ரிலீசுக்கு 7 படங்கள் தயார்...



இது இளம் நடிகரின் பிரம்ம முகூர்த்தம்

சினிமா கனவுகளுடன் மதுரையிலிருந்து வந்தவர் விஜய் விஷ்வா. சிறு பட்ஜெட் படம் எடுப்பவர்களுக்கு இவர்தான் அரவிந்தசாமி. இவர் நடித்துள்ள ‘பிரம்மமுகூர்த்தம்’, ‘கும்பாரி’ உட்பட ஏழு படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் விஜய் விஷ்வாவை சந்தித்தோம்.

‘பிரம்மமுகூர்த்தம்’... தலைப்பு மங்களகரமாக உள்ளதே..?

நான் ஹீரோவாக நடித்து கிட்டத்தட்ட பதினைந்து படங்கள் வெளியாகிவிட்டன. அப்படி நான் பண்ணிய படங்களில் என்னை மிகவும் கவர்ந்த டைட்டில் ‘பிரம்ம முகூர்த்தம்’. இயக்குநர் விஜயன் சார் கதை சொல்லும்போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 
அப்படிஒரு ஹியூமர் சப்ஜெக்ட். ஓர் இரவில் நடக்கும் கதை. திருமணத்துக்கு புறப்பட்டுச் செல்லும் மாப்பிள்ளை வீட்டார் அவசரத்தில் தாலியை மறந்துவிட்டுச் செல்கிறார்கள். தாலியுடன் ஹீரோ எப்படி திரும்புகிறார் என்பதை வயிறுகுலுங்கி சிரிக்கும்படி நகைச்சுவையுடன் சொல்லியுள்ளோம்.

ஐடியில் வேலை செய்யும் இளைஞராக வர்றேன். எனக்கு ஜோடியாக அபர்ணா வர்றார். கிட்டத்தட்ட இருபது ஹீரோயின்களிடம் அப்ரோச் பண்ணினோம். அதில் இரண்டு ஹீரோயின்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தோம். கடைசி கட்டத்தில்தான் அபர்ணா கமிட்டானார். மதன்பாப், அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி என பல காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள். இசை ஸ்ரீ சாஸ்தா. தயாரிப்பு செந்தில்நாதன்.

வேறு என்னென்ன படம் செய்கிறீர்கள்?

‘கும்பாரி’ அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. நட்பு, அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ‘கும்பாரி’ என்றால் நாகர்கோவில் வட்டாரத்தில் நண்பன் என்று அர்த்தம். கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். 

என்னுடைய கேரக்டருக்காக நாகர்கோவில் வட்டார மொழி, நீச்சல் கத்துக்கிட்டேன். முழுப் படத்தையும் கடல் பகுதியில் எடுத்ததால் தோல் நிறம் மாறியது. மூன்று மாதம் தோல் சிகிச்சை எடுத்த பிறகுதான் பழைய நிறம் கிடைத்தது. நாயகி, மஹானா.

‘பரபரப்பு’ படத்தில் முதன் முறையாக போலீஸ் கேரக்டர் பண்ணியிருக்கிறேன். எனக்குத் தெரிந்த சில போலீஸ் அதிகாரிகளுடன் பழகி கேரக்டருக்காக உடல் மொழியைக் கற்றுக்கொண்டேன்.

விக்ரமன் சார் உதவியாளர் லோகு தயாரித்து, இயக்கியுள்ளார்.‘தரைப்படை’ என்னுடைய கரியரில் முக்கியமான படம். இந்தப் படத்தை கமிட் பண்ணுவதற்கு முன் வேறு ஒரு படத்தில் நடித்தேன். அந்தப் படத்துக்காக ஏற்காடு மலையில் சண்டைக் காட்சியை எடுத்தார்கள். வழக்கமாக சண்டைக்காட்சி எடுக்கும்போது ரோப், பெட் என பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும்.

ஆனால், எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் எடுத்ததால் விபத்து நேரிட்டது. வலது கை எலும்பு முறிந்தது. அந்த விபத்தால் என்னால் அடுத்தடுத்து படங்கள் பண்ண முடியவில்லை. நான்கு படங்கள் கமிட் பண்ணி வைத்திருந்தேன். அதில் இரண்டு படங்களில் ரஜினி, சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விபத்து ஏற்பட்டதால் என்னால் அதில் நடிக்க முடியவில்லை.

பல மாதங்கள் முடங்கிய நிலையில்தான் ‘தரைப்படை’ வாய்ப்பை என்னை நம்பி இயக்குநர் ராம் பாலா கொடுத்தார். கையை மடக்கியவாறு நடித்தேன். எனக்கு அடிபட்ட மாதிரி எந்த இடத்திலும் காண்பிக்காமலேயே எடுத்தார்கள். கேங்ஸ்டர் கதையான அதில் பிரஜன், ஜீவா உட்பட பலர் இருக்கிறார்கள்.

உங்களைப் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க பெரிய நடிகைகள் ஆர்வமாக இருக்கிறார்களா?

இல்லை. எனக்கு பரிச்சயமான ஹீரோயின்களே பெரிய ஹீரோவுடன் நடிக்கத்தான் ஆர்வம் காண்பிக்கிறார்கள். சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில் என்னுடன் நடித்த நடிகைக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் இப்போதுதான் தன் பயணத்தை ஆரம்பித்துள்ள அந்த நடிகையும் சேர்ந்து நடிக்கத் தயங்கினார்.

இந்த நிலை எனக்கு மட்டுமில்லை. முன்னணியில் இல்லாத பல நடிகர்களுக்கும் இதுதான் நிலை. என்றாலும் ‘ஃப்ளாஷ்பேக்’ படத்தில் ரெஜினா கசாண்ட்ராவுடன் நடித்தேன்.

எஸ்.ராஜா