சன் பிக்சர்ஸின் ‘மங்காத்தா’ அஜித்துக்கு 50வது படம். ஆனால் அவருடன் இன்னொரு ஹீரோவாகியிருக்கும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனுக்கோ, இது அவரது சினிமாப் பயணத்தில் 30வது வருடப்படம். 80களின் தொடக்கத்தில் சினிமாவுக்குள் வந்தவர் அர்ஜுன். அதற்குப்பின் இயக்குநர் ஷங்கர் சினிமாவுக்கு வந்த 90களிலும் அவரது தேவைக்கான ஹீரோவாக இருந்தவர், இன்றைய வெங்கட்பிரபு யுகத்திலும் தவிர்க்க முடியாத ஹீரோவாகவே பவனிவருகிறார்.
இதற்கு முன் கமல், மம்மூட்டி, நானா படேகர் படங்களில் இணையான ஹீரோவாக அவர் நடித்திருந்தாலும், அவருக்கு ஜூனியரான அஜித்துடனும் நடித்திருப்பது புருவத்தை உயர்த்த வைத்த சங்கதி. அதுபற்றி மனம் திறந்தார் ஆக்ஷன் கிங்.
‘‘அதுக்கு இருக்கிற சில காரணங்கள்ல முதலாவது, ‘ஏன் நடிக்கக்கூடாது...’ங்கிற கேள்வி. தனி ஹீரோவா இன்னும் நடிச்சுக்கிட்டிருக்கேன்ங்கிறதுக்காக இன்னொரு ஹீரோவோட சேர்ந்து நடிக்கக்கூடாதுன்னு எதுவும் இல்லை. அதோட இது அஜித் சாருக்கு 50வது படம். அவர் தன் படத்தில நான் இருக்கணும்னு விரும்பினார். கட்டாயப் படுத்தாம, ‘உங்க கேரக்டர் பிடிச்சிருந்தா நடிங்க...’ன்னு கேட்டார். அது இன்னொரு முக்கியமான காரணம். அவர் ஒரு இளைய ஹீரோ. அவரே கேக்கும்போது எனக்கு என்ன தயக்கம் இருக்கப்போகுது..?

அதோட, எப்பவுமே என்னைப் புதுப்பிச்சுக்கிட்டே இருக்கணும்னு விரும்புவேன். நீங்க குறிப்பிட்ட சீனியர் ஹீரோக்களோட நடிக்கும்போதும் என்னைப் புதுப்பிச்சுக்க முடிஞ்சது.
அவங்ககிட்டேயிருந்து நல்ல அனுபவங்கள் கிடைச்சது. நான் சின்ன வயசிலேயே சினிமாவுக்கு வந்துட்டாகூட, எங்கப்பா என்னை டைப் ரைட்டிங் கத்துக்கச்சொல்லி வற்புறுத்தினார். ‘எனக்கு எதுக்குப்பா இதெல்லாம்..?’னு மறுத்தப்ப, ‘என்னைக்காவது உபயோகப்படும்’னு சொன்னார். இன்னைக்கு லேப்டாப் வரும்னு அன்னைக்குத் தெரியாது. ஆனா இப்போ எழுத்துகளைத் தடவிக்கிட்டிருக்காம கண்ணை மூடிக்கிட்டு டைப் பண்ண என்னால முடியுதுன்னா அது அன்னைக்குக் கத்துக்கிட்ட டைப்ரைட்டிங்தான். அதனால எப்பவும் என்னை அப்டேட் பண்ணிக்கிட்டே இருந்திருக்கேன். இன்றைய யூத்களின் ரீணீபீரீமீts என்னென்னங்கிறது எனக்கு அத்துப்படி. அப்படி சினிமாவிலும் என்னை அப்டேட் பண்ணிக்க இப்படியொரு படத்தில நடிக்க ஆர்வம் காட்டினேன். அதுக்காகவே என் சீனியாரிட்டி, நான் ஒரு டைரக்டர்னு எல்லாத்தையும் தாண்டி வெங்கட்பிரபு என்ன சொன்னாரோ அதை மட்டும் செய்தேன். அது நல்ல எக்ஸ்பீரியன்ஸ்...’’
