சிங்கங்கள் வாழும் காட்டில் விவசாயம் செய்யும் இளைஞர்!



இந்தியாவில் அதிகமாக சிங்கங்கள் வாழும் பகுதி, கிர் காடுகள். குஜராத்தில் வீற்றிருக்கும் இந்த காடு, சுமார் 1,400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. சிங்கம் மட்டுமல்லாமல் பல உயிரினங்களின் சரணாலயமாகத் திகழ்கிறது கிர். இந்தக் காட்டில் விவசாயம் செய்து வருகிறார் சித்தார்த் குபாவத் என்ற இளைஞர். வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் ஒரு விஷயமாக விவசாயத்தைத் தகவமைத்துக் கொண்டது சித்தார்த்தின் தனித்துவம்.

மட்டுமல்ல, தான் கற்றுக்கொண்ட  விவசாயம் குறித்த விஷயங்களை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பது அவரது சிறப்பு. குஜராத்தில் உள்ள ஜூனாகத் நகரில் பிறந்து, வளர்ந்தவர் சித்தார்த் குபாவத். சிறு வயதிலிருந்தே ஐஐடியில் படிக்க வேண்டும் என்பது சித்தார்த்தின் கனவு. அதனால் பத்தாவது படிக்கும்போதே ஐஐடி நுழைவுத்தேர்வுக்காகத் தயாரானார். பாடப்புத்தகங்களைப் படித்துக்கொண்டே நுழைவுத்தேர்வுக்காகவும் படித்தார்.

தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக தேர்வுக்காக உழைத்தார். எப்போது தேர்வு வைத்தாலும் எழுதி, தேர்வாகிவிடுவேன் என்ற நிலையில்இருந்தார் சித்தார்த். ஆனால், ஒரு கட்டத்தில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அவருக்குள் உண்டானது. உடனே தேர்வுக்குத் தயாராவதை நிறுத்திவிட்டார். ‘‘தேர்வுக்குத் தயாராவதை ஓர் இயந்திரம் போல உணர்ந்தேன். உண்மையில் ஐஐடி மாதிரியான கல்வி நிறுவனங்கள் மனிதர்களுக்குப் பதிலாக இயந்திரங்களைத்தான் உருவாக்குகிறது. நான் இயந்திரங்களைப் பற்றித்தான் படிக்க விரும்பினேன்.

ஆனால், அவற்றில் ஒன்றாக நானும் மாற நேரிடும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எனது பார்வை வாழ்க்கை பக்கம் திரும்பியது. திடீரென்ற இந்த மாற்றத்துக்கு பெற்றோர்களும், நண்பர்களும் உறுதுணையாக இருந்தனர்...’’ என்கிற சித்தார்த், ஐஐடி கனவுகளை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு, வாழ்க்கையைக் குறித்தான தேடல்களில் இறங்கினார். 
ஐஐடி இல்லையென்றால் கலை சார்ந்த படிப்பில் கூட அவர் சேர விரும்பவில்லை. உண்மையில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற எந்த திட்டமிடலும் இல்லாமல் இருந்தார். தன்னுடைய விருப்பம் என்னவென்று தெரிந்துகொள்வதற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்குள் ஒரு வருடம் வேகமாக ஓடிவிட்டது.

பிசினஸ், சிறுதொழில், முதலீடு என பலவிதமான பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற்றார். எதுவுமே அவரது விருப்பத்துக்கு உகந்ததாக அமையவில்லை. எதுவுமே அவரது ஆர்வத்தையும் தூண்டவில்லை. ஒரு நாள் இயற்கை விவசாயம் குறித்த ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார். 
அந்த வகுப்பு சித்தார்த்தின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.‘‘இயந்திரத்திலிருந்து மனிதனாக மாற்றக்கூடிய ஆற்றல் இயற்கைக்கு மட்டுமே இருப்பதாக அந்த பயிற்சி வகுப்புகள் மூலம் தெரிந்துகொண்டேன். அப்படியான இயற்கையுடன் நெருக்கமாக நமக்கிருக்கும் ஒரே வழி விவசாயம்தான். தவிர, விவசாயத்தில் ஆராய்ச்சி செய்யவும், தேடிக் கண்டடையவும் நிறைய விஷயங்கள் இருப்பதாக உணர்ந்தேன்.

