
வெற்றியின் பாதையில்
தங்களை திருப்பிவிட்ட தருணங்களை,
ஜெயித்தவர்கள் அடையாளம் காட்டும் தொடர்
தொடர்கிறார் சூர்யா
‘திறமை வாய்ப்பைக் கொடுக்கும்; ஆனால் உழைப்பே வெற்றியைத் தக்க வைக்கும்’ என்பதற்கு நிகழ்கால சாட்சி சூர்யா. திறமை என்பது பிறவியோடு வருவது என்கிற மாயையை உடைத்து, உழைப்பால் அணு அணுவாகத் தன்னைச் செதுக்கிக் கொண்டவர். வடமொழியை விரும்பாத ஒரு தமிழறிஞரிடம் குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொன்னார்கள். ‘சூர்யா’ என்று வைத்தார் அவர். ‘தமிழ்நாட்டு ஏழைப் பிள்ளைகளின் கல்வியில் உண்மையான அக்கறை வைத்து, தனது அகரம் அறக்கட்டளை மூலம் நிறைய பேரின் வாழ்வில் கல்வி என்கிற ஒளியை ஏற்றுகிற ஒருவரின் பெயரைத்தான் பெருமையோடு வைக்கிறேன். அந்தப்பெயர் வடமொழியில் இருந்தாலும் வைப்பது பிழையில்லை’ என்று விளக்கம் சொன்னார் தமிழறிஞர். திரையில் நாயகன் என்பதைவிட, நிஜத்திலும் அந்தத் தகுதியைப் பெற்றிருக்கும் சூர்யா தன் எண்ணங்களால் அழகாகி, இன்னும் மெருகேறிக் கொண்டே போகிறார்.
‘‘என்னோட பிறந்தநாளுக்கு ஜோதிகா ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டி ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. ‘நேருக்கு நேர்’ படத்திலிருந்து, ‘சிங்கம்’ படம் வரைக்கும் செலக்டிவா சில காட்சிகளைக் கோர்த்து ஒரு டி.வி.டி பண்ணியிருந்தாங்க. நான் எப்படி இன்ச் - பை - இன்ச் வளர்ந்திருக்கேன்னு கண்ணுக்கு முன்னாடி விஷுவல் ஓடிக்கிட்டு இருக்கு.
என் லுக் தப்பா இருக்கு. சிரிப்பு அழகா இல்லை. எவ்ளோ பெரிய சான்ஸ் கிடைச்சு, நான் அதை சரியா பயன்படுத்திக்கலையேன்னு ஆதங்கமா இருக்கு. கொஞ்சம் கொஞ்சம் எனக்குள்ள நடந்த மாற்றங்கள் ஸ்கிரீன்ல தெரிஞ்சிக்கிட்டே இருக்கு. ‘‘எங்கேயிருந்து எங்கே வந்திருக்க பாரு சூர்யா’’ன்னு ஜோ பெருமையா சொல்லும்போது, என்னை இயக்கிய சில இயக்குனர்கள் அப்போ அங்க இருந்தாங்க. எனக்கு பாலா சார் ஞாபகம் வந்துச்சு. அவர் பக்கத்துல இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாருன்னு தோணுச்சு. அப்போ அவரை ரொம்ப மிஸ் பண்ணேன்’’ என்கிற சூர்யாவின் சினிமா கேரியரை ‘நந்தாவுக்கு முன்’, ‘நந்தாவுக்குப் பின்’ என்று இரண்டாகப் பிரிக்கலாம். ‘அட, இவ்ளோ நாள் இந்தத் திறமையை எங்கப்பா ஒளிச்சி வெச்சிருந்தே’ என்று பத்திரிகைகள் பாராட்டுகிற அளவு கவனம் திருப்பினான் ‘நந்தா’. ஒரு நடிகராக சூர்யாவின் மேல் வெற்றி வெளிச்சம் பட்ட காலகட்டம் அதுதான்.
