உலகை அதிர வைத்த முதல் டிஜிட்டல் பலாத்காரம்!



மைனர் பெண் கொடுத்த பகீர் புகார்!  

விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ கேமில் உருவாக்கப்பட்ட சிறுமியின் டிஜிட்டல் கதாபாத்திரத்தை வேறு சில பாத்திரங்கள் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்து வருடங்களாகவே விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் பிரபலமாகி வருகிறது. இதன் அடிப்படையில் வீடியோ கேம்கள், திரைத்துறை, பயிற்சி வகுப்புகள் என பல தளங்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பே பயனாளர்களை நிஜத்துக்கு நிகரான கற்பனை உலகத்திற்குக் கூட்டிச் செல்லும் என்பதுதான். சமீபத்தில் முகநூல் வலைதளத்தின் தாய் நிறுவனமான மெட்டா இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ‘மெட்டாவெர்ஸ்’ என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. 
இந்த மெட்டாவெர்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ கேம் ஒன்று, பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கியுள்ளது. வீடியோ கேமில் ஒரு சிறுமியை பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் வந்திருப்பது உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. 16 வயது சிறுமி மெட்டாவெர்ஸ் மீது இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

அந்தச் சிறுமி VR கண்ணாடி மற்றும் ஹெட்செட்டுகள் அணிந்து மெட்டாவெர்ஸ் வீடியோ கேம் ஒன்றை அடிக்கடி விளையாடும் பழக்கம் கொண்டவர். இந்த விளையாட்டை விளையாடுபவர்களுக்கு ‘அவதார்’ என்ற டிஜிட்டல் கதாபாத்திரம் வழங்கப்படும். அதாவது 3டி அல்லது 2டி முறையில் ஒரு அனிமேஷன் கேரக்டர் கொடுக்கப்படும். தாங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ அதை விளையாட்டில் இருக்கும் அவர்களின் அனிமேஷன் கதாபாத்திரம் செய்யும்.

விளையாடும்போது சிறுமியின் டிஜிட்டல் கதாபாத்திரத்தை வேறு சில ஆண் அவதார்கள் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமிக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று வழக்கை விசாரிக்கும் போலீசார் கூறுகின்றனர்.

விர்ச்சுவல் ரியாலிட்டி உலகில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை.‘‘முதலில் டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்பது என்ன என்பதை விளக்க வேண்டும்...’’ என்று ஆரம்பித்தார் மருத்துவ உளவியலாளர் (Clinical Psychologist) வந்தனா. ‘‘கணினி அல்லது மொபைல் மூலமாக எப்படி வன்கொடுமை நடக்கும் என்னும் கேள்விகள் எழலாம். 

சட்டத்தின்படியும், மருத்துவ ஆய்வின்படியும் ஒரு நபர் இன்னொரு நபரின் மேல் உடல் ரீதியான ஆளுமையோ அல்லது தாக்குதலோ அல்லது அந்தரங்க உறுப்புகளின் மேல் நடத்தப்படும் கட்டாயப்படுத்துதலோதான் வன்கொடுமையாகவும், பலாத்காரமாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

ஒருவேளை டிஜிட்டல் மூலம் அந்தக் குற்றவாளி , பாதிக்கப்பட்டவரைப் பின்தொடர்ந்து அல்லது அடையாளங்களைத் திருடி, அந்தரங்க விபரங்கள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் மூலம் மிரட்டி ஒரு நபரைப் பணியவைத்து பலாத்காரம், வன்கொடுமை செய்தால் டிஜிட்டல் குற்றங்களிலும் இந்தத் தவறுகள் பதியப்படும்.

முதலில் அந்தக் குழந்தை எப்படிப்பட்ட விளையாட்டை விளையாடினார் என்பதற்கான போதுமான விளக்கம் இங்கே இல்லை. அதேபோல் பொதுவாகவே இந்த விஆர் தொழில்நுட்பம் இன்று பலவிதமான துறைகளில் நன்மைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏன் மனநல ஆரோக்கியத்திலேயே பல தெரபிகளை நாங்கள் விஆர் தொழில்நுட்பம் கொண்டுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கிறோம்.

