23 வயதில் சிவில் நீதிபதியான தமிழக பழங்குடிப் பெண்!ஜவ்வாது மலை பழங்குடி மக்கள் உற்சாகத்தில் உள்ளனர். காரணம், தங்கள் பகுதியிலிருந்து ஒரு பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகியிருப்பது அவர்களுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதுமட்டுமல்ல. கடந்த வாரம் அதிகம் வைரலான செய்தி ஜவ்வாது மலையும், 23 வயதில் சிவில் நீதிபதி தேர்வில் வென்ற ஸ்ரீபதியும்தான். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் ஸ்ரீபதிக்கு வாழ்த்துகளைப் பதிவிட்டு பாராட்டியுள்ளார்.   

அதில், ‘‘திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்! பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!

சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக்கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.     
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி, ஆரம்பக் கல்வியை ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் பயின்றுள்ளார். 

தொடர்ந்து பிஏ முடித்துவிட்டு சட்டம் பயின்றார். இதற்கு அவரின் தாய் உறுதுணையாக இருந்துள்ளார். பின்னர் கணவர் வெங்கட்ராமனும் அவருக்கு ஊக்கம்தர, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இதற்கிடையே கர்ப்பம் தரித்த ஸ்ரீபதிக்கு, தேர்வுத் தேதி அன்றுதான் பிரசவ தேதியும் வந்துள்ளது. இந்நிலையில் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன் குழந்தை பிறந்துவிட தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும் என நினைத்தார் ஸ்ரீபதி.பொதுவாக பிரசவம் முடிந்த பெண்கள் ஒரு வாரமாவது ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் தேர்வும் எதிர்காலமுமே முக்கியமெனக் கருதினார் ஸ்ரீபதி. இதற்கு கணவர் வெங்கட்ராமனும் ஒத்துழைப்புத் தந்தார். ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து, சாதாரண காரை பாதுகாப்பான காராக மாற்றி ஸ்ரீபதியை சென்னைக்கு அழைத்துச் சென்றார்.  

அந்த உடல்வலியும் மீறி கண்களில் லட்சியத்துடன் தேர்வை நம்பிக்கையாக எதிர்கொண்டார் ஸ்ரீபதி. இதோ அதற்கான பலனாக சிவில் நீதிபதி தேர்வில் வெற்றிவாகை சூடியுள்ளார்.
இந்தச் சின்ன வயதில் சிவில் நீதிபதியாக ஒரு பழங்குடிப் பெண் தேர்வானதால் இப்போது முதல்வர் உள்பட பல்வேறு தலைவர்களின் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறார் ஸ்ரீபதி.
அத்துடன் தங்கள் கிராமத்திற்கு ஸ்ரீபதி பெருமை சேர்த்துள்ளதாக புலியூர் பகுதி மக்களும் அவரை நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

பி.கே