படத்துக்குப் படம் புதிய உயரத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதற்கு அடையாளங்களாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் பேச்சில் கூடுதல் அடக்கமும், செறிவூட்டப்பட்ட தமிழும் குடிகொண்டிருக்கின்றன. கேள்விகளில் மிளகாயை வைத்தாலும், மென்மையான பதிலில் அதன் காரத்தை இளக்கிவிடும் பக்குவம் இன்னும் அவர் தொடக்கூடிய உயரங்களைக் காட்டுகின்றன.
தேசியவிருதுகளைக் குவித்த சன் பிக்சர்ஸின் ‘ஆடுகள’த்தின் குறையாத வீரியம் மான்ட்ரீல் உலகப்பட விழாவிலும் வெளிப்பட... தயாரிப்பாளர் கதிரேசன், இயக்குநர் வெற்றிமாறனுடன் கனடா பறந்துவந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் ஜி.வி.
‘‘நான் இசையமைச்ச ‘வெயில்’ படம், கான்ஸ் படவிழாவில கலந்துக்கிட்டாலும் நான் கலந்துக்கிட்ட முதல் உலகப்படவிழா இதுதான். மான்ட்ரீல் படவிழாவை ஒரு திரைப்படத் திருவிழான்னு சொல்லலாம். உலகம் முழுக்க இருந்து வந்த 5 ஆயிரம் படங்களைப் பார்த்து வடிகட்டி, 387 படங்களைத் தேர்ந்தெடுத்து, பத்து நாட்கள் திரையிட்டாங்க. தெருவுக்குத் தெரு தியேட்டர்கள் இருக்கு அங்கே. அன்னன்னைக்குத் திரையிட்ட படங்களின் டெக்னீஷியன்களோட பார்ட்டிகள் நடந்தது. நாங்க அப்படி துருக்கி, அர்ஜென்டினா, சீனான்னு பல நாட்டு சினிமாக் கலைஞர்களை சந்திச்சுப் பேசினோம். உலக சினிமா பற்றித் தெரிஞ்சுக்க அது ஒரு நல்ல ப்ளாட்ஃபார்ம்.
நம்ம நாட்டு அடையாளத்தோட நாம வெளிப்படறதுதான் சர்வதேசத்தரம்ங்கிறதுக்கு ‘ஆடுகளமே’ உதாரணம். படம் முடிஞ்சதும் அத்தனை நாட்டுக் கலைஞர்களும் எழுந்து நின்னு ஸ்டாண்டிங் ஓவேஷன் கொடுத்தது மறக்கமுடியாத தருணம். வெற்றிமாறன், தனுஷ், ஜெயபாலனோட பங்களிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. குறிப்பா ஜப்பானியர்கள் இந்தப்படத்தையும், இசையையும் ரசிச்சது புரிஞ்சது.

தமிழ் பற்றி ஆச்சரியமா விசாரிச்சாங்க. படத்தோட களமான மதுரை எங்கிருக்குன்னு கேட்டாங்க. அந்த விஷயத்தில இந்தியாவுக்கான புது அடையாளத்தை ‘ஆடுகளம்’ கொடுத்திருக்கு. டொரன்டோ ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கும் ‘ஆடுகளம்’ தேர்வாகியிருக்கு...’’
‘‘ஆறு தேசிய விருதுகளைக் குவிச்ச படத்தில, இசைக்கான விருது கிடைக்காததில வருத்தம் இல்லையா ஜி.வி..?’’
‘‘நிச்சயமா இல்லை. ‘ஆடுகளம்’ பெற்ற விருதுகள்ல எனக்கான அங்கீகாரமும் இருக்கு. இன்னொரு விஷயம், அந்த விருதுக்குழுவிலேர்ந்த ஜூரி ஒருத்தர் இறுதிக்கட்டம் வரை என் இசையும் விருதுப்பட்டியல்ல இருந்ததையும், எல்லா விருதுகளும் தமிழுக்கேன்னு ஆயிடக்கூடாதுங்கிற அடிப்படையில அது தவிர்க்கப்பட்டதாகவும் சொன்னார்..!’’
‘‘இந்திக்குப் போயிருக்கீங்க. எப்படி இருக்கு பாலிவுட்..?’’
‘‘அனுராக் காஷ்யப்போட ‘தேவ். டி’ என்னைக் கவர்ந்த படம். ‘ஆயிரத்தில் ஒருவனை’ப் பார்த்துட்டு என்னைப் பாராட்டிய அவர், அப்படியே அவரோட ‘கேங்ஸ் ஆஃப் வாசேபூர்’ படத்துக்கு இசையமைக்கக் கேட்டார். அதேபோல ஃபரா கானோட ‘ஜோக்கரு’க்கும் வாய்ப்பு வர... ரெண்டையும் ஒத்துக்கிட்டேன். ‘ஜோக்கர்’ என் முதல் இந்திப்படமா வெளியாகும்...’’
‘‘சைந்தவியோட நிச்சயிச்ச கல்யாணத்தை ஒரு வருஷம் தள்ளிப் போட்டிருக்கீங்களே..?’’
‘‘அதுக்கு முன்னால எட்டு வருஷமா காதலிச்சுக்கிட்டிருக்கோமே..? என் இந்திப்படங்கள் வெளியாகணும். தமிழ்ல பாரதிராஜா, செல்வராகவன், விஜய் படங்கள், தெலுங்கில ஒரு படம்னு ஓடிக்கிட்டிருக்கேன். கல்யாணம் ஆகிட்டா குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கணும். அதனால கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டுப் பண்ணிக்கலாம்னு ஒரு திட்டம்தான்...’’
‘‘ரெண்டு தலைமுறைகள் மூத்த பாரதிராஜாவோட அணுகுமுறை எப்படி இருக்கு..?’’
‘‘பாரதிராஜாவோட ‘அன்னக்கொடியும், கொடிவீரனும்’ எனக்கு ஒரு புது அனுபவம். அவர் கதை சொல்ற விதத்தில அனுபவம் புரியுது. அவர் எதிர்பார்க்கிற இசையும் எனக்குப் புதுசுதான். அது ரசிகர்களுக்கும், புது அனுபவமா இருக்கும்..!’’
வேணுஜி