என்ன... எதை... ஏன்... எப்படி சாப்பிட வேண்டும்..?ஆரோக்கியத்துக்கான வழிகாட்டி

ஆரோக்கியமற்ற உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடும் பழக்கம் இந்தியர்களிடம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வுகளும் கூட மிக மிகக் குறைந்து வருகின்றன. இதில் பெருகிவிட்ட இணைய இன்ஃப்ளூயன்சர்கள் காட்டும் வண்ணமயமான உணவுகளுக்கு அடிமையாகி பல கிலோமீட்டர்கள் பயணித்துச் சென்று உணவுகளுடன் நோய்களையும் வாங்கி வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், ஒரு காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் என்றால் என்ன, எதை எதை எப்படி சாப்பிட வேண்டும் என பாடம் நடத்தியது நம் இந்திய தேசம்தான்.
இன்று அத்தனையும் தலைகீழ். உலகின் நோய்கள் பலவற்றிலும் முதலிடம் பெற்று நிற்கிறது இந்தியா. இதற்கு முதற்காரணம் நாம் உண்ணும் உணவுகள்.

இன்னொரு ஆபத்து, இந்தியக் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர் என்பது. எனில் இன்னொரு புறம் உடல் பருமன் இந்தியாவில் தொற்றுநோயாக மாறியிருக்கிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் படி (NFHS)-5, நகர்ப்புறங்களில் 60 சதவீத பெண்களும் 50 சதவீத ஆண்களும் அடிவயிற்று உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். இதன் விளைவால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கரோனரி நோய்கள் அதிகரிக்கின்றன.

இந்த நோய்கள் அனைத்தும் இளம் மற்றும் நடுத்தர வயதுடைய இந்தியர்களைத்தான் பாதிப்புக்குள்ளாக்குகின்றன. ‘த லான்செட்’ சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல் இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு இறப்புகள் இப்போது இருதய நோய்களால் ஏற்படுகின்றன என்று அலாரம் அடித்திருக்கிறது. இது கடந்த இரண்டு தசாப்தங்களில் அதிகரித்துள்ளது. இளைஞர்கள் சரியான நேரத்தில் சாப்பிடாமல் அல்லது இரு வேளை உணவை ஒரே நேரத்தில் சாப்பிடுவது காரணம் என்கிறது.

இயற்கையான ஊட்டச்சத்துகள்

‘‘இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள்தான் ஊட்டச்சத்துகளுக்கான வழிமுறைகள் அத்தனையையும் பழங்காலத்தில் கடைப்பிடித்தவர்கள். ஆனால், இன்று அத்தனையையும் விட்டுவிட்டு ஜங்க் உணவுகள், உடனடி உணவுகள் என சென்றுவிட்டோம்...’’ என்று வருத்தத்துடன் பேசத் துவங்கினார் சித்ரா ராஜேஷ். 

தன் குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் இயற்கை உணவுகள், இயற்கையான ஊட்டச்சத்துக் கலவைகள் என தயாரிக்கத் துவங்கி இன்று அதையே பிஸினஸாகவும் செய்கிறார் சித்ரா ராஜேஷ். அவர் சொல்லும் ஊட்டச்சத்து உணவுகள் சிலவகைகளையும் கூட நம் அன்றாட வாழ்வில் இணைத்துக்கொள்ளலாம்.  

‘‘அன்னபால் கஞ்சி... எங்கேயோ கேட்டதுபோல் தோன்றலாம். ஒரு காலத்தில் நம் பாட்டிமார்கள் செய்து கொடுத்துக்கொண்டிருந்த கஞ்சிதான் இது. காட்டுயானம் அரிசி, கருப்புக் கவுனி அரிசி, இலுப்பைப் பூ சம்பா அரிசி, ஏலம், மற்றும் மிளகு சேர்த்து செய்யப்படும் கஞ்சி வகை இது. அல்சர் துவங்கி, உடல்சோர்வு, அயற்சி என அத்தனையும் இந்தக் கஞ்சியில் தீரும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இவை தவிர நம்மிடம் உள்ள அத்தனை அரிசி சார்ந்த அவல்களும் வரப்பிரசாதமானவை. அவற்றை எல்லாம் நாம் கண்டுகொள்வதுகூடக் கிடையாது. தானியங்கள், விதைகள், பயறுகள் இவையெல்லாம் மேலை நாடுகளைக் காட்டிலும் நம்மிடம்தான் அதிகளவில் உள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் நாம் ஏற்றுமதி செய்துவிட்டு அவர்கள் தரும் நோய் மூட்டைகளை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். விளைவு... தானியங்கள், கஞ்சிகள், முளைகட்டிய பயறுகள், பழங்கள், காய்கறிகள் என அனைத்தையும் ஒதுக்கும் குழந்தைகளைத்தான் இன்று காண முடிகிறது.

இதற்கு கண்களால் பார்த்து ஏற்படும் ஆசையாலும், நாவால் ருசிக்காகவும் உண்ணும் வழக்கம் அதிகரித்ததுதான் காரணம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.  

