முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் தூக்கு மேடை நோக்கிய பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இம்மூவருக்காக தமிழகம் எங்கும் ஆதரவுக் கரங்கள் நீள, தன் குடும்பத்தில் எஞ்சியிருக்கும் நான்காவது நபரையும் வெளியில் கொண்டுவர போராடிக் கொண்டிருக்கிறார் பாக்யநாதன். முருகனின் மனைவி நளினியின் சகோதரரும், ஆரம்பத்தில் இவ்வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் ஒருவருமான பாக்யநாதன், சென்னையில் மனநல ஆலோசகராக இருக்கிறார். ராஜீவ் படுகொலை வழக்கு தொடர்பான விவாதங்கள் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் பாக்யநாதன் முதன்முதலாக மனம் திறக்கிறார்...
‘‘பூர்வீகம் தெற்கே திருநெல்வேலிப் பக்கம். அப்பா காவல் துறையில இருந்தார். அம்மா நர்ஸ். நளினி போக எனக்கு இன்னொரு தங்கச்சியும் இருக்காங்க. மனசாட்சிக்குப் பயப்படற சாதாரண மிடில்கிளாஸ் குடும்பம்தான். அப்பாவோட பணிநிமித்தமா சென்னைக்கு வந்தோம். ‘பிள்ளைகளை நல்லா படிக்க வச்சு, அரசு உத்யோகத்துக்குக் கொண்டு வரணும்’ங்கிறதுதான் அம்மாவோட நோக்கமா இருந்துச்சு. ஆனா, சூழல் எப்படி எகிறி அடிச்சது பாருங்க! ராஜீவ் காந்தி கொலை வழக்குல இந்தக் குடும்பத்துல இருந்துதான் நாலு பேருக்குத் தூக்குத் தண்டனை. பூந்தமல்லி நீதிமன்றம் மரண தண்டனை வழங்குன 26 பேர்ல எங்க குடும்பத்துல இருந்து மட்டும் நளினி, முருகன், நான், என் அம்மான்னு நாலு பேர்.

பழைய துயர நினைவுகளைத் திரும்பிப் பார்க்க விருப்பமில்லதான். ஆனா சில விஷயங்களை, ‘யாராவது கூப்பிட்டுக் கேக்க மாட்டாங்களா’ன்னு கத்தத் தோணும். அந்த விஷயங்களையாவது சொல்லணுமில்லையா? எனக்கும் அம்மாவுக்கும் தூக்கு ரத்தான சமயத்துல சுப்ரீம் கோர்ட்டுல சொன்ன விஷயங்கள்தான் அவை...’’ & இருக்கையின் விளிம்புக்கு வந்தவர், வாக்குமூலம் போல் தொடர்கிறார்...
‘‘படிக்கிறப்பவே தமிழ், இனம்னு ஏற்பட்ட பிடிப்புல நான் விடுதலைப்புலிகளை நேசிச்சது உண்மைதான். அவங்களோட கனவு நனவாகணும்னு எனக்கும் இருந்திச்சு ஆசை. எனக்கு மட்டுமல்ல... என் சக கால இளைஞர்கள் பலருக்குமே அப்படியொரு ஆசை அப்ப இருந்தது. உணர்வுரீதியானது அது. ஏன், இந்திய அரசாங்கமே அவங்களுக்கு சப்போர்ட் பண்ணலையா? புலிகள் ஒரு நம்பிக்கையில இங்க வந்து சில உதவிகளைக் கேட்டாங்க. இங்க எத்தனையோ பேர் அதைச் செஞ்சும் கொடுத்தாங்க. அப்படியொரு உதவியாத்தான் தமிழ்நாட்டுக்குப் படிக்கணும்னு வந்த முருகனுக்கு வீட்டுல அடைக்கலம் தந்தோம். அவர் பிறந்தது இலங்கைங்கிறதால என்னைவிட அதிகளவு விடுதலைப்புலிகள் மேல பாசத்துல இருந்தார். என் அக்காவுக்கும் அவருக்கும் ஏற்பட்ட பழக்கத்துல, அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. முருகனோட நண்பர்கள்னு சிலரோட தொடர்பும் எனக்குக் கிடைச்சது. அவங்க நாட்டுல சுதந்திரம் கேட்டுப் போராடுறதப் பத்தி, இங்க நாங்க கூடி விவாதிக்கிறது எனக்கு ஒண்ணும் தப்பாப் படலை.
ராஜீவ் கொலை விவகாரத்துல என்ன நடந்திச்சு, நடக்குதுன்னு தெரியறதுக்குள்ளயே நாங்க குடும்பத்தோட கைது பண்ணப்பட்டோம். எனக்கு மட்டுமில்ல... என் குடும்பத்துலகூட இதுபத்தி யாருக்குமே எதுவுமே தெரியாதுங்கிறதுதான் நிஜம். சிவராசன், சுபா, தனுங்கிற மூணு பேரை முக்கியக் குற்றவாளிகளா அறிவிச்சாங்க. அவங்களோட தொடர்புல இருந்திருக்கார் முருகன். அதுக்காக முருகனை வழக்குல சேர்த்தாங்க. அவருக்கு அடைக்கலம் தந்தோம்னு நாங்க. கைதுகள் நீண்டுக்கிட்டே போனது இப்படித்தான்’’ என்கிற பாக்யநாதன் பிறகு நடந்தவற்றையும் விவரிக்கிறார்...
