முருகன், சாந்தன், பேரறிவாளன் மூன்று பேரின் மரணதண்டனைக்கு இரண்டு மாதம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது உயர் நீதிமன்றம். ‘தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்’ என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது தமிழக சட்டமன்றம்.
‘ஒரு சமூகம் நாகரிகம் அடைந்திருக்கிறது என்பதை அளந்து பார்க்கும் கருவிகளுள், குற்றம் சாட்டப்பட்டவரை அச்சமூகம் எப்படி நடத்துகிறது என்பது முக்கியமாகும்’ என்கிறார் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.என்.பகவதி.
ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் காவல்துறை நடந்து கொண்ட விதம் கொடுமையிலும் கொடுமை.
வெற்றுடம்பில் அடிப்பது, ஷூ காலால் கால் விரல்களை மிதிப்பது, முழங்காலால் எட்டி உதைத்து சிறுநீரகத்தின் விதைப்பையைத் தாக்குவது, முழங்காலை மடக்கி & கைகளை நீட்டி (இருக்கையில் அமர்வது போன்ற பாவனையில்) நிற்க வைத்துப் பின்னங்காலில் அடிப்பது, பிவிசி பைப்பில் சிமென்ட் நிரப்பி கைகளின் முட்டிகளில் அடிப்பது, சுவரில் முதுகைச் சாய்த்து உட்கார வைத்துக் கால்களை 180 டிகிரியில் வலிக்க வலிக்க விரிப்பது, பென்சில் & சிறு கட்டைகளை விரல்களுக்கிடையில் வைத்து அழுத்திப் பிடித்துத் திருகுவது, நகக் கண்களில் ஊசி குத்துவது, கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டுவது, காயம் ஏற்படாமல் உள்ளங்காலில் கம்பால் அடித்துப் பிறகு குதிக்கச் சொல்வது...
1991ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி இரவு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன், 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்குள் இடைப்பட்ட எட்டு நாட்களில் அனுபவித்த சித்ரவதைகள் இவை.
இவற்றையெல்லாம் தனது ஒரு கடிதத்தில் பகிரங்கப்படுத்தியிருக்கும் பேரறிவாளன், ‘‘குடிப்பதற்குத் தண்ணீர் தர மறுத்தனர். பொய்யான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளாதவரை குடிக்க நீர் தரமாட்டோம் என்பார்கள். பின்னர் அவர்களே சிறிது நீர் ஊற்றுவார்கள். இரவுகளில் தூங்கவிட மாட்டார்கள். தூங்கினால் முகத்தில் தண்ணீர் ஊற்றுவார்கள். உணவையும் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தினர்’’ என்கிறார்.
மரணம் என்பது ஒரு நொடி. ஆனால் இவர்கள் இருபது வருடங்களுக்கும் மேலாக மரணத்தின் பயத்திலேயே காலத்தைத் தள்ளியிருக்கிறார்கள். இதற்கு மேலும் இவர்களுக்குத் தூக்கு தண்டனை தர வேண்டும் என வலியுறுத்துவது மனிதாபிமானம் ஆகாது. ஒரு மனிதன் தூக்கிலிடப்படுவதை நேரில் பார்க்கும் ஒருவன், அதன் அகோரத்தை உணர்ந்தால் ஒருபோதும் தூக்கு தண்டனையை ஆதரிக்க மாட்டான்.
நளினி&முருகனின் மகள் அரித்ரா, பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட பெண் வழக்கறிஞர்கள் கயல்விழி, அங்கயற்கண்ணி, வடிவாம்பாள், காஞ்சிபுரத்தில் தீக்குளித்துத் தன் உயிரையே வெள்ளைக் கொடியாக ஏந்திப் போராடிய செங்கொடி என ஆண்களை விட பெண்கள் அதிக மூர்க்கத்துடன் தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். ஓர் உயிரின் விலையும் வலியும் உண்மையில் அவர்களுக்குத்தான் தெரியும்.