முகநூல், யூடியூப், இன்ஸ்டாகிராம் என எங்கே திறந்தாலும் ‘நாம இன்னைக்கு வந்திருக்கற ஹோட்டல்’ என யாரோ ஓர் இணையவாசி ஏதோ ஒரு ஹோட்டல் அல்லது ஃபாஸ்ட் ஃபுட் கடை முன்பு நின்றுகொண்டு வீடியோவுடன் நோய்களுக்கு வெல்கம் போர்டு போடுகிறார். அதையும் கண்டு ரசிப்பதுடன் அக்கடையைத் தேடிப்பிடித்து உண்ணும் பழக்கம் அதிகரித்துவிட்டது. முறையற்ற உணவால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மூளையின் ஆரோக்கியமும் கெடும்.

மூளை சொல்வதைக் கேளுங்கள்

அதிக அளவில் உண்ணும் பழக்கம் ஆண் - பெண் என இருவரிடமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இன்று இளைஞர்களின் ஒவ்வொரு கொண்டாட்டமும், சந்திப்புகளும் ‘டிரீட்’ என உணவில் ஆரம்பித்து உணவில் முடிவதாகவே உள்ளது. எந்த உணவாக இருப்பினும், ஏன் ஆரோக்கியமான எளிய வீட்டு உணவாகவே இருப்பினும் நாம் உண்ணும் போதே வயிறு நிறைந்துவிட்டால் மூளை நமக்கு போதும் என நம் வயதுக்கும், உடலுக்கும் ஏற்ப எச்சரிக்கை கொடுக்கும். ஆனால், நம் மூளை அறிந்து எச்சரிக்கை கொடுக்கக் கூட நேரம் கொடுக்காமல் வேகமாக உணவை முடித்துவிடுகிறோம்.

மெதுவாக மென்று தின்று விழுங்கும்போதுதான் உணவு இரைப்பையை அடைந்து, வயிறு நிறைந்ததா இல்லையா என அறிந்து மூளை நமக்கு எச்சரிக்கை கொடுக்கும். ஆனால், மூளைக்கு தகவல் செல்வதற்குள் நாம் ஒரு தட்டு பிரியாணி என்றாலும் முடித்துவிட்டு அடுத்த ஆர்டரைக் கொடுத்துவிட்டு காத்திருக்கும் வாழ்க்கை முறைக்கு ஆளாகியிருக்கிறோம். முதலில் இந்த ரீல்ஸ், இணையம் சொல்லும் உணவுகளைத் தேடிப் பிடித்து உண்பதைத் தவிர்த்தாலே பாதி பிரச்னைகள் தீரும்...’’ என்கிறார் சித்ரா ராஜேஷ்.

சருமத்திற்கான உணவே சரிவிகித உணவு

‘‘சருமப் பளபளப்பிற்காக உணவு உட்கொண்டாலே பாதி உடல் உபாதைகள் தீரும்...’’ என்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக். ‘‘பொதுவாக சருமத்திற்கு மிகப்பெரும் கொடையாளி வைட்டமின் சி, ஈ மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுகள், அதாவது பழங்கள், காய்கறிகள், நம் வீட்டில் நம் அம்மா செய்துகொடுக்கும் பொரியல்கள், கூட்டுகள் இவைதான். எத்தனை பேர் வாரம் ஒருமுறையேனும் உணவில் நெய் சேர்த்துக் கொள்கிறோம் அல்லது வெண்ணெய் எடுத்துக்கொள்கிறோம்..?

இவையெல்லாம் நல்ல கொழுப்பு வகைகள். இறைச்சியே கூட அளவாக எடுத்துக்கொள்ள அதன் பயன்கள் கிடைக்கும். ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை எல்லாம் சருமத்திற்கு உகந்த மருந்துகள். 

பச்சை நிற உணவுகள் எதுவாயினும், அதாவது கீரைகள், பீன்ஸ், புரோக்கோலி, கோவைக்காய், அவரை, பட்டாணி, கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, நெல்லிக்காய் என அனைத்துமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் உகந்தவை.

பெரும்பாலும் உடலுக்குள் பிரச்னை என்றால் முதல் அறிகுறி சருமத்தில்தான் தெரியும். ஏதேனும் ஊட்டச்சத்துக் குறைபாடு எனில் முடி உதிர்வு உண்டாகும். இவையெல்லாவற்றையும் கவனித்து சரி செய்தாலே ஆரோக்கியமான வாழ்க்கை வசப்படும். 

மொழிக்கும் உணவுக்கும் கூட உறவுகள் உண்டு நம் இந்தியர்கள் மற்றும் ஆசியர்களின் மாபெரும் வரப்பிரசாதம் இந்த சிறுதானியங்களும், தானிய வகைகளும்தான். உலகமே நம்மிடம் கையேந்தி நிற்கும் வேளையில் நாம் அவர்கள் கொடுக்கும் அற்ப சுவையில் ஈர்க்கப்பட்டு நோயை வாங்கிக் கொள்கிறோம்.

