என் 6 மாதக் குழந்தைக்கு மாறுகண் போல இருக்கிறது. ‘ஒன்றும் பிரச்னையில்லை... மாறுகண் இருந்தால் அதிர்ஷ்டம்’ என்கிறார்கள் சிலர். மாறுகண் பிரச்னைக்குத் தீர்வு உண்டா? அப்படியே விடலாமா?கே.சுந்தரி, சென்னை-044.
பதில் சொல்கிறார் குழந்தைகளுக்கான கண் மருத்துவ நிபுணர் பிரவீண் கிருஷ்ணாஇரண்டு கண்களும் ஒன்றாகப் பார்க்காமல், ஒன்று நேராகவும், இன்னொன்று வேறு திசையிலும் பார்ப்பதால்தான் மாறுகண் வருகிறது. கண்களில் உள்ள தசைப்பகுதிகளில் பேலன்ஸ் இல்லாமை, பவர் இருந்து அதன் காரணமாக உண்டாகும் பாதிப்பு, மூளை தொடர்பான நரம்புகளில் உண்டாகிற பாதிப்பு என மாறுகண் வர பல காரணங்கள் இருக்கலாம். பாட்டி, தாத்தாவுக்கு இருந்து, அம்மா, அப்பாவுக்கு வராமல், குழந்தைக்கு வரலாம்.
சில குழந்தைகளுக்கு இது பிறந்த சில நாட்களிலேயே தெரியும். எத்தனை சீக்கிரம் கண்டு பிடித்து சரி செய்ய முடியுமோ, அந்தளவு பார்வை குறைபாடு ஏற்படாமல் காப்பாற்றலாம். குழந்தைக்கு 6 மாதம் என்கிறீர்கள். சிகிச்சையளிக்க சரியான நேரம் இது.
மாறுகண் உள்ளவர்களுக்கு பிரச்னையின் தீவிரத்துக்கேற்ப, கண்ணாடியின் மூலமோ, அறுவை சிகிச்சையின் மூலமோ சரி செய்யலாம். குழந்தைகளுக்கு வருகிற மாறுகண் மாதிரி, சிலருக்கு வயதான பிறகு திடீரென்றும் வரலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம் காரணமாக நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதே காரணம். நோயைக் கட்டுப்படுத்தினாலே, மாறுகண் தானாகச் சரியாகும். தேவைப்படுவோருக்கு ப்ரிசம் கிளாஸ் எனப்படுகிற பிரத்யேக கண்ணாடி பரிந்துரைக்கப்படும்.
மாறுகண் அதிர்ஷ்டம் என்று யார் சொன்னது? ஒரே மாதிரி பார்க்க முடியாமல், எல்லாம் இரண்டிரண்டாகத் தெரிய, ஒரு கட்டத்தில் குழந்தைக்கு பார்வை குறைய ஆரம்பிக்கும். அது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?
மல்லிகைச்செடி வைத்திருக்கிறோம். இலைகள் அடுக்கு அடுக்காக வளர்கின்றன. எப்போதாவது ஓரிரு மொட்டு தோன்றி மறைந்துவிடுகிறது. எங்கள் வீட்டிலும் மல்லிகை பூத்துக் குலுங்க வழியுண்டா? சு.மோகனன், அரியலூர்.
பதில் சொல்கிறார் தோட்டக்கலை நிபுணர் வள்ளி நாயகம்நீங்கள் செய்ய வேண்டியது - கவாத்து! மழைக்குப் பிறகு அதிக இலை விட்டிருந்தாலோ, சிறிய கிளைகள் இருந்தாலோ உடனுக்குடன் வெட்டுவதுதான் அது.
தரையோ, தொட்டியோ - அடிக்கடி மண்ணைக் கிளறி விடுங்கள்.
மாதம் இருமுறை ஒரு கரண்டி வேப்பம் புண்ணாக்கு அல்லது கடலைப் புண்ணாக்குடன் ஒரு சிட்டிகை எறும்புப்பொடி கலந்து உரமாக இடுங்கள்.
தண்ணீர் அதிகமானால் இலைகள் செழித்து வளரும். ஆனால், பூக்கள் மலராது. மிதமாக தண்ணீர் விடுவது நல்லது.
தினம் 4 மணி நேரமாவது மல்லிகைச் செடிக்கு சூரிய ஒளி அவசியம். இப்படிச் செய்தால் மல்லிகை பூத்துக் குலுங்கும்!
ஃப்ரிட்ஜ் அடிக்கடி ரிப்பேர் ஆகிறது. சர்வீஸ் எஞ்சினியரிடம் கேட்டால் பராமரிப்பு சரியில்லை என்கிறார். ஃப்ரிட்ஜை எப்படி பராமரிப்பது? ஆர்.ராஜம், சேலம்-6.
பதில் சொல்கின்றனர் கோத்ரெஜ் சர்வீஸ் மையத்தினர் சுவரிலிருந்து குறைந்தபட்சம் 6 இன்ச் இடைவெளியில் ஃப்ரிட்ஜ் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் போதுமான காற்றோட்டம் இருக்கும். ஃப்ரிட்ஜில் வெப்பம் அதிகமாகி, பழுதாகாமல் இருக்க காற்றோட்டம் அவசியம். ஃப்ரிட்ஜின் பின்பகுதியில் படிந்திருக்கும் தூசுகளை நீக்கி, எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
மூடப்படாத உணவுகள், பானங்களை அப்படியே ஃப்ரிட்ஜுக்குள் வைக்க வேண்டாம். அவை வெளிப்படுத்தும் ஈரப்பதம் காரணமாக கம்ப்ரஸ்ஸர் அதிகப்படி வேலை செய்ய நேரிடும். ஃப்ரிட்ஜின் கதவைத் திறந்தால், விரைவாக மூடிவிடுங்கள்.
தேவையற்ற பொருட்களை நீண்டநாள் ஃப்ரிட்ஜில் போட்டு வைக்கும் பழக்கத்தைத் தவிர்த்து விடுங்கள். எடை அதிகமான கண்ணாடி பாட்டில்கள் / பாத்திரங்களுக்குப் பதிலாக மெல்லிய ஃபுட் கிரேட் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
இப்படிப் பராமரித்தால் மின்சாரத்தைச் சிக்கனப் படுத்துவதோடு, பழுதையும் தவிர்க்கலாம்