சிவகங்கையிலிருந்து கூப்பிடு தூரத்திலிருக்கிறது முத்துப்பட்டி. 150 குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் ஒதுக்குப்புறமாக பொக்கிஷத்தம்மாளின் குடிசை. ஊரில் ஒரு வீடு பாக்கி இல்லாமல் எல்லோரும் ஒரு எட்டு பொக்கிஷத்தம்மாள் வீட்டுக்கு வந்து விட்டார்கள். ‘‘ஐயா சேது... இது காரை வீட்டுச் சுப்பையா மகன்யா. உங்கூட கோலி விளையாடும்ல. ரெண்டு பேரும் அடிக்கடி சண்டை போடுவீங்கல்ல... அந்தக் கணேசன்யா!’’ என மகன் சேதுவுக்கு கணேசனை ஞாபகத்துக்குக் கொண்டுவர அத்தனை பாடுபடுகிறார் பொக்கிஷம். சேதுவும் மையமாகத் தலையாட்டி வைக்கிறார்... ஞாபகம் வந்ததா இல்லையா தெரியவில்லை.
25 வயதில் வீட்டை விட்டு வெளியேறி 21 வருடங்களுக்குப் பிறகு முத்துப்பட்டி திரும்பியிருக்கும் இந்த சேதுவின் கதையும் ‘ச்சீயான்’ சேது கதை போலவே இருப்பதுதான் உருக்கம்...
‘‘பொண்ணு ஒண்ணு, பையன் ரெண்டுன்னு மூணு புள்ளகய்யா. சிறுசுகளா இருக்கையிலயே அவங்கப்பா போய் சேர்ந்துட்டாரு. செங்கல் சூளைக்குப் போய் புள்ளகளைக் காப்பாத்துனேன். சேதுவுக்கு பதினாறு வயசு. அவன் தம்பி அமல்ராஜுக்கு பதிமூணு. ஒருநாள் சூளையில எம்மேல செங்கல் விழுந்ததுல மூச்சு பேச்சில்லாமப் போச்சு. துடிச்சிப் போயிட்டாங்க ரெண்டு புள்ளகளும். ‘இனிமே நீ சூளைக்குப் போகவேணாம்மா... நாங்க மெட்ராஸ் போய் வேலை பார்த்துக் காசு அனுப்புறோம்’னு கிளம்புனாங்க. அரை மனசோடத்தான் அனுப்பி வச்சேன்.

அமல்ராஜுக்கு ஓட்டல்லயும் இவனுக்கு ஏதோவொரு கம்பெனியிலயும் வேலை. சின்னவன்தான் அப்பப்ப பணம் அனுப்பி வைப்பான். நல்லாத்தான்யா இருந்தாங்க. பட்டணக்கரைகள்ல என்ன நடக்குதுன்னு எனக்கென்ன தெரியுது? திடீர்னு ஒருநாள் சின்னவன் அமல்ராஜ் வேலை பார்த்த இடத்துல இருந்து போன். ‘உங்க பையன் மாடியில இருந்து கீழ விழுந்து செத்துப் போயிட்டான்’னு. அறுத்துத் தைச்சு ஆளே அடையாளம் தெரியாதபடி கொண்டாந்து கிடத்திட்டாங்கய்யா...’’ & அந்தத் துயர நினைவு பொக்கிஷத்தம்மாளின் கண்களுக்குப் பின்னால் அணைகட்டி நிற்கிறது நீராக.
‘‘கூட வேலை பார்த்த பையன்கள் ரெண்டுபேர், ‘இவனை அடிச்சுத்தான் கொன்னுட்டாங்க’ன்னு என்கிட்ட சொன்னாங்க. என்ன எதுக்குன்னெல்லாம் எதுவும் தெரியலை. கடைசி மாதச் சம்பளம்னு கொஞ்சம் பணம் தந்துட்டுப் போனாங்க. ‘போதும்யா பட்டண சகவாசம்’னு அப்பவே பெரியவன் சேதுகிட்டயும் முறையிட்டேன். கேக்காம கிளம்பிப் போனான். ஊருல ஒரு சாமி விடாம கும்பிட்டு அனுப்பி வச்சேன்.
பட்ட கால்லதானே படணும்? மூணே மாசத்துல திரும்பி வந்து, ‘அடிக்கடி உடம்பு முடியாமப் போகுதும்மா, இனி உன்கூடவே இருந்துடறேன்’னான். அதுதான்யா கடைசியா, அவன் நினைவு தெரிஞ்சு பேசுன பேச்சா இருக்கணும். அதுக்குப் பிறகுதான் அவனோட நடவடிக்கை மாறுச்சு. தானா பேசறதும், சிரிக்கிறதும், போற வர்றவங்களை அடிக்கறதுமா எம் புள்ளைக்குப் புத்தி பேதலிச்சிடுச்சுய்யா. வைத்தியம்னு பல இடங்களுக்கு அலைஞ்சு பார்த்தும் புடிபடலை. மெட்ராஸ்ல இதுக்குன்னே இருக்கிற ஆஸ்பத்திரிக்குப் போனா சரியாகும்னு சொன்னாக. அங்க போய் சேர்த்தேன். கொஞ்ச காலம் கழிய, அங்க இருந்து ஒருநாள் போன்... ‘உங்க பையன் இங்கேருந்து தப்பிச்சுப் போயிட்டான்’னு!
