‘‘என்னமோ ஏதோ... என்னமோ ஏதோ... காரும் விடுது புகைய, பஸ்சும் விடுது புகைய’’ என்று ‘கோ’ பாடலுக்குள் கொஞ்சம் மசாலா, உப்பு, காரமெல்லாம் சேர்த்து காற்றில் கமகமக்க விட்டார் நடிகர் விவேக். ‘மரம் வளர்க்க’ சேலம் மஹா இன்ஜினியரிங் காலேஜுக்கு வந்த அவர் காதுக்கு டஜன் கணக்கா பிளேடுகளை வச்சிட்டு பொண்ணுங்க காத்திருக்க, அவரோ நிகழ்ச்சி முடிந்ததும் பறந்துவிட்டார். ஆஹா... பிளேடை கையில் எடுத்துட்டா நம்ம பொண்ணுங்க ரத்தம் பார்க்காம வைக்க மாட்டாங்களாம். கடைசியில் அவர்களது பிளேடுக்கு பலிகடா ஆனது நாமதான். அவனவன் பிளேட போட்டு பிக்பாக்கெட் அடிச்சித்தான் பார்த்திருக்கோம். இங்கே ரத்த தானம் பண்ண வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம்!
‘‘தமிழ்நாட்ல இவ்வளவு விலைவாசி உயர்வுலயும் டென்ஷன் மறந்து சிரிக்க வச்சு லைஃப் டைமை அதிகரிக்கிறதே நம்ம காமெடி ஆக்டருங்கதான். கிளாஸ்ல போர் அடிச்சா காமெடியன்ஸ் பாணியில் விட் அடிப்போம். கல்லூரிக்கு விவேக் வந்துட்டுப் போனதும், இங்க ‘விவேக் நண்பிகள் கிளப்’ உருவாயிடுச்சுன்னா பார்த்துக்குங்களேன்’’ என்று ஆளாளுக்குக் கேள்விகளைத் தூக்கிப் போட்டார்கள்.
விவேக் காமெடின்னா அவ்ளோ புடிக்குமாம் ரேஷ்மாவுக்கு. ‘நடிச்சே காண்பிக்கிறேன்’ என களம் இறங்கினார்கள் ரேஷ்மியும் அவரது தோழியும். ‘சார் தாஸ் சாருங்களா’வில் தொடங்கி, ‘லாடு லபக்கு தாஸா’ என்று கேட்டு அசடு வழிய, விவேக்குக்காக காத்திருந்த அடுத்தடுத்த பிளேடுகள் நம் காதை நோக்கிப் பாயத் தயாராகின.
ஆமா எவ்ளோ நாளைக்கு பொண்ணுங்க பின்னாடி சுத்துவீங்க? கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லையா(?!).

காலேஜ் போறேன் னு பீலாவுடற நீங்க ஒரு நாளாவது கிளாஸ் ரூம் போனதுண்டா?
நீங்க என்ன கோர்ஸ்ல ஜாயின் பண்ணுனீங்க ஞாபகம் இருக்கா?
அட்லீஸ்ட் அந்த கிளாஸ்ல இருந்து பாஸாகி, அடுத்த கிளாஸ் போறதா ஐடியாவே இல்லையா?
இப்படியே தத்திப் பையனா இருந்தா தேறாத கேஸ்னு பொண்ணுங்க ஸ்கிப் பண்ணிட்டுப் போயிடுவாங்க தெரியுமா?
ஆமா... உங்க காலேஜ் லைஃப் பத்தி கேட்டாலே ரெட் சிக்னல் குடுக்குறீங்களே... அவ்வளவு பெரிய டிராஜடியா அது?
இப்படி பாட்டி ரேஞ்சுக்கு பட்டியலிட்டார் ரேஷ்மி... கவனிங்க விவேக் சார்!
பிரியதர்ஷினி டமால் டுமீல் பார்ட்டி. அம்மணி இருக்கும் இடத்தில் கமுக்கமாக ஜோக்குகளை அள்ளிப் போட்டு விடுவாராம். பக்கத்தில் வெடிச்சத்தம் கேட்குமாம்.
‘‘ஏய், நீ கால் லூசா இருந்தா எனக்கு போன் பண்ணு. அரை லூசா இருந்தா மிஸ்டு காலாச்சும் கொடு. முக்கால் லூசா இருந்தா எஸ்.எம்.எஸ். பண்ணித் தொலை. முழு லூசா இருந்தா கம்முனு கிட. செல்லை சுவிட்ச் ஆப் பண்ணிட்டு விடிய விடிய யோசிச்சு ஒரு முடிவுக்கு வா. ஒண்ணும் புரியலன்னா செல்லைத் தூக்கி பாழுங்கிணத்துல வீசிட்டு வா’’ என துளைத்து எடுத்தார் பிரியா. சரிந்து விழுந்த ஆர்த்தி, ‘டோன்ட் வொர்ரி; பி ஹேப்பி’ என்று எழுந்தார். விவேக் நண்பிகள்ன்றத புரூஃப் பண்றாங்களாம்?!