‘‘அது ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் ரிலீஸ் நேரம். திருப்பதி கோயிலில் மனமுருக பிரார்த்தனையோட போய் நின்னேன். என்னைத் தேடி வந்து வாய்ப்பு தந்த சினிமாவே, எந்த நேரமும் என்னைத் தூக்கி வெளியே எறிந்துவிடுமோங்கிற பயம் அப்ப உடல் முழுவதும் பரவி இருந்தது. அந்தப் படம் ரிலீஸ் ஆனதுக்கப்புறம் என் வாழ்க்கை தலைகீழா மாறப்போகுதுன்னு நம்பினேன். அப்படி எதுவும் நடக்கலை. ஒண்ணுமே புரியாத காலகட்டம் அதுதான். ஏதோ பண்ணணும்னு தெரியுது. ஆனா, என்ன பண்றதுன்னு தெரியலை.
எந்தத் துறையாக இருந்தாலும், தொழிலா இருந்தாலும் சலுகையோ, இரக்கமோ காப்பாத்தாது. தகுதி மட்டுமே நம்மைத் தக்க வைக்கும். பயன்படாத ஒன்றை யாரும் வச்சுக்க மாட்டாங்க. ‘இந்தப் படம் நம்ம வாழ்க்கையை தலைகீழா மாத்திடும்’னு நினைச்சித்தான் அப்ப ஒவ்வொரு படத்துலயும் நடிப்பேன். ஆனா அப்படி நடக்கலை.

ஆழமா யோசிச்சுப் பார்த்தபோதுதான் ஒரு விஷயம் மெதுவா புரிஞ்சுது... ‘நானே மாறாத போது, எதுவும் மாறாது!’ ஒரு ஹீரோவா இருந்தா ஆடணும், பாடணும், சண்டை போடணும்னு மக்கள் எதிர்பார்க்கிறாங்க. காசு குடுத்து படம் பார்க்க வர்றவங்க, மூணு மணி நேரம் அவங்க கவலைகளை மறந்து இருக்கணும். மத்தவங்க சொல்லிக்கொடுக்கிறதை மட்டும் அப்படியே செஞ்சிக்கிட்டிருக்கறது ஒரு நடிகனுக்குப் பத்தாதுன்னு அப்போ புரிஞ்சது. டான்ஸ், ஃபைட் கத்துக்கற முயற்சிகளில் தீவிரமா இறங்கினேன். ஆனா டான்ஸ் மட்டும் ஆடினா நடிகனா ஏத்துக்க மாட்டாங்க; நடிக்க மட்டும் செஞ்சா ஹீரோவா பார்க்கமாட்டாங்க.
‘என்ன பண்ணா இந்த ஜனங்க நம்பள ஏத்துக்குவாங்க’ன்னு குழம்பி நின்ன நேரத்தில், மலையாள இயக்குனர் சித்திக் ‘‘‘பிரண்ட்ஸ்’ படத்தில் நடிக்கிறீங்களா’’ன்னு கேட்டார். ‘நேருக்கு நேர்’ படத்தில்கூட, ரெண்டு ஹீரோவில் நானும் ஒருத்தன். பத்து படம் பண்ண பிறகு, ரெண்டாவது ஹீரோவா நடிக்க ஒரு படத்தோட வாய்ப்பு வருது. ‘நல்ல கதையில் நடிச்ச திருப்திக்காக பண்ணலாம்’னு ஒத்துக்கிட்டேன். என்னோட முழு பலத்தையும் திரட்டி இந்தப் படத்தில், ‘நான் யார்’ங்கிறதை நிரூபிச்சிடணும்னு வெறியோடு இருந்தேன். முடிஞ்ச வரைக்கும் நல்லாவும் பண்ணேன். படம் நல்லா போச்சு. ‘‘நல்லா பண்ணி இருக்கீங்க சூர்யா’’ன்னு கொஞ்சமா பாராட்டுகள் கிடைச்சுது. ‘நீயெல்லாம் இன்னும் பண்ணலாம் தம்பி’ன்னு சொல்லாம சொல்ற
மாதிரியே அந்தப் பாராட்டெல்லாம் இருக்கும். ‘இதுக்கு மேல என்ன பண்றது’னு எனக்குத் தோணும்.
