தற்கொலைக்கு முயன்ற இவர்தான் உலக சாதனை படைத்திருக்கிறார்!



இது ஷமி என்னும் ஹீரோவின் கதை

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது.
இந்த உலகக் கோப்பையில்தான் தனது 50வது சதத்தை அடித்து, தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. அத்துடன் பல ஆட்டங்களில் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. மற்ற வீரர்களும் சிறப்பான பங்களிப்பைத் தந்தனர்.

இதற்கிடையில் பெஞ்சில் அமர்ந்திருந்த முகமது ஷமிக்கும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆக்ரோஷமாக பந்து வீசி, பல சாதனைகளைப் படைத்து இந்திய கிரிக்கெட்டின் ஹீரோவாகிவிட்டார் ஷமி. இவர் கடந்து வந்த பாதை கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் பாடம். உத்தரப்பிரதேசத்தில் உள்ள சஹாஸ்பூர் எனும் கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர் ஷமி. தந்தை தௌசீப் அலி ஒரு விவசாயி. ஷமியின் குடும்பத்தில் அவருடன் சேர்த்து மொத்தம் ஐந்து குழந்தைகள்.

ஷமியின் தந்தை இளம் பருவத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்திருக்கிறார். ஷமிக்குக் கிரிக்கெட் மீதான ஆர்வம் தந்தையிடமிருந்து வந்திருக்கலாம். ஷமிக்கு 15 வயதாக இருந்தபோதே மொராதாபாத்தில் கிரிக்கெட் பயிற்சி அளித்து வந்த பத்ரூதின் சித்திக் என்பவரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். ஷமியின் வீட்டிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் பயிற்சி பெறும் இடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

“நான் முதன் முதலாக ஷமி பந்து வீசுவதைப் பார்த்தபோது அவருக்கு வயது 15தான். அப்பவே இந்தப் பையன் சாதாரணமானவன் இல்லை என்பதை உணர்ந்தேன். உடனே ஷமிக்குப் பயிற்சியளிக்க முடிவு செய்தேன். ஷமி ரொம்பவே கடின உழைப்பாளி. ஒரு நாள் கூட தவறவிடாமல் பயிற்சிக்கு வந்துவிடுவார். ஒரு வருடத்திலேயே உத்தரப் பிரதேசத்தின் டிரெய்லில் பங்குபெறும் அளவுக்கு ஷமியைத் தயார் செய்துவிட்டேன்.

19 வயதுக்குட்பட்டோரின் டிரெய்லில் நன்றாக பந்து வீசினார் ஷமி . சில அரசியல் காரணங்களால் உத்தரப்பிரதேச அணிக்காக ஷமி தேர்வாகவில்லை. தேர்வாளர்கள் ஷமியை அடுத்த வருடம் டிரெய்லில் பங்கு பெறும்படி சொன்னார்கள். ஒரு வருடத்தை வீணாக்க வேண்டாம் என்று ஷமியை கொல்கத்தாவுக்கு அனுப்பும்படி அவரது பெற்றோரிடம் சொன்னேன்...” என்கிற பத்ரூதின் சித்திக்கின் வழிகாட்டல்தான் ஷமி என்கிற வேகப்பந்து வீச்சாளர் வெளிச்சத்துக்கு வரக் காரணம். மட்டுமல்ல; பத்ரூதினின் பயிற்சியின் கீழ்தான் ரிவர்ஸ் ஸ்விங் திறமையை வளர்த்துக்கொண்டார் ஷமி.

மேற்கு வங்காள அணியில் இடம்பிடிப்பதற்காக 2005ம் வருடம் கொல்கத்தாவுக்கு வந்தார் ஷமி. அப்போது அவருக்கு தங்க இடம் கூட இல்லை. ஆரம்ப நாட்களில் டல்ஹௌசி அத்லெடிக் கிளப்பிற்காக விளையாடத் தொடங்கினார். கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பெங்காலின் முன்னாள் செயலாள ரான தெபாப்ரட்டா தாஸ், ஷமியின் பந்துவீச்சில் ஈர்க்கப்பட்டார். தன்னுடைய டவுன் கிளப்பில் விளையாடும்படி ஷமியிடம் கோரிக்கை வைத்தார் தாஸ். ஷமியும் டவுன் கிளப்பில் விளையாட ஆரம்பித்தார்.