‘‘உண்மையைச் சொன்னா நீதி கிடைக்கும்னு நம்புனது வீண்போகலை. சி.பி.ஐ. தாக்கல் பண்ணுன ஒரு ஆவணத்துலயே ‘சிவராசன், சுபா, தனு தவிர மற்ற யாருக்கும் இந்தக் கொலையில நேரடித் தொடர்பு கிடையாது’ன்னு பட்டவர்த்தனமாச் சொல்லிட, அம்மாவும் நானும் அன்னிக்கு தூக்குல இருந்து தப்பிச்சோம். முருகனோட மனைவிங்கிறதால நளினியால அப்ப விடுபட முடியலை.
91ம் ஆண்டு ஏற்பட்ட மன உளைச்சல் எட்டு வருஷம் கழிச்சு அப்ப ஓரளவு குறைஞ்சது. மண்ணோட மண்ணா இடிஞ்சு போன வீட்டைப் புதுசாக் கட்டற மாதிரித்தான் அதுக்குப்பிறகு வாழ்க்கையையும் ஆரம்பிக்க வேண்டியிருந்திச்சு. மூவாயிரம் ரூபாயோட ஜெயிலை விட்டு வெளியில வந்தவனை ஆதரிக்க உறவுகள், நட்புகள்னு ஒருத்தர் இல்லை. சொந்த ஊருக்குப் போக முடியலை. ரத்த சொந்தங்கள்ல ஒருத்தர்கூட பேசறதில்லை. நாங்க உதவிகேட்டு வந்துடுவமோன்னு பயந்துக்கிட்டு பல பேர் வீட்டையே மாத்திக்கிட்டுப் போயிட்டாங்க. இன்னிவரைக்கும் யாரும் ஒட்டலை. ஜெயிலுக்குப் போறதையே அவமானமா நினைக்கிற சமூகத்தையும் குத்தம் சொல்ல முடியாதில்லையா? வாடகைக்கு வீடு கிடைக்காம அலைஞ்சிருக்கோம். வேலைதேடிப் போன இடங்கள்ல வேலை மறுக்கப்பட்டுச்சு. எல்லாத்தையும் ஒத்தையாளா நின்னுதான் நம்பிக்கையோட எதிர்கொண்டேன்.
டிகிரி முடிச்சிருந்த நான், ராத்திரி நேரங்கள்ல பாலம் கட்டுற வேலைக்கெல்லாம் போனேன். அஞ்சல் வழியில படிப்பு, கல்யாணம்னு அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறிக்கிட்டே குடும்பத்தையும் கவனிச்சேன். இன்னொருபுறம் ஜெயில்ல இருக்கிற நளினியையும் முருகனையும் மத்தவங்களையும் தூக்குல இருந்து காப்பாத்த வேண்டிய அத்தனை முயற்சிகளும் தொடர்ந்திட்டு இருந்துச்சு. உதவுறதுக்கு எத்தனையோ பேர் முன்வந்ததுல அந்தப் பணி கொஞ்சம் சுலபமாச்சு. கொஞ்ச நாள்ல நளினியைக் கருணை காட்டி தூக்குல இருந்து விட்டுட்டாங்க. அதுலகூட எங்களால முழுசா சந்தோஷப்பட முடியலை. என்னை மாதிரியே அப்பவே முழுசா வழக்குல இருந்து வெளியில வரவேண்டியவங்கதான் அவங்க. என்னங்க சட்டம்? ராஜீவைக் கொலை பண்ண முருகன் ஸ்கெட்ச் போட்டபோது இவங்க பக்கத்துல இருந்து ஐடியா கொடுத்த மாதிரியில்ல இன்ன வரைக்கும் வச்சிட்டிருக்காங்க!
இப்ப தூக்குமேடையில நிக்கிற மூணு பேருக்குமேகூட ‘நேரடியா கொலையில சம்பந்தம் இருக்கு’ங்கிறதைக் காட்டற எந்தவொரு ஆவணமும் கிடையாது. கருணை மனுவை அனுப்பிட்டு காத்திருக்கிறவங்களுக்கு ‘என்ன பதில் கிடைக்குமோ’ன்னு ஒவ்வொரு நொடியும் மரண பயம்தான். அப்படி இவங்க அனுபவிச்ச நொடிகள் போதாதா சார்?’’ என்கிறார் பாக்யநாதன்.
பாக்யநாதனின் தாயார் பத்மா, ‘‘ஆதரவு தெரிவிக்கிற அத்தனை பேருக்கும் நாங்க ஒவ்வொருத்தரும் கடமைப்பட்டிருக்கோம். என் மகள், மருமகன்கூட அந்த மத்த ரெண்டு பேரும் சேர்ந்து வெளியில வர்ற நாளைத்தான் எதிர்நோக்கிட்டிருக்கேன். அந்த நாள் நிச்சயமா வரும்னு நம்பிக்கை இருக்குப்பா’’ என்கிறார்.
அய்யனார் ராஜன்
படங்கள்: புதூர் சரவணன்