதுல கிட்டத்தட்ட இரவெல்லாம் நான் சிறையிலேயேதான் கழிச்சேன்.
அப்பதான் ஜோசியர் சொன்னது நினைவுக்கு வந்தது. தப்பு பண்ணாட்டியும் ஜெயில்ல மாட்டி சூழ்நிலைக் கைதியா ஆனதை நினைச்சப்ப, இந்த ஜெயிலுக்குள்ளேயும் அப்படி விதி வசத்தால யாரும் அகப்பட்டிருப்பாங்களோங்கிற சிந்தனையோட வீடு திரும்பினேன்.
தொகுப்பு: வேணுஜி
நேஷனல்செல்லையா