‘‘ஸாரி நான் பிளேடை தொலைச்சி ட்டேன். அதனால ஒரு கட்டெறும்பை எடுத்துக் காதுல விடறேன்!’’ என கிளம்பியவர் ஹேமா.
‘‘பொண்ணுங்க காலேஜ்ல இருக்க வரைக்கும் கதைக்கிறாளுங்க. வீட்டுக்குப் போனப்புறம் செல்போன். அப்படி என்னத்த பேசுறாங்களோன்னு பிபி ஏறி, ஹார்ட்ட பிடிச்சிக்கிட்டுக் கதறும் அப்பாக்களுக்குத்தான் தெரியும் ரீசார்ஜ் பண்றதோட வலி. இப்படித்தான் ஒரு அப்பா அம்மாகிட்ட சொன்னார்...
‘ஏய் உன் பொண்ணு லவ் பண்ண ஆரம்பிச்சிட்டான்னு நினைக்கிறேன்...’
‘எப்படிச் சொல்றீங்க?’
‘இப்பல்லாம் ரீசார்ஜ் பண்ண பணமே கேட்கிறதில்லை!’
இனிமே லவ் பண்ற பசங்க பார்ட் டைம் ஜாப் பார்த்தால்தான் பட்ஜெட்டை மெயின்டெய்ன் பண்ண முடியும்!’’
ஸ்மைலி கேர்ள் திவ்யாவின் சிரிப்புக்குப் பின்னால் விவேக் ஜோக்ஸ்தான் ஒளிஞ்சிக்கிட்டு இருக்காம்!
‘‘நமக்கு போட்டோன்னாலே அலர்ஜி. மனுஷனாப் பொறந்தா சிரிக்கணும்... சிரிக்க வெக்கணும். அதைத்தான் விவேக் செஞ்சிட்டு இருக்கார். ஆக்சூ‘வலி’ அவர் ஒரு எல்.ஐ.சி. நிறுவனம். அவரோட ஜோக்ஸ் பார்த்து சிரிக்கிறவங்களுக்கு அவரே லைஃப் டைம் பிரீமியம் கட்டுறார். அட, வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு சும்மாவா சொன்னாங்க. நோய் இல்லன்னா நீண்ட நாள் வாழலாம்’’ என்று தத்துவம் சொன்னார் திவ்யா!
ஜெனிபரும் அனிதாவும் பிரிக்க முடியாத ஃபெவிக்கால் ஸ்டிக். பயங்கரமா யோசிச்சு பக்குவமா ஒரு தத்துவம் சொன்னார்கள்...

‘‘டென்ஷன்றாங்க, ரிலாக்ஸ்ன்றாங்க. தம்மு ரம்மு பப்பு & இப்படி கண்ட இடத்திலும் ‘அதைத்’ தேடி அலையறாங்க. இவங்களப் பார்த்து ‘அது’ சிரிச்சிச்சாம்...’’
‘அது’ என்னது என கலவரமானோம்.
‘‘என்னை யாரும் தொலைக்கலை. நானும் தொலைஞ்சு போகலை. இன்னிக்கு வரைக்கும் இந்த மனுஷப்பயபுள்ளங்க எல்லாரும் என்னைத் தேடிக்கிட்டே இருக்காங்க & இப்படிச் சொன்ன அந்த ‘அது’ என்ன தெரியுமா?
நிம்மதி!’’ அப்பாடா ஒரு வழியா நிம்மதியாச்சு!
‘‘நியூக்ளியர் ஃபேமிலி, ஹைடெக் வாழ்க்கை, டெரர் சிந்தனைன்னு லைஃப் ஒரு மாதிரியா போய்ட்டிருக்கிற சூழல்ல முகம் தெரியாத, மொழி தெரியாத மனிதரைக்கூட இணைக்கிற பாலம் சிரிப்புதான். அது தானா வராது. அதுக்கு நகைச்சுவைன்ற காப்சூல் அவசியம். வாய்விட்டு சிரிப்போம்... வாய் உள்ளவர்களை எல்லாம் சிரிக்க வைப்போம்’’ என்கிறது விவேக் நண்பிகள் கிளப். காது முழுக்க ரத்தம் வழிய ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் தேடி ஓடிய நம்ம நிலைமையோ, ‘எப்டி இருந்த நான் இப்டி ஆய்ட்டேன்!’
ஸ்ரீதேவி
படங்கள்: ஜெரோம்