உண்மைக்கு நிகரான கற்பனைக் காட்சிகளை உருவாக்குவதில் வல்லது இந்த வி ஆர் தொழில்நுட்பம். விஆர் தொழில்நுட்பத்தை விடுங்கள், மொபைலில் விளையாடப்படும் சில விளையாட்டுகளையே உணர்ச்சிவசப்பட்டு அருகில் இருப்பவர்களைக் கூட மறந்து விளையாடும் இளைஞர்களைப் பார்க்க முடிகிறது. 

நிச்சயம் விஆர் தொழில்நுட்பம் நம்மை உண்மை நிலைக்கும் கற்பனை நிலைக்கும் உண்டான குழப்பத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். அப்படியான ஒரு குழப்ப நிலையில்தான் இந்தச் சிறுமி சிக்கியிருக்க வேண்டும்.

விஆர் தொழில்நுட்பம் மட்டுமல்ல சாதாரண மொபைல் மற்றும் வீடியோ கேம் இவற்றிலேயே இருக்கும் கார்ட்டூன் கதாபாத்திரங்களை தங்களாகவே நினைத்துதான் விளையாடுகிறார்கள் எனில் விஆர் தொழில்நுட்பம் இன்னும் நம்மை  முழுமையாகவே உள்ளே இருக்கும் கதாபாத்திரம் நாம்தான் என நம்ப வைத்து விடும். அப்படியான பிரச்னைக்குத்தான் இந்தச் சிறுமி ஆட்பட்டிருக்க வேண்டும். 

அந்த கணக்கை லாக் அவுட் செய்திருக்கலாமே அல்லது மின்சார இணைப்பை துண்டித்திருக்கலாமே என நாம் கேட்கலாம். ஆனால், அந்தச் சிறுமி, தான் இருப்பது ஒரு கற்பனை உலகத்தில் என்பதையே மறந்திருப்பதால்தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.  

இதனால்தான் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமை ஆகாதீர்கள் என அரசும் சமூக ஆர்வலர்களும் மனநல ஆலோசகர்களும் அழுத்தமாகச் சொல்லி வருகிறார்கள்...’’ என்ற வந்தனா, அடுத்து வரும் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்... பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் விளக்கினார்.

 ‘‘இன்று ஓட்டுநர் பயிற்சி உட்பட பலவிதமான பயிற்சிகளை இந்த விஆர் தொழில்நுட்பத்தில்தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். மேலை நாடுகளில் கார் பந்தயம், டூ வீலர் ரேஸ் உள்ளிட்ட பந்தயங்களைக் கூட எந்த சேதாரமும் இல்லாமல் இந்த விஆர் தொழில்நுட்பத்தில்தான் வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள்.

உண்மை நிலைக்கும் கற்பனை நிலைக்கும் இருக்கும் வித்தியாசம் பெரியவர்களுக்கே சில நேரங்களில் விளங்காமல் இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்பொழுது 16 வயது சிறுமி எப்படி அந்த வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்? நடக்கும் கொடுமை தனக்கே நடப்பதாகத்தான் நினைத்து அந்தச் சிறுமி தொடர்ந்து போராடியிருப்பார் அல்லது தனது கதாபாத்திரத்தைக் காப்பாற்ற முயற்சி செய்திருப்பார்.

இதுதான் இப்போது மொபைல் கேமிலேயே கூட நடந்து கொண்டிருக்கிறது. தனக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தைக் காப்பாற்றத்தான் இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்களையும் மீறி வீடியோ கேம்கள் - மொபைல் கேம்களை சப்தமாக கத்திக்கொண்டு, பேசிக்கொண்டு விளையாடுகிறார்கள். 

