தீப ஒளி நம ஒளி!



நாடே செழிப்போடும் களிப்போடும் இருந்தது. பரந்து விரிந்த தனது நாட்டை நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தான் சுதர்மன் என்ற அந்த மன்னன். அவன் நாட்டில் வறுமை இல்லை, பஞ்சம் இல்லை, பட்டினி இல்லை, ஏற்றத் தாழ்வு இல்லை. 
மக்கள் அனைவரும் சொர்க்கலோகத்தில் வசிக்கும் வானவர்கள் போல இன்புற்று வாழ்ந்து வந்தார்கள்.மன்னன் சுதர்மன் நல்ல குணவான், வீரன், நீதிமான். உலகம் அனைத்தையும் ஒற்றைக் குடையின் கீழ் ஆட்சி செய்யும் கோமான்.

அவன், தனது மனைவியும் நாட்டின் பட்டத்து அரசியுமான ரூபசுந்தரியை சந்திக்கச் சென்று கொண்டிருந்தான். அரம்பையர்களும் இந்த நங்கையைக் கண்டு நாணும் அளவு அழகு படைத்தவள். கற்பிற்கு இலக்கணமாக விளங்கும் காரிகை. நாட்டு மக்களைத் தன் மக்களாகக் கருதும் தாய் என அவளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்தப்புரத்தில், தேவலோக நங்கை போல இருந்த அவளை நெருங்கிய மன்னன், ‘‘அன்பே...’’ என்று அழைத்தான் பாசத்தோடு. ‘‘நான், புஷ்கர புண்ணிய பூமிக்கு சென்று, உலகனைத்தையும் உண்டு உமிழ்ந்த முதல்வனை, பாற்கடலில் பைய துயின்ற பரமனை, வாயாரப் பாடி மனமார சிந்தித்து, பூஜித்து சேவைகள் செய்ய ஆசை கொண்டு உள்ளேன். இது எனது நீண்ட நாள் ஆசை. நாம் புஷ்கர புண்ணிய பூமிக்கு செல்வோமா?’’ அன்போடு கேட்டான்.

கணவனின் யோசனை, ரூபசுந்தரிக்கு மிகவும் பிடித்திருந்தது. தாமதிக்காமல் சட்டென கிளம்பிவிட்டாள். நாட்டை அமைச்சர்களிடம் ஒப்படைத்து விட்டு, அரசனும் அரசியும் கிளம்பி விட்டார்கள்.புஷ்கரத்தில் திருமால் சன்னதியில், கை குவித்து கண்ணீர் மல்கி, ஊனும் உயிரும் உருக இருவரும் சேவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சன்னதிக்கு வெளியே ஒரு பூனை பெரிதாக சத்தம் செய்தபடி ஓடியது.

சட்டென திரும்பி இருவரும் அந்தப் பூனையைப் பார்த்தார்கள். புறக்கண் பூனையைப் பார்த்தது. ஆனால், அவர்களுடைய அகக் கண் வேறு ஒரு காட்சியைக் கண்டது. அவர்கள் இருவரது மனதிலும் ஒரு முனிவரின் ஆஸ்ரமம் விரிந்தது. அங்கே இறைவனின் நாமம் தேவ கானமாக ஒலித்துக் கொண்டிருந்தது. மற்றொரு புறம் வேத ஒலி விண்ணைப் பிளந்து கொண்டு இருந்தது. சரஸ்வதி நதியின் கரையில் அழகாக அமைந்திருந்தது அந்த ஆஸ்ரமம். ஆகவே சரஸ்வதி நதியின் சலசலப்பும் கூட அழகாக, மாலவன் புகழ் பாடுவது போல இருந்தது.

ஆஸ்ரமத்திற்கு ‘சித்தாஸ்ரமம்’ என்று திருப்பெயர். ஆஸ்ரமத்தில் இருந்த முனிவர் கபில முனிவர். வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம்... என அனைத்தையும் கற்று கரை கண்டவர். இவை அனைத்தையும் அறிந்தவர் ஒன்றை உணர்ந்தார். 

இறைவனுக்கு திருவிளக்கு இடுவதைத் தவிர பெரிய ஒரு வழிபாடு இல்லை என்பதுதான் அது. ஆகவே, தனது ஆஸ்ரமத்தில் இருந்த மாலவன் திரு உருவை தினமும் அழகாகப் பூஜித்து அலங்கரித்து திரு விளக்கு ஏற்றி அற்புதமாக வழிபாடு செய்வார் அவர். வழிபாடு முடிந்ததும், இறைவனின் நாமத்தை ஜெபித்துக் கொண்டே காலத்தைக் கழிப்பார். விரதம், உபவாசம் என கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்தார் அவர்.

