Must Watch



விக்கி அண்ட் ஹெர் மிஸ்ட்ரி

‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கும் நெகிழ்ச்சியான ஒரு படம், ‘விக்கி அண்ட் ஹெர் மிஸ்ட்ரி’. இந்த ஃபிரெஞ்ச் மொழிப்படம் ஆங்கிலத்திலும் காணக் கிடைக்கிறது. எட்டு வயது சிறுமி விக்டோரியா எனும் விக்கி. அம்மா இறந்த துக்கத்தில் இருக்கிறாள் விக்கி. அப்பாவுடன் கூட அவளால் சரியாக பேச முடிவதில்லை. 
விக்கியைக் கவலையில் இருந்து மீட்டெடுப்பதற்காக ஒரு காட்டுப்பகுதியில் இருக்கும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் அப்பா. அங்கே சில காலம் தங்குகிறார்கள். விக்கிக்கு மிஸ்ட்ரி என்ற பெயர்கொண்ட ஓநாய் குட்டியை ஒருவர் பரிசாகத் தருகிறார்.

நாய்க்குட்டி என்று மிஸ்ட்ரியை வளர்த்து வருகிறாள் விக்கி. அவளது அப்பாவும் மிஸ்ட்ரியை நாய் என்றே நினைக்கிறார். மிஸ்ட்ரியுடனான பிணைப்பு விக்கியை மகிழ்ச்சிப்படுத்துகிறது. அம்மாவின் இழப்பிலிருந்து மீண்டு வருகிறாள். 

எல்லோருடனும் சகஜமாகப் பேசுகிறாள் விக்கி. மிஸ்ட்ரி வளர, வளர ஓநாய் என்று தெரிய வர, சூடுபிடிக்கிறது திரைக்கதை.

உண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. இதன் இயக்குநர்  டெனிஸ் இம்பர்ட்.

ஆத்மபேம்பலெட்

சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளிய மராத்தி மொழிப்படம் ‘ஆத்மபேம்பலெட்’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது.
தொண்ணூறுகளில் படத்தின் கதை நிகழ்கிறது. சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் அறிமுகமான போது ஆசிஷ் என்ற சிறுவன் பள்ளியில்  படித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு பள்ளிக்குப் போவதே பிடிப்பதில்லை. வலுக்கட்டாயமாகப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறான்.

பள்ளியில் நடக்கும் ஒரு நாடகத்தில் நடிக்கிறான். அவனுடன் சேர்ந்து சிருஷ்டி என்ற சிறுமியும் நடிக்கிறாள். அந்த நாடகத்தின் போது சிருஷ்டியின் மீது காதலில் விழுகிறான் பத்து வயதான ஆசிஷ். சிருஷ்டியைக் காண்பதற்காகவே ஆர்வத்துடன் பள்ளிக்குச் செல்கிறான் ஆசிஷ். மாதங்கள் வேகமாக ஓடுகிறது. ஐந்தாம் வகுப்புக்குச் செல்கிறான். அங்கே சிருஷ்டி இருப்பதில்லை. ஐந்தாம் வகுப்பிலிருந்து காலையிலிருந்து மதியம் வரை மாணவிகளுக்கும், மதியத்திலிருந்து மாலை வரை மாணவர்களுக்கும் வகுப்புகள் செயல்படுகின்றன.

சிருஷ்டியை ஆசிஷ் எப்படி சந்திக்கிறான், அவனது இளம் பருவம் என்னவாகிறது என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறது திரைக்கதை. ஆசிஷ் என்ற சிறுவனின் வாழ்க்கையினூடாக இந்தியாவில் நடந்த முக்கிய சம்பவங்களை நகைச்சுவையுடன் இணைத்து தந்திருப்பது சிறப்பு. படத்தின் இயக்குநர் ஆசிஷ் பெண்டே.

டங்கி

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்திப்படம், ‘டங்கி’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. 2020ல் படத்தின் கதை ஆரம்பிக்கிறது. லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் மனு. மருத்துவமனையிலிருந்து தப்பிக்கிறாள். ஒரு வக்கீல் மூலமாக தன்னுடைய முன்னாள் காதலன் ஹார்டிக்குப் போன் செய்கிறாள்.

ஹார்டியும், மனுவும் பேசி 25 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பஞ்சாப்பில் இருக்கும் ஹார்டியை துபாய்க்கு வரச் சொல்கிறாள் மனு. ஹார்டியும் மனுவைச் சந்திக்க உற்சாகமாகச் செல்கிறான்.

உண்மையில் மனு யார், ஹார்டி யார், அவர்களின் பின்னணி என்ன, எப்படிச் சந்தித்தார்கள், இந்தியாவைச் சேர்ந்த மனு ஏன் லண்டனுக்குச் சென்றாள், படத்தின் தலைப்பு ‘டங்கி’ சொல்லும் செய்தி என்ன போன்ற கேள்விக்கான பதில்களை நகைச்சுவையுடன், சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.

வெளிநாடுகளுக்குச் சென்றால் வாழ்க்கை நல்லாயிருக்கும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது. நாம் ஒன்று நினைக்க, எதார்த்தம் என்னவாக இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது இந்தப்படம். ஹார்டியாக ஷாருக்கானும், மனுவாக டாப்ஸியும் கலக்கியிருக்கின்றனர். படத்தின் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி.

ஜலபட்டா

‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் கன்னடப் படம், ‘ஜலபட்டா’.  விதவிதமான வீடியோக்களை எடுத்து யூடிப்பில் பகிர்ந்து வருகிறாள் பூர்வி. ஒரு வீடியோ கூட நூறு பார்வைகளைக் கூட தொடவில்லை. 

இந்நிலையில் அவரது கிராமத்தைச் சேர்ந்த வானமாலம்மா என்ற பாட்டியின் தனிமையைப் பற்றி ஒரு வீடியோவை எடுக்கிறாள் பூர்வி.

அந்தப் பாட்டியின் வாரிசுகள் எல்லாம் அமெரிக்காவில் ஜாலியாக இருக்கின்றனர். யாருமே பாட்டியைக் கண்டுகொள்வதே இல்லை என்ற விமர்சனத்தையும் அந்த வீடியோவில் முன்வைக்கிறாள்.

பாட்டியைப் பற்றிய வீடியோ செம வைரலாகிறது. அமெரிக்காவில் இருக்கும் பாட்டியின் பேரனான விஷனும் அந்த வீடியோவைப் பார்க்கிறான். உடனே அமெரிக்காவிலிருந்து பாட்டியைப் பார்ப்பதற்காக இந்தியக் கிராமத்துக்கு வருகிறான் விஷன். 

பாட்டியுடனான கிராமத்து வாழ்க்கை விஷனுக்குள் என்ன மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்பதை சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் சொல்லியிருக்கிறது திரைக்கதை. ஒரு வழக்கமான கதையை எடுத்துக்கொண்டு சம காலத்தின் முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்னைகளைப் பற்றிப் பேசியிருப்பது சிறப்பு. படத்தின் இயக்குநர் ரமேஷ் பேகர்.

தொகுப்பு: த.சக்திவேல்