ரயில்களின் வேகம் குறைகிறது..?
இதுதான் இப்போது ஹாட் டாபிக்
நீண்ட தூர பயணம் என்றாலே பேருந்துகளைவிட பலரும் ரயில்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கும் என்பது ஒரு காரணம் என்றால், ரயில்கள் விரைவாகச் செல்லும் என்ற மக்களின் நம்பிக்கையும் இதற்கு மற்றொரு காரணம். ரயில்கள் வேகமாகச் செல்வதால் தங்களின் நேரம் மிச்சமாகும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், ரயில்வே துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புள்ளிவிவரங்கள் இந்த நம்பிக்கைக்கு வேட்டு வைக்கின்றன. இந்தியாவில் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்களின் வேகம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளதாம். இந்த புள்ளிவிவரங்களின்படி சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் ஆகிய இரண்டு வித ரயில்களின் வேகமும் சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு ஐந்து கிலோமீட்டர் (5kmph) என்ற அளவில் முந்தைய ஆண்டை விட குறைந்துள்ளது.
புறநகர் பகுதிகளில் இயங்கும் பயணிகள் ரயில்களை விடுத்து, மற்ற பயணிகள் ரயில்கள் அனைத்தும், 2022 - 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் மட்டும் சராசரியாக 42.3 கிலோமீட்டர் வேகத்தில் சென்றிருக்கின்றன. இதே ரயில்கள் கடந்த ஆண்டில் 47.6 கிலோமீட்டர் வேகத்தில் சென்றன. இதேபோன்று, சரக்கு யில் 2022 - 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் மட்டும் 25.8 கிலோமீட்டர் வேகத்தில் சென்றிருக்கின்றன. இது முந்தைய ஆண்டில் மணிக்கு 31.7 கிலோமீட்டராக இருந்தது.
நாட்டின் மற்ற பகுதிகளில் செல்லும் ரயில்களைவிட, வடமேற்குப் பகுதிகளில் செல்லும் பயணிகள் ரயில்களின் வேகம் அதிகமாக இருந்தது. இப்பகுதிகளில் ரயில்களின் வேகம் மணிக்கு 51.5 கிலோமீட்டராக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.அதேநேரத்தில் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள ரயில்களைவிட வடகிழக்கு வழியாகச் செல்லும் பயணிகள் ரயில்களின் வேகம் குறைவாக உள்ளது. இப்பகுதிகளில் செல்லும் ரயில்கள் சராசரியாக மணிக்கு 34.1 கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றன.
வடக்குப் பகுதியில் செல்லும் பயணிகள் ரயில்தான் மிகவும் குறைந்த வேகத்தில் செல்கிறதாம். கடந்த ஆண்டை விட 4.9 kmph குறைந்த வேகத்தில் சென்றதாக தரவுகள் கூறுகின்றது. தெற்குப் பகுதிகளில் செல்லும் சரக்கு ரயில்கள் சராசரியாக கிழக்குப் பகுதி வழியாகச் செல்லும் சரக்கு ரயில்களை(16.6 kmph) விட அதிக வேகத்தில் (41.2 kmph) செல்கின்றன. மேற்கு மத்திய ரயில்வே வழியாகச் செல்லும் ரயில்கள் கடந்த ஆண்டை விட குறைந்த வேகத்தில் சென்றுள்ளன.
இச்சூழலில்தான் எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது.அதாவது அதிக விளம்பரத்துடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வந்தே பாரத் ரயில்களுக்காக மற்ற ரயில்களின் வேகத்தை ரயில்வே துறை குறைக்கின்றது என்பதுதான் அக்குற்றச்சாட்டு.உண்மையாக இருக்குமோ?
என்.ஆனந்தி
|