அந்த ஆஸ்ரமத்தில் ஒரு பூனையும் வசித்து வந்தது. தினமும் இரவு நேரத்தில் மாலவன் திரு முன் எரியும் விளக்கில் இருந்த எண்ணெயைக் குடிக்க எலிகள் வரும். அந்த எலிகளைப் பிடித்துத் தின்பதுதான் இந்தப் பூனையின் வேலையாக இருந்தது. இப்படி எலிகள் விளக்கில் இருக்கும் எண்ணெயைக் குடித்துவிட்டால் விளக்கு அணைந்து விடும். போதாத குறைக்கு குடிக்கும் போது எலியின் கால் இடறி விளக்கு சரிந்து அணைந்து போகவும் வாய்ப்பிருக்கிறது.

இப்படி விளக்கில் இருக்கும் எண்ணெயைக் குடிக்க வரும் எலிகளை பூனை வேட்டையாடியது. அந்தப் பூனை என்னவோ, தனது பசிக்காகத்தான் வேட்டையாடியது.  ஆனால், அது தன்னையும் அறியாமல் மாலவன் சன்னதியில் இருக்கும் விளக்கை அணையாமல் பாதுகாக்கும் உன்னதத் தொண்டையும் செய்து வந்தது. இது இப்படி இருக்க ஒரு நாள் ஏகாதசி வந்தது.

அன்று வழக்கம் போல விரதம் இருந்து இறைவனை வழிபட்டார் கபில முனிவர். இரவில் இறைவன் முன் விளக்கு ஏற்றி விட்டு இறைவன் எதிரே நிஷ்டையில் அமர்ந்துவிட்டார்.
அப்போது மாலவன் திரு முன் எரியும் விளக்கில் இருந்து எண்ணெயைக் குடிக்க ஒரு எலி எங்கிருந்தோ ஓடி வந்தது. விளக்கின் மீது ஏறி எண்ணெயைக் குடிக்க ஆரம்பித்தது. அந்த சமயம் சத்தம் எதுவும் செய்யாமல் பூனை நடை போட்டு வந்து, தனது கூரிய நகம் கொண்ட கால்களால், எலியை வேட்டையாடும் பொருட்டு தட்டியது.

இதனால் பதறிய எலி சட்டென்று துள்ளியது. எலி துள்ளிய வேகத்தில் அருகில் இருந்த எண்ணெய்ப் பாத்திரம் கவிழ்ந்தது. கவிழ்ந்த பாத்திரத்தில் இருந்த எண்ணெய் சரியாக விளக்கின் உள்ளே விழுந்து, விளக்கை முட்ட முட்ட நிரப்பியது. இதற்குள் பூனையிடமிருந்து தப்பிக்க மீண்டும் ஒரு முறை தாவியது எலி. தாவிய வேகத்தில், அதனுடைய கால்கள், விளக்கின் திரியைத் தூண்டி விட விளக்கு மேலும் பிரகாசமாக எரிந்தது.

இதைத் தொடர்ந்து பொழுது விடிந்தது. கபில முனிவர் தனது காலை வழிபாட்டை முடித்துக் கொண்டு, விரதத்தைப் பூர்த்தி செய்தார். அப்படியே காலம் சென்றது.
அவரது ஆஸ்ரமத்தில் வாழ்ந்த அந்த பூனை ஒரு நாள் மரித்தது. அது மரித்தவுடன் ஆகாயத்தில் இருந்து புஷ்பக விமானம் வந்து இறங்கியது. அதில் இந்திரன் அமர்ந்திருந்தான். பூனையின் ஆன்மாவை புஷ்பக விமானத்தில் ஏற்றிச் சென்றான்.

பூனைக்கு ஒரே ஆச்சரியம். சாதாரண பூனையான நமக்கு எப்படி இப்படி ஒரு பாக்கியம் கிடைத்தது?