தங்குவதற்கு இடம் இல்லை என்பதால் ஷமியை தன்னுடனே தங்குவதற்கு உதவி செய்தார் தாஸ். மட்டுமல்ல; மேற்கு வங்காள அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவில் இருந்த சம்பரன் பானர்ஜிக்கு ஷமியின் பந்து வீச்சுத் திறமையைக் காண்பித்தார் தாஸ். ஷமியின் பந்து வீச்சில் கவரப்பட்ட பானர்ஜி, ஷமியை 22 வயதுக்குட்பட்டோருக்கான மேற்கு வங்காள அணிக்குத் தேர்வு செய்தார். பிறகு மேற்கு வங்காளத்தின் சிறந்த கிரிக்கெட் கிளப்புகளில் ஒன்றான மோகன் பகான் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார் ஷமி.

அப்போது ஈடன் கார்டன் மைதானத்தில் சவுரவ் கங்குலிக்கு பந்து வீச நெட் பவுலர் வாய்ப்பு ஷமிக்குக் கிடைத்தது. தாஸ், பானர்ஜியைப் போலவே கங்குலியும் ஷமியின் பந்து வீச்சில் அசந்துபோய்விட்டார். மேற்கு வங்காள மாநில அணிக்காக ஷமியை சிபாரிசு செய்தார் கங்குலி. 2010 -11ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மேற்கு வங்காள அணியில் இடம்பிடித்தார் ஷமி.

2010ம் வருடம் அக்டோபரில் மேற்கு வங்காள அணியின் சார்பாக 20 ஓவர் போட்டியில் களம் இறங்கினார். முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அதே மாதத்தில் அசாம் அணிக்கு எதிராக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார் ஷமி. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருந்தாலும் ஷமியின் பெயர் பெரிதாக வெளி உலகுக்குப் பதிவாகவில்லை. 2012ம் வருடம் நடந்த துலீப் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் கிழக்கு மண்டலம் சார்பாக விளையாடினார் ஷமி. இந்தியாவிலுள்ள வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வட கிழக்கு, மையம் ஆகிய மண்டலங்களுக்கு இடையே நடக்கும் முதல் தர போட்டி இது.

அசாம், பீகார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒடிசா, திரிபுரா ஆகிய ஆறு அணிகளின் சிறந்த வீரர்களை உள்ளடக்கியது கிழக்கு மண்டல அணி. ஷமியின் பந்து வீச்சால் 2012ம் வருடம் முதல் முறையாக கிழக்கு மண்டல அணி துலீப் கோப்பையைக் கைப்பற்றியது. இப்போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் ஷமி. காயம் காரணமாக அசாமைச் சேர்ந்த அபு நசீம் என்ற வீரர் விளையாடவில்லை. அபுவுக்குப் பதிலாகத்தான் ஷமி களமிறங்கினார். கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி தனது பெயரை நிலை நாட்டினார். துலீப் கோப்பைக்குப் பிறகு கிரிக்கெட் வட்டாரங்களில் ஷமியின் பெயரும் அழுத்தமாகப் பதிவானது.

அதன்பிறகு ஐபிஎல்லில் அறிமுகமானார். 2013ம் வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்தவர், தில்லி டேர் டெவில்ஸுக்காகவும், பஞ்சாப் கிங்ஸ்க்காகவும் விளையாடினார். இப்போது குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருக்கிறார். இதற்கிடையில் 2013ம் வருடத்திலேயே இந்திய தேசிய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் களம் இறங்க ஆரம்பித்துவிட்டார். ஆனால், 2014 வருடம்தான் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது.

கடந்த பத்து வருடங்களில் 64 டெஸ்ட் போட்டிகள், 2015 மற்றும் 2019ல் நடந்த உலகக் கோப்பை போட்டிகள் உட்பட 100 ஒரு நாள் போட்டிகள், 23 டி20 போட்டிகள் மற்றும் ஏராளமான ஐபிஎல் போட்டிகளில் ஷமி விளையாடியிருந்தாலும் அவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இன்னொரு பக்கம் மனைவிக்கும் அவருக்கும் இடையிலான பிரச்னைகள், இஸ்லாமியர் என்ற புறக்கணிப்பு, மனைவி அவர் மீது வைத்த குற்றச்சாட்டுகள், சூதாட்டப் புகார்கள்  எல்லாமே அவரைத் தற்கொலையை நோக்கி நகர்த்தின.

அனைத்தையும் தாண்டி, நடந்து முடிந்த உலகக் கோப்பையில் பல சாதனைகளைப் படைத்து, தனக்கான அங்கீகாரத்தை தன்வசமாக்கியிருக்கிறார் ஷமி. இந்த சாதனையைக் கூட புறக்கணிப்புக்கு நடுவில்தான் படைத்திருக்கிறார். ஆம்; உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷமியின் பெயரும் இடம்பிடித்தது. ஆனால், முதல் நான்கு போட்டிகளில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பெஞ்ச்சில் அமர்த்தப்பட்டார்.

