இதுவரை கிரிக்கெட் விளையாடியவர்களைப் பற்றியும், கிரிக்கெட்டைப் பார்க்கப் போனவர்களைப் பற்றியும் கதை சொன்ன இயக்குநர் வெங்கட்பிரபு, இந்தமுறை கிரிக்கெட்டின் பின்னணியில் பெரும்பணம் புழங்கும் இன்னொரு ஆட்டத்தைப் பற்றிக் கதை சொல்லியிருக்கிறார். strictly no ryules என்று அவர் அறிவித்துவிடும் அந்த ஆட்டத்தின் நாயகனாக அஜித்குமார் பங்கேற்றிருப்பதும், அது அவருக்கான 50வது படமாக இருப்பதும் ஹைலைட்கள்.
இதுவரை தமிழில் எந்த உச்ச நட்சத்திரமும் இதில் அஜித் ஏற்றிருப்பதைப் போன்ற வேடத்தில் நடித்ததில்லை எனலாம். படம் முழுக்க பெரும் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் பேராசைக்காரனாக வரும் அவர், தன் பாத்திரத்தின் தன்மைக்கான நியாயத்தைச் சொல்லிக்கொண்டிருக்காமல், தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருப்பதற்கு ‘ஹேட்ஸ் ஆஃப்..!’ முன்பாதியில் இயல்பான தன்மையுள்ள மனிதனைப்போல் கொஞ்சம் பொய், நிறைய காதல் என்று வந்து, ஒரு கட்டத்தில் அவரது சுயரூபம் தெரியும்போது மிரட்டலாக இருக்கிறது. காதலுக்கும், நட்புக்கும் கூட அவர் அகராதியில் வேறு அர்த்தம் என்பது புரியும் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கே புதுசு.
பாதி நரைத்த தலையுடனும், வெள்ளிமுடிகள் தெரியும் வெற்று மார்புடனும் நடித்திருப்பதும், பாலிவுட் உள்பட எந்த ஹீரோவுக்கும் வராத உச்சபட்ச ‘தில்’. அவர் பேசும், ‘‘எவ்வளவு நாள்தான் நான் நல்லவனாவே நடிக்கிறது..?’’ என்ற வசனம் படத்தில் த்ரிஷாவை நினைத்துப் பேசுவதாக எழுதப்பட்டிருந்தாலும் அவருக்காகவே எழுதப்பட்டது போலாகி தியேட்டரில் கைதட்டல் காதைப் பிளக்கிறது. ‘‘உங்க வயசு என்ன..?’’ என்று த்ரிஷாவின் அப்பா ஜெயப்பிரகாஷ் அஜித்தைக் கேட்பதற்கு த்ரிஷா பதற, எந்தப் பதற்றமும் இல்லாமல், ‘‘இந்த மே வந்தா நாற்பது..!’’ என்று அஜித் பேசுவது ‘டை’ அடித்து வயதைக் குறைத்துக்கொள்ளும் ஹீரோக்களுக்கெல்லாம் சாட்‘டை’..! ‘ஹேங் ஓவரி’ல் அவருக்கு வரும் ‘தல’வலியைக் கூட ரசிக்க முடிகிறது.
அஜித்தின் திட்டம் புரியாமல் மலங்க விழிக்கும் மான் விழிகளுடன் அவரையே உலகமாக நினைத்துச் சுற்றிவரும் த்ரிஷாவின் கேரக்டர் சிறியது என்றாலும் சீரியது. அஜித்தின் முத்தத்துக்காகக் கண்களை மூடிக் காத்திருக்கும் அழகிலும், கண்ணெதிரே காதல் சுக்குநூறாகிப்போக உடைந்து நிற்கும் அப்பாவித்தனத்திலும் மனதில் பதிகிறார்.

இன்னும் ஒரு அதிசயிக்கத்தக்க வேடத்தில் ஆக்ஷன்கிங் அர்ஜுன். கிரிக்கெட் சூதாட்டத்தில் புக்கிகளிடம் கைமாறும் கோடிக்கணக்கான பணத்தையும், கைமாற்றும் கூட்டத்தையும் பிடிக்கவரும் போலீஸ் அதிகாரியான அவருக்கு, அந்தப் பணத்தைத் தேட்டைபோடும் கும்பலொன்றையும் பிடிக்க நேரும் சவால் எதிர்பாராதது. இன்னொரு ஹீரோ நடிக்கும் படத்தில் தன் இருப்பையும் காட்டி அதில் பாராட்டையும் அறுவடை செய்துவிடுகிறார் அர்ஜுன்.
வில்லனுக்கு ஏற்ற வில்லியாக வரும் லக்ஷ்மி ராய், அட்டகாச கிளாமராய்! உடைகள் உறுத்தாத உடலழகுடன் அவர் வரும் காட்சிகள் கண்களுக்கு ட்ரீட். எத்தனாக இருந்தும் ஏமாறும் ஜெயப்பிரகாஷின் நடிப்பும் நன்று. அஜித்தின் கூட்டாளிகளாக வரும் நான்கு இளைஞர்களில் பிரேம்ஜிக்கு அதிகமான வாய்ப்பு. தனியொரு காமெடியனாக வரும் அவர் இடம்பெறும் காட்சிகளெல்லாம் தியேட்டர் அமளிதுமளிப்படுகிறது. நடிப்பில் நன்றாகத் தேறியிருக்கிறார் வைபவ். மகத் ராகவேந்திராவும், அஸ்வினும் புதுமுகங்கள் என்பதை நம்ப முடியவில்லை. சிறிய வேடம் என்றாலும் அரவிந்த் ஆகாஷ் நிறைவாகச் செய்திருக்கிறார். நல்ல போலீஸாக இருந்தும் சுப்புவின் முடிவு ‘ப்ச்’.
எதிர்பாராத கதையில் எதிர்பாராத கதாபாத்திரங்களை எதிர்பாராத நட்சத்திரங்களை வைத்துத் தந்திருக்கும் இயக்குநர் வெங்கட்பிரபுவின் துணிச்சல் அசாத்தியமானது. சின்னச் சின்ன கதாபாத்திரங்களுக்குக் கூட ஆன்ட்ரியா, அஞ்சலி என்று முகம் தெரிந்த நடிகைகளைப் பயன்படுத்தி பாலிவுட் நாகரிகத்தை இங்கும் சாத்தியப்படுத்தியிருக்கிறார். அவர் படமென்றாலே பார்ட்டிகளும், பாட்டில் ஓபன்களும் கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும், நாகரிக இளைஞர்கள் அதில் கிறங்கித்தான் போகிறார்கள்.
சக்தி சரவணனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு கூலர்களை மாட்டிவிட்டிருக்கிறது. பேசாத இடங்களில் படத்தின் வசனங்களாக மாறுகிறது யுவனின் பின்னணி இசை. துள்ள வைக்கும் பாடல்களின் இசையில் சிக்ஸர் அடித்திருக்கிறார் அவர்.
மங்காத்தா - ஜாக்பாட்..!
குங்குமம் விமர்சனக்குழு