ஆன்மிக விஷயங்களில் மிகவும் நாட்டம் கொண்ட பணக்காரர் அவர். கோயில்களுக்கும் தர்ம ஸ்தாபனங்களுக்கும் அள்ளிக்கொடுப்பவர். அவர் வீட்டில் எப்போதும் ஜேஜே என்று விருந்தாளிகள் கூட்டம் மற்றும் உதவி கோரி வருகிற உறவினர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். அவர் முகம் சுளித்ததில்லை.
ஆனால், அவருக்கும் ஒரு பெரிய மனக்குறை உள்ளுக்குள் இருக்கத்தான் இருந்தது. அது ஒரு விசித்திரமான மனப்போக்கு... ‘எப்போது பார்த்தாலும் இப்படி மனிதர்களுடனேயே காலம் கழிக்கவேண்டியிருக்கிறதே; தனிமையில் சென்று இறைவனை நினைக்கவோ, வழிபடவோ முடியவில்லையே!’
தனது மனதிலிருந்த குறையை வெளிப்படுத்துமுன், தான் செய்யப்போகும் காரியத்தை நிதானமாகத் திட்டமிட்டுக் கொண்டார். கொடைக்கானல் அருகே அவருக்குச் சொந்தமாக இருக்கும் ஜன நடமாட்டம் இல்லாத எஸ்டேட் ஒன்றில் சிறிய வீடு கட்டிக்கொண்டு, தன் வாழ்நாளைத் தான் மட்டுமே அங்கே இருந்து அமைதியாகக் கழிப்பது. எந்த மனிதரையும் அங்கே பார்ப்பதில்லை.
மனைவியிடமும் மகனிடமும் தனது தீர்மானத்தைத் தெரியப்படுத்தினார். அவர் பிடிவாத குணமுடையவர். நினைத்ததைச் செய்தே தீருவார். ஆனாலும், மனைவியும் மகனும் அவரிடம் ஒரு விஷயத்துக்காகக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டனர். ‘முடியாது’ என்று முதலில் மறுத்தவர், பிறகு அவர்கள் சொன்ன யோசனைக்கு ஒப்புக்கொண்டார். பணக்காரருடன் அவருக்கு உதவி செய்ய ஒரு காரியதரிசி இருக்கவேண்டும் என்பதே குடும்பத்தினரின் வேண்டுகோள்.
கொடைக்கானல் எஸ்டேட்டில் இருந்த சிறிய வீட்டுக்குப் பணக்காரர் குடிவந்து விட்டார். வெகு இயற்கையான சூழ்நிலை. ஆனால், கொஞ்ச நாளில் மீண்டும் அவர் சலிப்படைந்தார். அவர் வேண்டிய தனிமை அவருக்குக் கிடைக்காததைப் போல வருந்தினார்.
ஏனென்றால், அவருடைய காரியதரிசி கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வதற்காக சதாகாலமும் அவரைக் கண்காணித்து வந்தார். இரவு தூங்கும்போதுகூட பணக்காரரின் பக்கத்துக் கட்டிலிலேயே படுத்துக்கொள்வார். வாக்கிங்கின்போது கூடவே செல்வார். பூஜை செய்யும்போது பூக்களைத் தயாராக வைத்தபடி பூஜை அறையில் அவருடனேயே இருப்பார். சுருக்கமாக, நீங்காத நிழல்போல ஒட்டிக்கொண்டிருந்தார்.
பணக்காரருக்கு அந்த ஆளிடமிருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்று இருந்தது. ‘நான் நாடி வந்த அமைதி எனக்குக் கிடைக்கவில்லை’ என்று நொந்துபோன மனதுடன் ஒரு கடிதம் எழுதி மேஜைமீது வைத்துவிட்டு, காரியதரிசிக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓர் இரவு வெளியேறிவிட்டார்.
அடர்ந்த காட்டுக்கு நடுவில் தன்னை யாரும் சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாத இடமாகப் பார்த்து ஒரு மரத்தடியைத் தன் இருப்பிடமாக்கிக் கொண்டார். அவரது லட்சியத் தனிமை கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்தார். பறவைகளின் இனிமையான குரல்களும், விலங்குகளின் நடமாட்டமும், மரங்களிலிருந்து வீசும் காற்றும் அவருக்கு மனதில் அமைதியை ஊட்டின. பசி எடுக்கும்போது மரங்களில் இருந்த கனிகள் உதவின. அருகிலிருந்த நீரோடையில் குளித்துக் களித்தார். மரத்தடியிலேயே தூங்கினார். இயற்கையோடு ஒன்றிவிட்ட திருப்தியை அடைந்தார்.