எந்த நாட்டிலும் இல்லாத காலநிலையும், மண்வளமும், நம்மிடம் இருப்பதாலேயே நம்மால் அத்தனை வகையான பயிர்களையும் விளைய வைக்க முடிகிறது. குறிப்பாக மலைப்பிரதேசப் பயிர்கள், குளிர்ப் பிரதேசப் பழங்கள், காய்கள், சமவெளிப் பயிர்கள், தானியங்கள் என அத்தனையும் நம்மிடம் இருக்க நாம் தேவையே இல்லாமல் எங்கோ ஒரு உணவுப்பாதையை உருவாக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.

எந்த பழங்களுக்கும், காய்களுக்கும், உணவுகளுக்கும் உங்கள் மொழியில் ஒரு பெயர், மற்ற மொழிகளில் வேறு பெயர் என இருக்கிறதோ அந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். அவைதான் நம் உள்ளூர் உணவுகள். 

பீட்சா, பர்கர், மோமோஸ், நூடுல்ஸ், ஏன் கிவி பழம் உட்பட மற்ற நாட்டு மொழிப் பெயர்கள் மட்டுமே கொண்ட உணவுகளை எப்போதேனும் ஆசைக்கு எடுத்துக்கொண்டால் பரவாயில்லை. அதையே உணவுப் பழக்கமாக மாற்றிக்கொள்ளாதீர்கள். மொழிக்கும் உணவுக்கும் கூட தொடர்புகள் இதன் அடிப்படையில்தான் உள்ளன...’’ என்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக்.  

புரோபயோட்டிக் முக்கியத்துவம்

‘‘எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும் பாக்டீரியாக்களை  உடலில் எவ்வளவு உருவாக்க முடியுமோ அவ்வளவு உருவாக்குவதுதான் அடுத்தகட்ட ஆரோக்கிய வழி. நாம் பயன்படுத்தும் தயிர் முதல் கொம்புச்சா காளான் வரையிலும் கூட இந்த எதிர்ப்பு சக்திகளை உண்டாக்கும் உணவுகள் நம்மிடம் ஏராளம் உள்ளன...’’ என்கிறார் அபா அப்பாசாமி. தன் கணவரின் நோய் எதிர்ப்புசக்திக்காக புரோபயோட்டிக் பானங்கள் தயாரிக்கத் துவங்கியவர் இன்று அதையே பிஸினஸாக மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார்.

‘‘கொம்புச்சா, யோகர்ட், தயிர் இவை எல்லாமே நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் சக்தி கொண்டவை. சின்னச் சின்ன அலர்ஜிகள் துவங்கி பெரிய வயிற்றுக் கோளாறுகள் கூட உண்டாக இந்த நல்ல பாக்டீரியாக்களின் அளவுகள் குறைவதுதான் காரணம். குறிப்பாக நோய்களை உண்டாக்கும் வைரஸ்கள், பாக்டீரியாக்களை அழிக்க நாம் எடுத்துக்கொள்ளும் அத்தனை மருந்துகளும் உடன் நல்ல பாக்டீரியாக்களையும் கூட சேர்த்து அழிப்பதுதான் நம் உடல் அடிக்கடி நோய்வாய்ப்படுவதற்கான காரணம். அதற்கு அடிப்படையிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிவிட்டால் மருந்துக்கு இங்கே வேலை இருக்காது...’’ என்கிறார் அபா அப்பாசாமி.

உப்பின் மேல் கவனம் தேவை

கூடுமானவரை வெள்ளை வெளேர் உப்பை நிறுத்திவிட்டு கல் உப்பை சமையலில் பயன்படுத்துங்கள். சாப்பாட்டில் எதோ ஒரு பொருளில் உப்பு குறைவாக இருந்தாலும் கூட அப்படியே சாப்பிடப் பழகுங்கள் அல்லது கல் உப்பை கலந்து சாப்பிடலாம். சிப்ஸ், அப்பளம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஊறுகாய், டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள் என அனைத்திலும் உப்பு நிறைந்திருக்கும். ஒரு நாளைக்கு 2,300 மிகி சோடியம் நம் உடலுக்கு போதும் என்கிறது அமெரிக்க உணவுத் துறை.

ஆனால், நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டிலேயே 3000 மிகி அளவைக் கடக்கும்போது மற்றவையும் சேர்ந்தால் என்ன ஆகும்..? நம் இரத்தம்தான் அழுத்தம் தாங்காமல் கதறும். அரசும் கூட சமீபகாலமாக காலை, மதிய உணவுகள் துவங்கி எப்படியெல்லாம் மக்களிடம் சரிவிகித உணவின் முக்கியத்துவத்தை அதிகரிக்க முடியுமோ அதற்கான நடவடிக்கைகளைச் செய்து வருகிறார்கள்.

எங்கும் சிறுதானிய உணவுக் கடைகளைப் பார்க்க முடிகிறது. அதற்கேற்ப நாமும் நம் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நாவின் பேச்சைக் கேட்காமல் மூளை மற்றும் வயிற்றின் பேச்சைக் கேட்டு உட்கொண்டாலே நீண்ட ஆயுள் நம் வசப்படும்.      

ஷாலினி நியூட்டன்