பதறிப் போனவளுக்கு வயித்துல பால்வார்த்த மாதிரி, மூணாவது நாள் எங்க ஊர் பஸ் ஸ்டாப்புல வந்து நின்னான். ‘சொந்த ஊருக்கு வழி தெரிஞ்ச வரைக்கும் என் புள்ளைக்கு ஒண்ணுமில்லய்யா’ன்னு கூடவே வச்சுக்கிட்டு திரும்பவும் செங்கல் அறுக்க போய் வந்திட்டிருந்தேன். அப்பத்தான் ஒருநாள் வீட்டுல இருந்த 100 ரூபாய் தாளை எடுத்துட்டுப் போனவன், எங்க என்ன பாடுபட்டானோ... இப்பதான் வந்து சேர்ந்திருக்கான்’’ அணைகட்டிய கண்ணீர் சந்தோஷத்தில் உடைய, ஆரத்தழுவிக் கொள்கிறார் மகனை.
‘21 வருட காலத்தில் பொக்கிஷத்தம்மாள் சேதுவை நினைக்காத நாளே இருக்காது’ என்கிறார்கள் முத்துப்பட்டி மக்கள். ‘பத்து நாள் வேலைக்குப் போனா, ரெண்டு நாள் சம்பளத்தை, கோயில் குளம்னு சுத்த எடுத்து வச்சிடும்’ என்கிறார்கள்.

‘‘இந்தத் தள்ளாத வயசுல வேலை செய்ய முடியாம கஷ்டப்படறியே... பேசாம ரேஷன் கார்டுல இருந்து பையன் பேரை எடுத்துடு. முதியோர் பென்ஷனாவது கிடைக்கும்னு ஊர்க்காரங்க பல பேரு சொன்னாங்க. ஆனா, என்னைக்கோ ஒருநாள் என் பையன் திரும்பி வருவான்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. அதான் காத்திருந்தேன்’’ என்று நெகிழும் பொக்கிஷத்தம்மாளுக்கு இப்போது வயது 65. இப்படி ஒரு மகனை வைத்துக்கொண்டு எப்படி ஜீவனம் செய்ய முடியும் அவரால்? ‘‘ஒரு டம்ளர் தண்ணி மட்டும்தான் கிடைக்குதுன்னாலும், அதை என் புள்ளைக்குத் தந்து அவனைக் காப்பாத்துவேன். என் உசுரை விட எனக்கு என் புள்ள முக்கியம்!’’ என்று வைராக்கியத்தோடு சொல்கிறார் அவர்.
அம்மாவை நீண்ட நேரத்துக்குப் பிறகே அடையாளம் கண்ட சேது இப்போது அடிக்கடி கேட்கும் கேள்வி... ‘‘அமல்ராஜ் எங்கம்மா?’’
‘‘நான் என்ன பதிலைச் சொல்லட்டும்யா?’’ என்கிறார் பொக்கிஷத்தம்மாள்.
எப்படி வந்தார்?சேதுவின் பாதை எப்படி மீண்டும் முத்துப்பட்டி திரும்பியது? சென்னை ‘உதவும் கரங்கள்’ நிறுவனர் வித்யாகர்தான் அந்தப் பாதையைக் கண்டுபிடித்திருக்கிறார்.
‘‘உதவும் கரங்களுக்கு எப்பவுமே பக்கத்து மாநில தொண்டு நிறுவனங்களோட நல்ல தொடர்பு உண்டு. அந்த வகையில கேரளாவுல எர்ணாகுளம் பகுதியில உள்ள ஒரு தொண்டு நிறுவனத்துக்கிட்ட இருந்துதான் சேது பத்திய தகவல் கிடைச்சது. கிட்டத்தட்ட 10 வருஷமா அந்தத் தொண்டு நிறுவனத்துலதான் இருந்திருக்கார் சேது. அதுக்கு முன்னால எர்ணாகுளம் நகரத்து தெருக்கள்ல சுத்திக்கிட்டிருந்திருக்கார். மனநல பாதிப்புன்னாலும் தனக்குத் தெரிஞ்ச விபரங்களை ஓரளவுக்கு எழுதிக் காட்டவும், பேசவும் முடிஞ்சதால சேதுவை கோர்ட் ஆர்டர்படி எங்களோட கோவை கிளையில கொண்டு வந்து விட்டாங்க அவங்க. நாங்க சிகிச்சை தந்ததுல ஓரளவு குணமானார். கூடவே தன்னோட கிராமத்துப் பேரையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சார். அதுக்குப் பிறகு முத்துப்பட்டிக்குத் தகவல் தர, பொக்கிஷத்தம்மா வந்து புள்ளைய அடையாளம் கண்டாங்க. அம்மாவும் மகனும் சேர்ந்த அந்த நிகழ்ச்சி எங்களோட சேவை வரலாற்றுல மறக்க முடியாத நெகிழ்ச்சி’’ என்கிறார் வித்யாகர்.
அய்யனார் ராஜன்
படங்கள்: கார்த்தி