இது என்னை நானே கண்டடைய ஒரு நம்பிக்கையைத் தந்தது...’’ என்கிற சித்தார்த், இந்தியாவில் நடந்த முக்கியமான விவசாய வகுப்புகளில் எல்லாம் கலந்துகொண்டார். அவருக்குள் இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம் அதிகமானது.இனிமேல் இயற்கை விவசாயம்தான் தனது எதிர்காலம் என்று ஒரு மனதாக முடிவு செய்தார் சித்தார்த். மக்கள் வாழ்கின்ற பகுதியில் இல்லாமல், ஒரு காட்டுப்பகுதியில் இயற்கையுடன் இணைந்தபடி விவசாயம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு இடத்தைத் தேடினார்.

2020ம் வருடம் கிர் காடுகளில் விவசாயம் செய்வதற்கான நிலத்தை வாங்கினார் சித்தார்த். அங்கே நிலம் வாங்கி விவசாயம் செய்ய யாருடைய ஆதரவும் சித்தார்த்துக்குக் கிடைக்கவில்லை. ஒருவித ஏளனத்துடன் அவரைப் பார்த்தனர். 

நன்றாக விவசாயம் செய்து, நிறைய உற்பத்தி செய்து அதிக வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பது சித்தார்த்தின் எண்ணம் இல்லை. தனக்கான உணவை எந்தவித வேதிப்பொருட்களும் கலக்காமல், தானே உற்பத்தி செய்ய வேண்டும். இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. அதனாலேயே கிர் காட்டில் விவசாயம் செய்ய அவர் விரும்பினார்.

“இயற்கையின் மீதான காதல்தான் நான் விவசாயம் செய்ய முதற்காரணம். கெமிக்கல் கலந்த உணவு மற்றும் உலக வெப்பமயமாதல் பற்றி நிறைய கேள்விப்படுகிறோம். ஆனால், அதற்கான எதிர்வினை எதையும் நாம் புரிவதில்லை.

உண்மையில் இயற்கை நமக்கு அள்ளிக்கொடுத்திருப்பதை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை. நான் விவசாயம் மூலம் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன்...” என்கிற சித்தார்த் தன்னுடைய பண்ணையிலேயே குடில் அமைத்து தங்கிக் கொள்கிறார். இப்போது அவரது வயது 25.

சித்தார்த் விவசாயம் செய்ய ஆரம்பித்த போது கொரோனாவின் தாக்குதலும் தொடங்கியது. லாக்டவுனுக்கு மத்தியிலும் இயங்கிக் கொண்டிருந்தார். இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை சார்ந்து இளைஞர்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது பண்ணையில் பயிற்சி வகுப்புகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். 

லாக்டவுன் காரணமாக  அந்தத் திட்டம் தள்ளிப்போய்விட்டது. அதனால் விவசாயத்தில் மட்டும் முழுக்கவனத்தையும் செலுத்தினார்.  சில மாதங்களுக்குப் பிறகு லாக்டவுன் தளர்வடைய ஆரம்பித்தது. சித்தார்த்தின் பயிற்சி வகுப்புகள் தொடங்கின.

“இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறேன். முதலில் விவசாயத்தின் அடிப்படைகளைப் பற்றியும், விவசாயம் செய்யும் இடத்திலே வாழ்வது குறித்தும் அவர்களிடம் பகிர்வேன். பிறகு நமக்குத் தேவையான உணவை நாமே விவசாயம் செய்வதன் முக்கியத்துவத்தைச் சொல்வேன்...” என்கிற சித்தார்த், இயற்கை விவசாயம் செய்து வருகிறவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். “ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும் செடிகளை அருகருகில் நடவு செய்யுங்கள். உதாரணத்துக்கு சில செடிகளுக்கு சூரிய வெளிச்சம் தேவைப்படும். சிலவற்றுக்கு நிழல் மட்டுமே போதும்.

எந்த செடிக்கு என்ன வேண்டும் என்பதை விவசாயிகளிடம் சொல்வேன். மட்டுமல்ல, பல பயிற்சி வகுப்புகள் மற்றும் நிபுணர்கள் உரையாடி சேகரித்த விவசாய அறிவை அந்த விவசாயிகளிடம் பகிர்ந்து கொள்வேன்...” என்கிற சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவசாயம் குறித்தான பல விஷயங்களைப் பதிவு செய்து வருகிறார்.

இன்று சித்தார்த்தின் பண்ணையில் இயற்கை முறையில் மாம்பழம், பப்பாளி, டிராகன், கிவி போன்ற பழங்களும், பீன்ஸ், கத்தரிக்காய், பாகற்காய் போன்ற காய்கறிகளும், ரோஜா, சாமந்திப்பூ போன்ற மலர்களும் விளைகின்றன. இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி வகுப்புகளை இந்தியா முழுவதும் விரிவாக்க வேண்டும் என்பது அவரது கனவு.  

த.சக்திவேல்