வெற்றிமாறன் + அமீர் = மாயவலை!‘ராஜன் இஸ் பேக்...’ இந்த டேக்லைனுடனேயே வெளியானது ‘மாயவலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக். ‘வடசென்னை’ படத்தில் நடித்த அமீர் கேரக்டரின் பெயர், ராஜன். ரசிகர்கள் சட்டென இதை கனெக்ட் செய்ய... படத்துக்கு எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.
‘அமீர் ஃபிலிம் கார்ப்பரேஷன்’ தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் படம் இது.

‘அதர்மம்’, ‘பகைவன்’, ‘தடயம்’, ‘அது’ உள்ளிட்ட தனித்துவமான திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் தற்போது மீண்டும் இருபது வருட ங்களுக்குப் பிறகு ‘மாய
வலை’ திரைப்படம் கொடுக்க எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார். அவரை சந்தித்தோம்.

‘மாயவலை’?

ஒரு வீடு... அதில் நடக்கும் குற்றம்... அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள்... அதனால் பாதிக்கப்படும் மனிதர்கள்... அவர்கள் எடுக்கும் முடிவுகள்... இது அத்தனையும் சேர்ந்துதான் ‘மாயவலை’.மாலை 6 மணிக்குத் துவங்கி காலை 6 மணிக்கு முடிகிற ஒரே இரவில் நடக்கும் கதை. ஒரு குடும்பமே  இக்கட்டான சூழலுக்குள் மாட்டிக்கொண்டு தவிப்பதும் அதை சார்ந்து நடக்கும் சம்பவங்களுமாக கடப்பதால் ‘மாயவலை’ என்கிற தலைப்பு சரியாக இருந்தது.

இயக்குநர் அமீர் கதைக்குள் வந்தது எப்படி?

அமீர் சாரும் நானும் நீண்ட கால நண்பர்கள். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் இயக்கலாம்னு யோசிச்சு இந்தக் கதையைப் பற்றி அமீரிடம் பேசினேன். அவரும் ‘ரொம்ப நல்லா இருக்கு செய்யலாம்’னு சொன்னார். ரொம்ப கேப் எடுக்கக் காரணம் எனக்கு சினிமா வட்டார தொடர்புகள் குறைவா இருந்ததுதான். அமீர் சார் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். சில நடிகர்கள் கிட்ட கதை சொன்னப்ப பெரிதா யாரும் செட்டாகலை.

அமீர் சாரை இதுவரை முரடனா, ரவுடியாகத்தான் பார்த்திருக்கோம். ஏன் ஒரு வித்யாசமான அமைதியான, கேரக்டரில் நடிக்க வைக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அதனால அமீர் சாரிடம் ‘நீங்க ஏன் இந்தக் கதையில் நடிக்கக் கூடாது’னு நானே கேட்டேன். யோசிச்சு சம்மதிச்சார்.முதலில் அமீர் சார் தயாரிப்பு, தொடர்ந்து ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி இப்படி ஒவ்வொருத்தரா கதையில் சேர பெரிய படமாக ‘மாயவலை’ மாறியிருக்கு. சத்யாவுக்கும் இந்தப் படம் ஒரு கம் பேக்காக இருக்கும்.

இயக்குநர், நண்பரான அமீரை நடிகராக திரையில் வேலை வாங்கும்போது உண்டான அனுபவம் எப்படியிருந்தது..?

பல வருட நண்பர்கள் நாங்க. நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தாலே சினிமா பத்திதான் பேசுவோம். அதனால எனக்கு என்ன வேணும், என்ன கொடுக்கணும்னு அவருக்கு நல்லாவே தெரியும். தவிர அவரே கிரிட்டிக்கலான பல கதைகள் இயக்கியவர். ஒரு காட்சி நல்லா வரணும்னா நடிகர்களை எவ்வளவு வேலை வாங்கியிருப்பார்... எனில் அவருக்கு எந்தக் காட்சிக்கு என்ன கொடுக்கணும்னு நல்லாவே தெரியும்.

அந்தப் புரிதலால் எனக்கும் வேலை குறைவாக இருந்தது. நடிகர் சத்யா, சஞ்சிதா ரெண்டு பேருக்குமே இந்தப் படம் மீண்டும் ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும். சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா’ செந்தில்னு பலர் நடிச்சிருக்காங்க. தீனாவுடைய கேரக்டர் ரொம்ப காமெடியா இல்லாம, அந்தக் காமெடியும் ஒருவித நக்கலா, அதே சமயம் ஓவர் காமெடியாக மாறி கதையை இடையூறு செய்யாம இருக்கும்.   

அமீர் சாருடைய ‘மௌனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்திவீரன்’ துவங்கி ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட படங்கள் செய்த ராம்ஜி இந்தப் படத்துக்கு சினிமாட்டோகிராபி. ‘சிவா மனசுல சக்தி’, ‘ஆதிபகவன்’ உள்ளிட்ட படங்கள் செய்த எஸ்.பி.அகமது இந்தப் படத்துக்கு எடிட்டர்.  

தயாரிப்பில் வெற்றிமாறன்?

மிகப்பெரிய சப்போர்ட் அவருடையது. படத்தின் நிகழ்ச்சியிலும் படம் குறித்து நிறைய பாசிட்டிவ்வா பேசினது எங்களுக்கு பிளஸ். ரொம்ப சின்ன பட்ஜெட்டில் ஆரம்பித்து இன்னைக்கு அமீர் சார், வெற்றி மாறன் சார் ரெண்டு பேரும் இணைந்து தயாரிப்பில் கை கோர்த்தது இந்தப் படத்தின் பலம். அடுத்த பலம் யுவன் ஷங்கர் ராஜா சார் இசை. பட்டையைக் கிளப்பியிருக்கார்.
ஏன் ‘ராஜன் இஸ் பேக்’?

எனக்கு அமீர் சாருடைய ராஜன் கேரக்டர் அவ்வளவு பிடிக்கும். அந்த கேரக்டரை அற்புதமா டிசைன் செய்திருப்பார் வெற்றிமாறன் சார். அந்தக் கேரக்டருடைய வெற்றி நாம் எல்லோரும் அறிந்ததே. மாஸ், கிளாஸ், முரடன் அந்த ராஜன். நான் இதில் இன்னொரு விதமான ராஜனைக் காட்டியிருக்கேன். நீங்களே ஆச்சர்யப்படுவீங்க, அவரது நடிப்பு அருமையாக இருக்கும். படம் திரில்லர், எமோஷன், அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்புகளைத்தூண்டும்.

ஷாலினி நியூட்டன்