இந்திரன் பூனையின் ஆன்மாவை சுவர்க்கத்தில் இறக்கி விட்டான். அங்கே அவனுக்கு முன்னமே மற்றொரு ஆன்மா பலப்பல போகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தது.
பூனையின் ஆன்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அருகில் இருந்த இந்திரனைப் பார்த்து ‘‘எதற்கு சாதாரண பூனையான எனக்கு இப்படி ஒரு பாக்கியம்?’’ என்று கேட்டது.

அதற்கு சிரித்தபடியே இந்திரன் பதில் தர ஆரம்பித்தான். ‘‘நீ பூனையாக இருந்த போதிலும் மாலவன் சன்னதியில் இருந்த தீபத்தை அணையாமல் பாதுகாத்து வந்தாய். அதன் பயனாகத்தான் உனக்கு இவ்வளவு பாக்கியங்களும்...’’அப்போதுதான் பூனைக்கு ஒவ்வொன்றாக விளங்க ஆரம்பித்தது. தன்னையும் அறியாமல் விளக்கில் இருந்த எண்ணெயைக் குடிக்க வரும் எலிகளைப் பசிக்காக வேட்டையாடி உண்டதற்கு இப்படி ஒரு பாக்கியமா என்று வாயைப் பிளந்தது அது.

‘‘எனக்கு முன்னே இங்கு சுவர்க்கத்தில் பல போகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் இது என்ன புண்ணியம் செய்தது?’’ என தனக்கு எதிரே இருந்த ஆன்மாவைச் சுட்டிக் காட்டிக் கேட்டது பூனையின் ஆன்மா.‘‘ஒரு ஏகாதசி இரவு, மாலவன் சன்னதியில் இருக்கும் விளக்கில் இருந்து எண்ணெயைக் குடிக்க வந்த எலி இது. நீ அதை அடிக்கப் போக, அதனால் அது தாவிக் குதித்து எண்ணெய் பாத்திரத்தைக் கவிழ்க்க, ஏகாதசி இரவு முழுவதும் திருமாலுக்கு விளக்கு ஏற்றிய புண்ணியம் அந்த எலிக்குத் கிடைத்தது.

அதன் பலனாகத்தான் அந்த எலி இப்போது இங்கு பல போகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது...’’இந்திரன் சொன்னதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் திண்டாடியது பூனையின் ஆன்மா.மன்னனுக்கும் அரசிக்கும் மனக்கண் முன்னே விரிந்த காட்சிகள் மறைந்தது. இருப்பினும் அது ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் இருவரும் தவித்தார்கள்.

ஒருவழியாக முதலில் வெளிவந்த மன்னன்,  அரசி ரூபசுந்தரியைப் பார்த்து ‘‘மனக்கண் முன்னே தெரிந்த அந்தப் பூனை யார் என்று தெரியுமா?’’ என்று கேட்டான்.
புன்முறுவல் பூத்த அரசி, ‘‘இந்த உலகம் அனைத்தையும் ஒற்றைக் குடையின் கீழ் ஆளும் சாட்சாத் சுதர்ம மகாராஜாவான நீங்கள்தான். உங்களால் போன ஜென்மத்தில் அடிபட்ட எலிதான் நான்...’’ என்றாள்! இருவரும் தங்களுக்கு எதிரே இருந்த மாலவனை வணங்கினார்கள்.

பிறகு கார்த்திகை மாதம் வரும் பிரபோதினி ஏகாதசியில் விளக்கேற்றி மாலவனைப் போற்றி புகழ் அடைந்தார்கள். இந்தக் கதை, ‘பத்ம புராணம்’ 30வது அத்தியாயத்தில் இருக்கிறது. இந்த அத்தியாயம் முழுக்க தீபம் ஏற்றி வழிபடுவதால் வரும் நன்மைகளை விளக்குகிறது. அதுமட்டுமில்லை, விளக்கேற்றி இறைவனை வழிபடுவதால் வரும் நன்மையை அந்த ஈசனே நாரதருக்கு உபதேசிப்பது போல வருகிறது.

‘‘விளக்கு ஏற்றுவதாலும், கோயிலில் விளக்கேற்ற எண்ணெயோ அல்லது திரியோ அல்லது விளக்கோ தானம் செய்தாலும், அனைத்து நன்மைகளையும் பெறலாம்...’’ என ஈசன் தன் வாயாலேயே சொல்கிறார்.எனவே, இந்த கார்த்திகை மாதத்தில் இறைவனுக்கு திருவிளக்கு ஏற்றி வழிபட்டு நற்கதி அடைவோம்.

ஜி.மகேஷ்