மரணம் என்பது ஒரு மெல்லிய குளிர்காற்றுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்து, மெல்ல மெல்ல உதிரும் ஒரு சருகின் மீது எழுதப்பட்ட வாசகமாக இருக்க வேண்டும். இயற்கை வழங்கும் ஓர் உயிரின் வாழ்வுரிமையை மீண்டும் எடுத்துக் கொள்வதற்கு இயற்கைக்கு மட்டும்தான் உரிமை உண்டு.
மூன்று பேரின் மரண தண்டனையை நிறைவேற்றியே ஆக வேண்டுமென்று மனிதாபிமானமற்ற குரலில் முறையிடுகிறவர்களுக்கு நான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கடிதத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.
அடிமை இந்தியாவில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர் ராபர்ட் வில்லியம் ஆஷ் துரையின் குடும்பத்தினர் சமீபத்தில் வாஞ்சிநாதன் குடும்பத்தினருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்கள். அது ஆய்வாளரும் பேராசிரியருமான ஆ.இரா.வேங்கடாசலபதி மூலமாக வந்தடைந்தது.

‘துயரமும் பெருமிதமும் ஒருங்கே அமைந்த இந்த நாளில், ராபர்ட் வில்லியம் ஆஷ் அவர்களின் பேரனும், கொள்ளுப் பேத்திகளுமாகிய நாங்கள் வாஞ்சிநாத அய்யரின் குடும்பத்திற்கு ஆறுதலையும் நட்பையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறோம். லட்சிய நோக்கமுள்ள அரசியல் செயல்பாட்டினால், வாஞ்சிநாதனின் விடுதலை வேட்கை எங்கள் தாத்தா ஆஷை கல்லறைக்கு அனுப்பியது.
அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர்கள் அவ்விருவரும். ஆட்சியாளர்கள் ஆனாலும், பெரும் பிழைகளைச் செய்யும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இப்போது உயிர் வாழும் வாய்ப்பைப் பெற்றுள்ள நாம், பழையவற்றை மறந்து சமாதானத்துடன் வாழ்வது முக்கியமானது.’
& இதுதான் உலகளாவிய மனிதாபிமானத்தின் கைகுலுக்கல். காற்றைப் போல, மழையைப் போல வீசும் மனித நேசம். முருகன், சாந்தன், பேரறிவாளன் மூன்று பேருக்கும் தூக்கு தண்டனையைத் தந்தே ஆகவேண்டும் என்று நினைக்கிற மனிதரல்லாத ஒவ்வொருவரும், இந்தக் கடிதத்தை ஒரு லட்சம் தடவை மனப்பாடம் செய்து வீட்டுப்பாடமாக எழுதிப்பழக வேண்டும். அறுபதாயிரத்தைத் தாண்டும்போது அவர்கள் மெல்ல மெல்ல மனிதராவதை உணரத் தொடங்குவார்கள்.
எம்.ஜி.ஆரின் கடவுள்கள்!முதன்முறையாக ‘எம்.ஜி.ஆர் பேட்டிகள்’ நூலாக்கம் பெற்று வந்திருப்பதைப் படித்தேன். தொகுப்பு: எஸ்.கிருபாகரன். வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ்.
புரட்டியதும் என் கண்ணில் பட்டவை...
உங்கள் வீட்டில் பூஜை அறை உண்டா? எந்தக் கடவுளை வணங்குகிறீர்கள்?
‘என் பூஜை அறையில் என் தாய்&தந்தை, மகாத்மா காந்தியடிகள், என் வாழ்க்கைத் துணைவியின் தாய் & தந்தையரின் படங்கள் இருக்கின்றன. (அதோடு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று உண்டு!). இவர்கள்தாம் நான் வணங்கும் தெய்வங்கள்’ அடுத்தடுத்து ஆளுமையும் அபூர்வமுமான அவரது பக்கங்கள். இன்றைய நடிகர்களும் அரசியல்வாதிகளும் கற்றுக் கொள்ள & தெரிந்து கொள்ள நிறைய செய்திகள் புரள்கின்றன.