அந்த நேரத்தில்தான் ‘சேது’ படம் பார்த்தேன். எனக்குள்ள இருந்த எல்லா கேள்விகளுக்கும் பதிலா இருந்துச்சு அந்தப் படம். ‘நடிப்புக்கு இவ்ளோ மெனக் கெடணுமா? இதுல 10 பர்சன்ட் கூட நாம பண்ணலயே’ன்னு திரும்பத் திரும்ப தோணுச்சு. அந்தப் படத்தோட டைரக்டர்னு ஒருத்தரைக் காட்டுறாங்க. என்னால நம்பவே முடியலை. ஒல்லியா, ஹவாய் செருப்பு போட்டுக்கிட்டு ஒருத்தர், ‘சேது’ மாதிரி எனர்ஜெடிக்கான ஒரு படத்தை எடுத்திருப்பார்ன்னு சொன்னா எப்படி நம்ப முடியும்? அந்தப் படம் பற்றித்தான் திரும்பின பக்கமெல்லாம் பேச்சு. நடிச்சா அந்த மாதிரி ஒரு படத்துல நடிக்கணும்னு ஆசையா இருந்துச்சு.
எதையும் கேட்டு வாங்கற பழக்கம் அதுவரைக்கும் என்கிட்டே இல்லை. எனக்கானதைக்கூட யார்கிட்டேயும் உரிமையோட போய்க் கேட்டதில்லை. ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தோட வேலை நடக்குது. நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்யற நேரம். அப்போ என்கிட்டே நல்ல படங்கள் இல்லை. ‘‘உன்னைப் பத்தி பேசிக்கிட்டிருக்காங்க. போய் நீ கேட்டா, உன்னையே ஹீரோவா போட்ருவாங்க’’ன்னு ஒரு துணை இயக்குனர் என்கிட்டே சொல்றார். நானும் வசந்த் சாரை பார்க்கக் கிளம்பிப் போனேன். அந்த இடத்துக்குப் போனதுக்கப்புறம், ‘யார் சார் ஹீரோ’ன்னு கேட்க வாய் வரலை. கேட்காமலேயே திரும்பி வந்தேன். இதுதான் என்னோட இயல்பு.
‘சேது’ படம் ஓடிக்கிட்டிருக்கற நேரத்துல, அப்பாவைப் பார்க்கிறதுக்காக பாலா சார் ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தார். அதே ஹவாய் செருப்பு. ‘‘சூர்யா... டிரைவர் யாராவது இருக்காங்களா? பக்கத்துல என்னை டிராப் பண்ண முடியுமா’’ன்னு கேட்டார். ‘‘நான் ஃப்ரீயாதான் இருக்கேன். நான் ட்ராப் பண்றேன்’’னு சொல்லி காரை எடுத்தேன். தொண்டை வரைக்கும் வந்து நின்ன வார்த்தைகள், என்னையும் மீறி அவர்கிட்டே வந்து விழுந்துச்சு. ‘‘சார், என் கேரியர்ல ஒரு படமாவது உங்களோட பண்ணணும்னு ஆசையா இருக்கு’’ன்னு கேட்டதும் நிமிர்ந்து பார்த்தார். லேசா சிரிச்சார். ‘‘அமையும்போது பண்ணுவோம். அடுத்த படத்தோட வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. சொல்லிவிடுறேன்’’னு சொன்னபடி இறங்கிப் போயிட்டார்.
‘பிரண்ட்ஸ்’ படத்துக்குப் பிறகு, அதே மாதிரியான கதைகள் தேடி வந்துச்சு. நாலு அஞ்சு அண்ணன் தம்பியில் நானும் ஒருத்தனா நடிக்க ஒத்துக்கிட்டேன். அந்த நேரத்தில் பாலா சார்கிட்டே இருந்து போன். ‘‘சூர்யா, நான் சொல்ற வரைக்கும் புதுசா படம் எதையும் ஒத்துக்காதீங்க’’ன்னு சொன்னார். ஒத்துக்கிட்ட படத்துல இருந்தெல்லாம் வெளியில் வந்து பாலாவுக்காகக் காத்திருந்தேன்.