சில காலமாயிற்று. பறவைகளின் மொழி அவருக்குப் புரியலாயிற்று. அவை என்ன பேசிக் கொள்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு பறவை பாஷை அவருக்கு நன்றாக விளங்கியது. சுவாரஸ்யத்துடன் அவற்றின் பேச்சைக் கவனிக்கலானார். ஒரு தினம் ஏராளமான பறவைகள் அந்த மரத்தில் வழக்கத்துக்கு விரோதமாக ஒன்றுசேர அமர்ந்திருந்தன.
பறவைகளின் வருடாந்திர மாநாடு போலிருக்கிறது என்று நினைத்து சிரித்துக்கொண்டார். அவை என்னதான் பேசுகின்றன என்று கண்ணை மூடித் தியானிப்பவர்போல அவற்றின் பேச்சுகளை கேட்கலானார்.
தலைமைப் பறவை: ‘‘ஒரு முக்கியமான விஷயமாக நாம் இங்கே கூடியிருக்கிறோம். நமது அமைதியையும் தனிமையையும் கெடுப்பதற்கென்று நாட்டிலிருந்து ஒரு மனிதன் இங்கு வந்திருக்கிறான். அவன் நடப்பது, குளிப்பது, ஏதேதோ பாடுவது... இவையெல்லாம் நமது அமைதியைக் குலைக்கிறது. அவன் இங்கிருந்து புறப்பட வேண்டும். அதற்கு நாம் என்ன செய்வது?’’
இன்னொரு பறவை: ‘‘என்னுடைய குழந்தையைக்கூட அவன் கையால் எடுத்துத் தடவித் தடவி அதுக்கு ஏதோ தீனி கொடுத்தான். அவனோ மனிதன். என் குழந்தைக்கு என்ன இரை கொடுக்கவேண்டும் என்று எனக்குத் தெரியுமா... இல்லை, அவனுக்குத் தெரியுமா? அவனிடமிருந்து குழந்தையை மீட்டதே பெரிய காரியமாகிவிட்டது.’’
ஒரு வாத்து: ‘‘அவன் நீர் நிலையில் குளித்துக்கொண்டிருக்கும்போது நானும் மனைவியும் குளிப்பதற்குக் கூச்சமாக இருக்கிறது. அவனோ எங்கள் குளியலை கண்கொட்டாமல் வேடிக்கை பார்க்கிறான். எங்களால் உல்லாசமாகக் குளிக்க முடியவில்லை. நாட்டில் எவ்வளவோ கிணறுகள் இருக்க, இந்தக் குளத்துக்கு வந்து எங்கள் நிம்மதியை அவன் கெடுப்பானேன்?’’
தலைமைப் பறவை: ‘‘நமக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. எல்லாருமாகச் சேர்ந்துகொண்டு அவன் தலையைக் கொத்தினால் அவன் ஓடியே விடுவான். அவரவர் தங்கள் தங்கள் இடத்தில் இருந்துகொண்டு அமைதியைத் தேடிக்கொள்ள வேண்டும். ‘அமைதி தேடுகிறேன் பேர்வழி’ என்று காட்டில் வாழும் நமது அமைதியைக் கெடுக்கக்கூடாது. அவனைக் கொத்துவதற்கு உங்கள் மூக்குகள் தயாராகட்டும். நான் சில கழுகுகளிடமும் சொல்லி வைக்கிறேன்.’’
அத்துடன் பறவைகள் பேசி முடித்ததுபோல பறந்துவிட்டன.
தனிமை தேடி வந்த பணக்காரரின் உடல் நடுங்கியது. தலைமேல் போட்டுக்கொண்ட துண்டுடன் மறுநாளே அவசர அவசரமாக தனது பட்டணத்து பங்களாவுக்குப் போய் சேர்ந்தார்.
நமது அமைதிக்காக பிறத்தியாருடைய அமைதியைக் கெடுக்கக்கூடாது.
(சிந்திக்கலாம்...)
பாக்கியம் ராமசாமி