‘நான் செத்துப் பொழச்சவண்டா & அந்த எமனப் பார்த்து சிரிச்சவண்டா’ என்று படத்தில் பாடி ஆடியவர், ‘சாக வேண்டும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா’ என்ற கேள்விக்கு, ‘நினைத்ததுண்டு’ என்று மட்டும் பதில் சொல்கிறார். நான் கவனித்த சில கேள்வி பதில்கள்:
நீங்கள் பெற்ற உதவிகளில் பெரிதெனக் கருதுவதும் மறக்க முடியாததும் எது ?
கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள் கீழ்பாக்கத்தில் குடியிருந்தபோது அவரது வீட்டிலேயே கோவிந்தன் என்ற தோழர் ஒருவர் இருந்தார். பத்து, பதினைந்து என்று மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அந்தத் தோழர் தன்னுடைய குடும்பத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல் எனக்கு ஒரு நாள் இரண்டு ரூபாய் கொடுத்து உதவியதை மறக்க முடியாது. ஆனால் அந்த நண்பரைத் தேடித் தேடி அலைகிறேன். என்னால் அந்தத் தோழனைக் காண முடியவில்லை.
கல்கியின் நாவலான ‘பொன்னியின் செல்வனை’ப் படமாக்கப் போவதாக அறிவித்தீர்களே... அது எந்த நிலையில் இருக்கிறது?
படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதை கலரில் எடுக்கப் போகிறேன். ஆங்கிலத்திலும் எடுக்க வேண்டுமென்ற ஓர் எண்ணம் இருக்கிறது. ஆங்கில வசனங்களை அண்ணாவை எழுதும்படி கேட்கப் போகிறேன்.
‘பத்மஸ்ரீ’ பட்டத்தை இந்தி மொழியில் இருக்கிறது என்று கூறி பெற மறுத்த தாங்கள், எப்படி ‘பாரத்’ பட்டத்தை மட்டும் பெற்றுக்கொள்ள முன்வந்தீர்கள்?
அந்தப் பட்டம் வேண்டாம் என்று சொன்ன சமயம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இந்தி ஆட்சி மொழி ஆகக்கூடாது என்பதற்காக மாணவர்கள் போராடிக் கொண்டிருந்த நேரம். அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மாணவர்களை சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்த காலம். ஆட்சியாளர்களின் செயலை எதிர்ப்பதையும் வெறுப்பதையும் எடுத்துக் காட்டவே அந்த நேரத்தில் அதைச் செய்தேன்.
சினிமா பாட்டுன்னா எப்படி இருக்க வேண்டும்?
பாடல் என்றால் அதில் பொருள் இருக்க வேண்டும். இசையும் கலந்திருக்க வேண்டும். கூச்சலாகவும், வெறும் வார்த்தைகளாலும், கருத்தில்லா பாடல்களாலும் பயன் இல்லை.
நான் மலேஷியாவைச் சேர்ந்தவன். சென்னை வந்தால் உங்களை நேரில் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பாக்கியம் கிடைக்குமா?
என் புகைப்படத்தை அனுப்புகிறேன். அதே அளவுள்ள உங்கள் படத்தையும் சேர்த்து நுணுக்கத் திறமையுள்ள புகைப்பட நிபுணரிடம் கொடுத்து இணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மலேஷியாவிலிருந்து இங்கு வருவதற்கு ஆகும் செலவுத் தொகையை அங்கே உள்ள வேலையில்லாமல் கஷ்டப்படுகின்ற ஏதாவதொரு தொழிலாளர் குடும்பத்திற்குப் பயன்படுத்தலாமே!
உயிர்த்தெழுந்த நாட்கள்நாம் வாழவே எழுந்தோம்சாவை உதைத்துமண்ணிலெம் காலை ஆழப்பதித்துமரணதேவதை இயற்கையாய் வந்துவருக என்னும் இறுதிக் கணம் வரைமூக்கும் முழியுமாய்வாழவே எழுந்தோம். வ.ஐ.ச.ஜெயபாலன்
(சலசலக்கும்...)
பழநிபாரதி