‘‘இன்னும் உங்க உடற்கட்டும், ஆக்ஷனும் அப்படியே இருக்கு. அந்த சீக்ரெட் என்ன..?’’‘‘நான் நானா இருக்கேன். மத்தவங்க சொல்லி நான் ஜிம்முக்குப் போகலை. கண்ணாடியில என் உருவத்தைப் பார்க்கும்போது எனக்கு நான் சரியான ஃபிட்டா தெரியணும். இரவு எத்தனை லேட்டா தூங்கினாலும் காலையில என் தலையில நானே தட்டி, என் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளி ஒர்க் அவுட்டுக்கு ரெடியாகிடுவேன். கைகளுக்கு ‘பஞ்ச்’, கால்களுக்கு ‘கிக்’ன்னு தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கிட்டேயிருக்கேன்.’’
‘‘‘மங்காத்தா’வில உங்க கேரக்டர் உங்க ‘நாட்டுப்பற்று’ இமேஜுக்குப் பொருத்தமா இல்லைன்னு உணர்ந்தீங்களா..?’’‘‘ஒரு நாள் முதல்வரா நடிச்சா நான் சி.எம்மா..? அப்படித்தான் இந்தப்படத்து கேரக்டரும். படம் என்ன சொல்லுதோ நடிகன் அதுக்கு நேர்மை தந்தாகணும். நாட்டுப்பற்றுங்கிறது சினிமா தாண்டிய சுய உணர்வு. இதில வேடிக்கை என்னன்னா, நானே என் கேரக்டர்கள்ல சில மாறுதல்கள் செய்ய முயற்சிக்கும்போதெல்லாம், ‘சார்... இது உங்க ‘நாட்டுப்பற்று’ இமேஜுக்கு சரியா வராது’ன்னு பயமுறுத்தி டைரக்டர்ஸ் என்னை பாஸிட்டிவாவே மாத்திடுவாங்க. இங்கே தைரியமா எனக்கு வாய்ப்பு தந்தாங்க. நடிகர்களைத் தாண்டி ஒரு கதை, கதையா வெளிப்படறது ஆரோக்கியமான விஷயம். அதுதான் ‘மங்காத்தா’வோட வெற்றி. அஜித்தே கெட்டவர்ன்னும்போது நான் மட்டும் நல்லவனாவே இருந்தா எப்படி..? (சிரிக்கிறார்...) இப்ப இதை எல்லாரும் அற்புதம்னு பாராட்டறாங்க...’’
‘‘அஜித் ஷூட்டிங்ல எப்படி..?’’‘‘சில பேரை தூரத்திலேர்ந்தே பார்த்து விஷ் பண்ணிட்டுப் போயிடும்போது அவங்களைப் புரிஞ்சுக்க முடியாம போயிடும். இதில அஜித்தை நெருங்கிப் பார்க்க நேர்ந்தப்ப, அவரோட பணிவான குணத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். நான் முதல் நாள் நடிக்க வந்தப்ப அவருக்கு சீன் இல்லைன்னாலும், சீனியர் நான் வந்ததுக்காக செட்டுக்கு வந்தார். ‘நீங்க எதுக்கு இங்கே..?’ன்னு கேட்டேன். ‘சும்மாதான்... நீங்க நடிங்க சார்’ன்னு பெருந்தன்மையோட கூடவே முழுவதும் இருந்தார். அதேபோல என்கிட்ட அவர் அடி வாங்கற சீனை வேற ஹீரோக்கள் நடிக்கவே மாட்டாங்க. நானே இதைத் தவிர்த்துடலாம்னு சொன்னேன். அவர்தான், ‘என்னை அடிங்க சார்...’ன்னு கேட்டு அடிவாங்கி நடிச்சார். அது பெரிய விஷயம். ‘ஜென்டில்மேன்’ங்கிற வார்த்தைக்குப் பொருத்தமானவர் அஜித்..!’’
அதை ஒரு ‘ஜென்டில்மேனே’ சொல்லக் கேட்டது சுவாரஸ்யம்தான்..!
வேணுஜி