டோனிக்கு எதற்கு விருது?இங்கிலாந்தில் டாக்டர் பட்டம் வாங்கிய டோனி, அதைக் கொண்டாட முடியாதபடி அடுத்த சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளில், ‘ஸ்பிரிட் ஆஃப் த கிரிக்கெட்’ என்ற விருதும் உண்டு. நேர்மையாகவும் கண்ணியமாகவும் விளையாடும் வீரர்களிலிருந்து ஒருவரை இந்த விருதுக்குத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த ஆண்டு இதற்கு இறுதி செய்யப்பட்டவர்கள் காலிஸும் டோனியும். இரண்டுமுறை கேட்ச் பிடிக்கப்பட்டபோது, ஃபீல்டரிடம் கேட்டுவிட்டு வெளியேறினார் காலிஸ். சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டான இங்கிலாந்து வீரர் இயான் பெல்லை மீண்டும் விளையாட அனுமதித்த கேப்டன் என்பதால் டோனி இடம்பெற்றார். ஆனால், ‘‘இங்கிலாந்து அணி கேட்டதால்தான் பெல்லை டோனி அனுமதித்தார். தானாகவே முடிவெடுத்து கண்ணியமாக செயல்படாத அவருக்கு எப்படி விருது தரமுடியும்?’’ என்று எகிறியிருக்கிறார் அம்பயர் டேரல் ஹார்ப்பர்.
நினைவுக் குளம்!அமெரிக்க உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டதன் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலியை இந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்கா அனுசரிக்கிறது. இரட்டை கோபுரங்கள் இருந்த இடத்தில் இந்த ஆண்டு ஒரு நினைவுச்சின்னம் திறக்கப்படுகிறது. இரண்டு கோபுரங்களும் வானுயர நின்றிருந்த இடத்தில் இரட்டைக் குளங்கள். நீரூற்றுகள் அவற்றில் எப்போதும் தண்ணீரைப் பீய்ச்சியடிக்க, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பித்தளைப் பலகையும் வைக்கப்படுகிறது.
மேதையின் பிரிவு!பிரபல ‘ஆப்பிள்’ கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து உடல்நிலையைக் காரணம் காட்டி விலகியிருக்கிறார் ஸ்டீவ் ஜாப். தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய ஜாப், ஒரு படிக்காத மேதை. ஆம், ‘ஐபாட்’, ‘ஐபேட்’, ஐபோன்’ என அதிசயக் கருவிகளை உலகத்துக்குத் தந்த ஜாப், பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் பாதியிலேயே வெளியேறியவர். அப்பாவும் அம்மாவும் புறக்கணித்ததால், வேறொரு தம்பதியின் அரவணைப்பில் வளர்ந்தவர். வறுமையில் பசியில் வாடி, ‘ஹரே கிருஷ்ணா’ ஆலயத்தில் தந்த பிரசாதத்தை உண்டு வாழ்ந்தவர். ஆனாலும் தனது தேடல்களையும் லட்சியத்தையும் கைவிட்டதில்லை அவர். அதுவே அவரை சிகரத்தில் நிறுத்தியது. தேடல் இருக்கும் யாரும் ஜெயிக்கலாம் என்பதற்கு வாழும் உதாரணம், ஸ்டீவ் ஜாப்!
அன்பு மெஸேஜ்!எதிரிகளை எப்படி மதிப்பது என்பதை பிரதமர் மன்மோகன் சிங்கிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஊழலை எதிர்த்து 288 மணி நேர உண்ணாவிரதம் இருந்து, பிரதமரை நிலைகுலைய வைத்தவர் அன்னா ஹசாரே. உண்ணாவிரதம் இருந்ததால் மோசமடைந்த உடலைத் தேற்றிக்கொள்ள, டெல்லியை அடுத்த குர்கானில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அன்னா. அவருக்கு தன் பர்சனல் உதவியாளர் மூலம் ஒரு பொக்கேவும், ‘சீக்கிரம் உடல்நலம் பெறுங்கள்’ என்ற அன்பு மெஸேஜும் கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறார் பிரதமர்.
அதற்காக அடைக்கலம்!லிபியாவில் வீழ்ந்திருக்கிறது கடாபியின் ஆட்சி. அவரது மிகப்பெரிய குடும்பத்தில் பலரும் என்ன ஆனார்கள் என்பது குழப்பமாக இருக்க, ஒரு நெகிழ்ச்சியான அடைக்கலமும் நடந்தேறி இருக்கிறது. கடாபியின் இரண்டாவது மனைவியும், அவரது 3 வாரிசுகளும் இரண்டு கார்களில் அல்ஜீரிய நாட்டு எல்லைக்குள் நுழைந்து அடைக்கலம் கேட்டனர். உடனே அவர்களுக்கு அனுமதி கிடைத்தது. காரணம், கடாபியின் 30 வயது மகள் ஆயிஷா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததுதான். திங்கள்கிழமை அல்ஜீரியாவில் அடைக்கலமான ஆயிஷாவுக்கு மறுநாளே பெண் குழந்தை பிறந்தது. வழக்கறிஞரான ஆயிஷா, சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இராக் கோர்ட்டில் வாதாடியவர்.
அதுதான் பெரிசு!அன்னா ஹசாரே உண்ணாவிரதம் பற்றி அநேகமாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரித்தோ, எதிர்த்தோ கருத்து தெரிவித்திருந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மௌனம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அமைதி காத்தது. காரணம், ‘‘ஊழலைவிட விலைவாசி உயர்வுதான் மக்களை அதிகம் பாதிக்கிறது என்ற கருத்து கொண்டவர் மம்தா. விலைவாசியைக் குறைக்கும் முயற்சியில் அவர் இருக்கிறார். அதனால்தான் கருத்து சொல்லவில்லை’’ என்கிறார்கள் அவரது கட்சியினர்.