இருமலா..? உஷார்!மழை... க்ளைமேட் சேஞ்ச். போதாதா..? இது இருமல் காலமாக மாறிவிட்டது.சாதாரண கிளினிக்குகள் முதல் அரசு மருத்துவமனை வரை இருமல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, டாக்டரைப் பார்க்க வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அப்படி இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாக நான்கு வாரங்களுக்கு மேல் ஆகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  

“இன்புளூயன்ஸா வைரஸ் மூச்சுப் பாதையை பாதிப்பதால் பலருக்கு ஜுரம், சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆஸ்துமா போன்ற சிக்கல்கள் இருப்பவர்கள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் பிரச்னை ஏற்படுகிறது. ஒவ்வாமை பிரச்னை இருப்பவர்களுக்கு இந்த சிக்கல் நீண்ட நாட்கள் நீடிக்கும். அதேசமயம் ஒவ்வாமை பிரச்னை இல்லாதவர்களை இந்த வைரஸ் தாக்கினாலும், சில நாட்களில் அவர்களின் இருமல் பிரச்னை குணமாகி விடும்...’’ என்கிறார்கள் பொது மருத்துவர்கள்.

சிறப்பு டாக்டர்களோ கூடுதலாக பல்வேறு விவரங்களைத் தருகிறார்கள். “பொதுவாக மழைக்காலத்தில் ஃப்ளூ ஜுரம் பரவும். இன்புளூயன்ஸா வைரஸின் தாக்கம் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வைரஸ் ஜுரம் குணமானாலும் நான்கு வாரங்கள் வரை பலருக்கும் இருமல் விடாமல் இருக்கிறது. 

அபூர்வமாக ஒருசிலருக்கு ஒரு மாதத்தைக் கடந்தும் இருமல் நீடிக்கிறது. பேசினாலே இருமல் வருவதாக நோயாளிகள் சொல்கிறார்கள். இந்தத் தொடர் இருமலுக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம்” என்கிறார்கள்.இப்படி தொடர் இருமலால் பாதிக்கப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டி நெறிமுறைகளையும் அவர்கள் வழங்கியுள்ளனர்.

இதன்படி தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான்:

*ஜுரம் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்து வாங்கிச் சாப்பிடக் கூடாது.

*டாக்டர்களிடம் சென்று தங்கள் இருமலுக்கான காரணம் என்ன என்பதைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். டாக்டர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

*இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாமல் பொது இடங்களுக்குச் செல்லவேண்டி இருந்தால் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்றாமல் இருக்க முகக் கவசத்தை அணிய வேண்டும்.

*குளிர் நிறைந்த சூழலில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

*வெதுவெதுப்பான நீரை அடிக்கடி பருக வேண்டும்

*தனி அறையில் ஓய்வு எடுக்க வேண்டும். முடிந்தவரை அதிகம் பேசாமல் தொண்டைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பல வாரங்களுக்கு இருமல் நீடித்தாலும், தங்களுக்கு ஏதோ பெரிய பிரச்னை வந்துவிட்டதோ என்று பயப்படக் கூடாது. சரியா..? இருமல் ஆரம்பிக்கும்போதே மருத்துவரைச் சென்று சந்தியுங்கள். ஆரோக்கியமே நம் பலம், கவசம் என்பதைப் புரிந்து கொள்வோம்.                         

ஜான்சி