‘நந்தா’ ஷூட்டிங். பாலா சார் படத்தில் நான் ஹீரோ. ‘இனி நமக்கென்ன கவலை’ன்னு நினைப்பு வந்துச்சு. மற்ற படங்களில் இயக்குனர் சொல்றதை அப்படியே நடிச்சா போதும்னு இருந்தேன். சினிமா பொம்மலாட்டம் இல்லை. நடிகன்ங்கிறவன் பொம்மையும் இல்லை. யாரோ நம்ம கை, காலைத் தூக்குவாங்க. அதுக்கேத்த மாதிரி நாமளும் தூக்கிட்டிருப்போம். அந்த விஷயத்தில் எனக்கு ‘நந்தா’ முழுக்க முழுக்க புது அனுபவம். ‘பெத்த அம்மாவே புறக்கணிக்கிற ஒருத்தன்’ எப்படி இருப்பான்னு எனக்குப் புரிய வைக்கும்போது பாலா சார் கண் கலங்கும். நான் அப்படியே நிப்பேன். நான் திரையில் நடிக்கப்போற ஒரு கதாபாத்திரத்தை ஒரு இயக்குனர் அவ்ளோ நேசிக்கிறார். நான் அதுவாவே இருக்கணும். ஏன் எனக்கு கண் கலங்கலைன்னு

நினைச்சப்ப அவமானமா இருந்தது. நந்தா என்கிற கதாபாத்திரம் எப்படி பார்ப்பான், எப்படி முறைப்பான், எப்படி நடப்பான், எப்படி சிரிப்பான்னு ஒவ்வொண்ணையும் பாலா சார் ஆவி மாதிரி எனக்குள்ள இறக்கி விட்டார். சிரிக்கிறதுகூட உதடு பிரிக்காம சிரிக்கணும். ரொம்ப சிரிக்கறேன்னு கரெக்ட் பண்ணுவார். குருகுலம் மாதிரி கத்துகிட்டேன். ஷூட்டிங் முடிஞ்ச பிறகுகூட நந்தா எனக்குள்ள இருந்து வெளியில போக மாட்டான். என் தங்கை பிருந்தா, ‘‘அண்ணா, எப்பவும் இருக்கிற மாதிரி நீ இல்லை. சரியா சிரிக்கக்கூட மாட்டேங்கிற’ன்னு சொல்ற நிலையில் இருந்தேன்.
‘வெயில்ல கிடக்கணுமா... நான் ரெடி! மழையில் நனையணுமா... இதோ வர்றேன்! கேரக்டருக்காக மொட்டை அடிக்கணுமா... தாராளமா அடிச்சிடலாம்!’ நந்தா என்கிற கதாபாத்திரம் என்ன கேட்கிறானோ அத்தனையையும் கேள்வி கேட்காம செய்யத் தயாரா இருந்தேன். ‘அந்தப் படம் எப்படி வரும்? வழக்கமான ஹீரோவா இல்லையே... ஜெயிக்குமா?’ இப்படி எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. இந்தப் படம் வந்தா, உண்மையான சூர்யா யார்ன்னு உலகத்துக்குத் தெரியும். யாரும் சாதாரணமா இந்தக் கேரக்டரைப் பண்ணிட முடியாதுன்னு மத்தவங்களுக்குத் தோணும். வித்தியாசமான ஒரு கதையா... ‘இதுக்கு சூர்யா சரியா இருப்பான் இல்ல’ன்னு மத்தவங்க பேசணும். அந்த மாதிரி ஒரு அடையாளத்தை எனக்கு இந்தப் படம் சம்பாதிச்சுக் கொடுக்கும்னு நம்பினேன். அது அப்படியே நடந்துச்சு.
‘காக்க காக்க’, ‘பிதாமகன்’, ‘பேரழகன்’, ‘கஜினி’, ‘அயன்’, ‘சிங்கம்’னு எல்லா படத்துலயும் ஒரே ஃபார்முலாவை பின்பற்ற ஆரம்பிச்சேன். கடுமையா உழைக்கணும். அந்தக் கேரக்டருக்கு என்ன தேவையோ அதை சமரசம் இல்லாம தரணும். என்னை இயக்கும் இயக்குனர்களுக்கு உண்மையா இருக்கேன். இந்த மாதிரி ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு ஃபார்முலா இருக்கு. ஆனா, உழைப்பு எல்லாத்துக்கும் பொதுவான விஷயம்! அதை ரசிக்க ஆரம்பிச்சுட்டா, அப்புறம் எதுவும் பாரமா இருக்காது. தொழிலில் ஜெயிச்சா போதுமா... வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டாமா? அது என்னுடைய மூன்றாவது திருப்புமுனை மட்டும் இல்லை; மிக முக்கியமான திருப்புமுனையும்கூட...
(தொடர்கிறார் சூர்யா...)
த.செ.ஞானவேல்