நியூஸ் வே

தன் மும்பை வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தோடு விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தவறியதில்லை தமன்னா. இந்த ஆண்டு ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்குக்காக பிரான்ஸ் செல்ல வேண்டியிருக்க, தவித்து விட்டார் தமன்ஸ். எப்போதும் தன்னுடன் ஷூட்டிங்குக்கு வரும் அம்மாவை இந்தமுறை மும்பையில் இருந்து, தன் சார்பாக விநாயகரிடம் வேண்டிக்கொள்ளச் சொன்னவர், திரும்பி வந்ததும் ‘சாரி’ கேட்கப் போகிறாராம் விநாயகரிடம்!
சர்வதேச கிரிக்கெட்டில் நூறாவது செஞ்சுரி அடிக்கும் வாய்ப்பு தள்ளிப் போய்க்கொண்டிருந்தாலும், சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி அடைய சில தருணங்கள் இங்கிலாந்தில் அமையத்தான் செய்தது. டிரஸ்ஸிங் ரூமில் இருந்தபோது அவரைப் பார்க்கவந்த ஒருவர், ‘‘நான் உங்கள் தீவிர ரசிகன்’’ என்று சொல்லி கைகுலுக்கி, நீண்டநேரம் பணிவாகப் பேசிக்கொண்டிருந்தார். அந்த ரசிகர், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன். இதில் நெகிழ்ந்துவிட்டார் சச்சின்.
கோழிக்கோடு ஐ.ஐ.எம்.முக்கு தன் அமைச்சரவை சகாக்களோடு சென்று நிர்வாகப் பாடம் படித்து வந்திருக்கிறார் கேரள முதல்வர் உம்மன்சாண்டி. செல்போனில் கதைக்க முயன்ற அமைச்சர்களை கண்டித்து, சுவிட்ச் ஆஃப் செய்யச் சொன்னவர், நாள் முழுக்க நிர்வாக மந்திரங்களை சிரத்தையாகக் கற்றார்.
‘காஞ்சனா’, ‘மங்காத்தா’ படங்களுக்குப் பிறகு வாய்ப்புகள் தேடிவரும் என்ற எதிர்பார்ப்பில் பொறுப்பாக சென்னையில் செட்டிலாகி விட்டார் லக்ஷ்மி ராய். சாலிகிராமத்தில் வீடு பார்த்து குடியேறி இருக்கும் அவர், வரும் சான்ஸ்கள் தொடர்பாக கதைகளைக் கேட்பது மட்டும் ஒரு ஓட்டலில். சென்டிமென்ட்தான் காரணம்!
|