துலீப் கோப்பையின் போது நடந்ததைப் போல உலகக் கோப்பையிலும் நடந்தது. ஆம்; ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட, ஷமிக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி தனது பெயரை கிரிக்கெட் வரலாற்றில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஷமி. முதல் போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். அடுத்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன் பிறகு அரையிறுதியில் விஸ்வரூபம் எடுத்தார் ஷமி. அரை
யிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார். இந்தியாவையும் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

2023ம் வருட உலக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர், இதுவரை நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர், உலகக் கோப்பை போட்டிகளில் அதிக முறை 4 மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என பல சாதனைகளைத் தன்வசப்படுத்தியிருக்கிறார் ஷமி.


த.சக்திவேல்

6வது முறையாக உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா!

‘‘ஒருதலைப்பட்சமாக இருக்கும் ஒரு பெரிய கூட்டத்தைப் அமைதிப்படுத்துவதைவிட எதிர் அணி வீரர்களுக்குத் திருப்திகரமாக எதுவும் இருக்காது. அதுதான் எங்களின் நோக்கம்...’’
உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முந்தைய நாளில் மீடியாவிற்கு அளித்த பேட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் இப்படியொரு கவித்துவமான வார்த்தையை உதிர்த்தார்.

அதாவது, அகமதாபாத்தின் ஒட்டுமொத்த ஸ்டேடியமும் இந்திய ரசிகர்களால் நிரம்பியிருக்கும். அவர்களை அமைதிப்படுத்த வேண்டுமானால் ஆஸ்திரேலியாவிடம் வெற்றி வசப்பட வேண்டும். இதைத்தான் கவித்துவமாகக் குறிப்பிட்டார் பேட் கம்மின்ஸ்.

அவர் சொன்னதுபோலவே தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் ரன்களைக் குவித்து ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றியை ஈட்டித்தர மொத்த இந்திய ரசிகர்கள் கூட்டமும் அமைதியானது.

இது ஆஸ்திரேலியா அணியின் ஆறாவது உலகக் கோப்பை. 1975ல் உலகக் கோப்பைப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அணி எட்டு முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது. முதல் உலகக் கோப்பையிலேயே அந்த அணி இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்றது. பிறகு, 1987, 1996, 1999, 2003, 2007, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்தமுறை ஆஸ்திரேலியா அணி சில பலவீனங்களுடன்தான் இருந்தது. முதல் போட்டியிலேயே இந்திய அணியிடம் வீழ்ந்தது. இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது.

ஆப்கானிஸ்தானிடமும் தோற்றுவிடும். அரையிறுதிக் கனவு அவ்வளவுதான் என்றிருந்த நிலையில் மேக்ஸ்வெல் தனியொருவராக 201 ரன்கள் குவித்து வெற்றியை வசப்படுத்தி அரையிறுதியை உறுதிப்படுத்தினார். அரையிறுதியிலும் வலுவான தென்னாப்பிரிக்காவிடம் வெற்றி கடினம்தான் என்றனர் விமர்சகர்கள்.

அப்போது தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்து வெற்றிக்கொடியை நாட்டி சிறந்த வீரருக்கான விருதினையும் பெற்றார். இறுதிப் போட்டியிலும் சதம் அடித்து மேன் ஆஃப் தி மேட்ச் விருது பெற்றதுடன், ஆஸ்திரேலியா அணிக்கு கோப்பையையும் பெற்றுத் தந்துள்ளார் டிராவிஸ் ஹெட். டிராவிஸ் ஹெட் உலகக் கோப்பையின் முதல் ஐந்து போட்டிகளில் ஆஸ்திரேலியா லெவனில் இடம்பெறவில்லை. ஸ்மித் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் சோபிக்காத நிலையில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிலிருந்து ஒவ்வொருவராக லெவனில் மாற்றிப் பார்த்தது.

அப்படியாக ஆஸ்திரேலியா அணியின் ஆறாவது போட்டியில் நியூசிலாந்துடன் டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட்டார். அவர் சுழற்பந்து வீச்சாளரும்கூட. அந்தப் போட்டியில் 67 பந்துகளில் 109 ரன்கள் குவித்து தன் இடத்தைத் தக்கவைத்தார். அங்கிருந்தே ஆஸ்திரேலியா அணியின் எனர்ஜியும் கூடியது. ஆறாவது உலகக் கோப்பையையும் தங்கள் வசம் ஆக்கியது.  

- பேராச்சி கண்ணன்