தமிழ்ல அறிமுகமானேன்... ஆனா, காந்தாராதான் என்னை பிரபலப்படுத்தியது!



கர்நாடகாவின் மோஸ்ட் வாண்டட் மியூசிக் டைரக்டராக மிளிர்கிறார் அஜனீஷ் லோக்நாத். ‘காந்தாரா’ படத்தின் இசையமைப்பாளர் என்று சொன்னால்தான் இவரை நம்மவர்கள் எளிதாக முகம் அறியலாம்.  

கன்னடம், தெலுங்கு, தமிழ் என மும்மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் அஜனீஷ், இப்போது தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மகாராஜா’ படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரின் பிஸி ஷெட்யூலுக்கிடையே கிடைத்த இடைவெளியில் அவரிடம் போனில் பேசினோம். ‘‘நித்திலன் இயக்கத்துல வந்த ‘குரங்கு பொம்மை’ படம் மூலம் 2017ம் ஆண்டு தமிழ்ல அறிமுகமானேன். அப்புறம், பிரியதர்ஷன் சார் இயக்கத்துல உதயநிதி நடிப்புல ‘நிமிர்’ பண்ணினேன். இப்ப மறுபடியும் தமிழ்ப் படத்துலபணியாற்றும் வாய்ப்பு கிடைச்சிருக்கிறது ரொம்ப சந்தோஷமாக இருக்கு...’’ எனக் கொஞ்சும் தமிழில் பேசுகிறார் அஜனீஷ்.

‘‘சொந்த ஊர் பத்ராவதி. நான் வீட்டுக்கு ஒரே பையன். என் அப்பா இசையில் ஆர்வம் உள்ளவர். அவர் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா வச்சு மியூசிக் புரோகிராம் பண்ணிட்டு இருந்தார். அதனால எனக்கு சின்ன வயசுல இருந்தே மியூசிக்ல ஆர்வம். வீட்டுல சும்மா இருக்கும் போதெல்லாம் மியூசிக் வொர்க் பண்ணிட்டு இருப்பேன். அப்பாவின் ஆர்க்கெஸ்ட்ராவுல கீபோர்டு பிளேயராக இருந்தேன். தொடர்ந்து  வெஸ்டர்ன் கிளாசிக் மியூசிக்ல எட்டு கிரேட் பண்ணினேன். அப்புறம், கர்நாடக சங்கீதத்தில புல்லாங்குழல் வாசிக்கக் கத்துக்கிட்டேன்.

இப்படியே என் இசை அறிவை வளர்த்துக்கிட்டேன். கூடவே சினிமா பயணமும் தொடங்குச்சு. 2009ல் மஞ்சு ஸ்வராஜ் இயக்கிய ‘ஷிஷிரா’ படம் மூலம் கன்னடத்துல அறிமுகமானேன். அப்ப எனக்கு 24 வயசு. அந்தப் படத்துல இளம் இசையமைப்பாளராக கவனம் கிடைச்சது. பிறகு, 2010ல் ‘வர்ஷதாரே’ படம் பண்ணினேன். தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள்ல கமிட்டானேன்.
பிறகு, 2015ம் ஆண்டு வெளியான ‘உளிடவரு கண்டந்தே’ படம்தான் ரொம்ப கவனம் பெற்றுத் தந்தது.

அந்தப் படத்துக்கு கர்நாடக மாநில அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றேன். அதுக்கு ஃபிலிம்ஃபேர் விருதும் கிடைச்சது. இதனால், அப்பவே கூடுதல் பொறுப்பு வந்ததாக உணர்ந்தேன். இன்னும் சிறப்பாக இசையமைக்கணும்னு நினைச்சேன். இப்பவும் ஒவ்வொரு படத்தையும் மெனக்கெட்டே செய்றேன்.

அப்புறம், அதே ஆண்டு வெளியான ‘ராங்கி தரங்கா’ படம் செம ஹிட்டானது. எனக்கும் நல்ல பெயர் வாங்கித் தந்தது. இதுக்கு சிறந்த பேக்ரவுண்ட் ஸ்கோருக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விருது கிடைச்சது. பிறகு, 2017ல் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ வெற்றியடைஞ்சது. இதுல எனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் ‘சைமா’ விருது கிடைச்சது. ஒவ்வொரு பாராட்டும் கிடைக்கிறப்ப பொறுப்பும் கூடிட்டே இருந்தது...’’ என்கிறவர், நிதானமாகத் தொடர்ந்தார்.

‘‘இதன்பிறகு எனக்கு ‘பெல்பாட்டம்’ படம் கவனம் கொடுத்தது. இதுல ரிஷப் ஷெட்டிதான் ஹீரோ. ஆனா, அவர் நடித்து இயக்கிய ‘காந்தாரா’ வேற லெவல்னுதான் சொல்லணும். ஏன்னா, தென்னிந்தியா முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்த படம் அது. அந்தப் படத்துக்கு நான் இசையமைப்பாளர் என்பதை பெருமிதமாகப் பார்க்குறேன். இதுக்கும் எனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான சைமா விருது கிடைச்சது.

‘காந்தாரா’ படத்துக்கு முன்னாடி ‘தியா’னு ஒரு படம் பண்ணினேன். அதுக்கும் சைமா விருது பெற்றேன். அப்புறம், சுதீப் சார் நடிப்புல ‘விக்ரந்த் ரோனா’ கன்னடப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதைப் பார்த்துதான் தெலுங்குல ‘விருபாக்‌ஷா’ படத்துக்கு இசையமைக்கக் கேட்டாங்க. இந்தப் படமும் கமர்ஷியலாக சக்சஸ் ஆனது. இதுவரை சுமார் 45 படங்களுக்கு மேல் இசையமைச்சிருக்கேன்...’’ என உற்சாகமாகச் சொல்லும் அஜனீஷிற்கு இப்போது 38 வயதாகிறது.

‘‘இப்ப தெலுங்குல ‘மங்களவாரம்’னு ஒரு படம் பண்ணியிருக்கேன். கன்னடத்தில் ‘யுஐ’னு ஒரு படம் நடிகர் உபேந்திரா சார் இயக்கத்துல வரப்போகுது. அதுக்கும் நான்தான் இசை. இதுதவிர, ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடந்திட்டு இருக்கு. அப்புறம், தமிழ்ல விஜய் சேதுபதி நடிச்ச ‘மகாராஜா’ பண்ணியிருக்கேன்.

இதுல வைரமுத்து சார் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கார். அவர்,  என்னுடைய மியூசிக் ரொம்ப பிடிச்சிருந்ததாகவும், பாட்டுகள் நல்லா வந்திருக்குனும் சொல்லியிருக்கார். அது ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது. இப்ப இந்தப் படம் முடியும் கட்டத்தில் இருக்கு. அடுத்து, ‘டெவில்’னு ஒரு கன்னடப் படம் பண்றேன். அதுல கன்னட நடிகர் தர்ஷன் நடிக்கிறார்.

அடுத்து கலைப்புலி தாணு சார் தயாரிக்கிற, ‘மேக்ஸ்’ என்கிற கன்னடப் படத்திற்கும் இசையமைக்கிறேன். இதுல ஹீரோவாக சுதீப் சார் நடிக்கிறார். இது பான் இந்தியா படமாக வரப்போகுது.

எனக்கு தமிழ்ல எம்.எஸ்.வி சார், இளையராஜா சார், ஏ.ஆர். ரஹ்மான் சார் ரொம்பப் பிடிக்கும். இவங்களப் போல நானும் சிறப்பாக மியூசிக் பண்ணணும்னு ஆசைப்படுறேன்’’ என சந்தோஷமாகக் குறிப்பிடுகிறார் அஜனீஷ் லோக்நாத்.

ஆர்.சந்திரசேகர்