அதேதான் இங்கேயும் நிகழ்ந்திருக்கிறது. முதலில் பெற்றோர்களிடமிருந்துதான் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஆரம்பிக்க வேண்டும். குழந்தைகள் தங்களை இடையூறு செய்யாமல் என்ன செய்தாலும் பரவாயில்லை... வீட்டிற்குள்தானே இருக்கிறார்கள் என்ற மன
நிலையை பல பெற்றோர்களிடம் பார்க்க முடிகிறது.

மொபைல், எலக்ட்ரானிக் கருவிகள் உள்ளிட்ட எதைப் பயன்படுத்தினாலும் தங்களது குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள்... எதற்கு அதிகம் அடிமை ஆகிறார்கள்... எதைக் கண்டு அதிகம் சந்தோஷப்படுகிறார்கள் அல்லது உற்சாகம் அடைகிறார்கள் என்பதை கண்காணிப்பது அவசியம். ஏனெனில், இப்படியான கற்பனை உலகிற்கும் உண்மை உலகிற்கும் இடையில் வித்தியாசம் தெரியாமல் நிகழும் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட நபர் தங்களுடைய உண்மை குணம் துவங்கி அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை வரை அனைத்திலும் பாதிப்பையும் மாற்றங்களையும் சந்திக்க நேரும்.

இப்படி நிகழும் பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்படி மனநல சிகிச்சை பெறுவது அவசியம். அதே போல் இப்போதைய தலைமுறை எதிலும் கொஞ்சம் அடம், பிடிவாதம் என இருக்கும் பட்சத்தில் இன்னும் கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. அரசுக்கும், டிஜிட்டல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் கூட பொறுப்பு இருக்கிறது.

பெற்றோர்கள் மட்டும் இங்கே பாதுகாப்பாக இருந்தால் போதாது. ஏனெனில் வளர்ந்த பெரியவர்களே கூட இந்த ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் உலகில் தங்களை இழந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபத்தில் கூட ஆன்லைன் டிரேடிங், விளையாட்டுகளில் பல லட்சங்களை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களை இதற்கு மேற்கோள் காட்டலாம்.

விளையாட்டுகளை உருவாக்கும் நிறுவனங்கள் அல்லது டிஜிட்டல் கிரியேட்டர்கள் சமூகப் பொறுப்புஉணர்ந்து நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கினால் நல்லது. மேலும் பாதுகாப்புக்கான அத்தனை அம்சங்களையும் பயனாளர்கள் சுலபமாகப் புரிந்து கொள்ளும்படி அமைப்பதும் மிக அவசியம்.

அதே சமயம் ஏதோ ஒரு விளையாட்டு அல்லது ஏதோ ஒரு டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகப்பெரும் அளவில் மக்களை அடிமையாக்கிக் கொண்டிருக்கிறது அல்லது அவர்களுக்கு ஆபத்தை உண்டாக்குகிறது எனில் அதில் அரசாங்கமும் கண்காணிப்புகளை அதிகரித்து அதன் பாதுகாப்பு குறித்த கேள்விகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்பதும் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதும் அவசியம்...’’ என அழுத்தமாக வந்தனா முடிக்க, சைபர் குற்றங்களுக்கான சட்டங்கள் இந்தியாவில் எப்படி உள்ளன என விளக்கத் தொடங்கினார் சைபர் குற்றவியல் துறை விரிவுரையாளரான திருமதி லதா சுப்ரமணியன்.

‘‘இந்தியாவில் சைபர் லா என ஒரு தனி சட்டக் கட்டமைப்பு 2000ம் ஆண்டு வரை இல்லை. ஒப்பந்தம், அறிவுசார் சொத்து, தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சட்டங்களின் கலவையாகத்தான் இருந்தன. 

பின்னர் அடையாளத் திருட்டு, சைபர் டெரரிசம், சைபர் புல்லிங், ஹேக்கிங், அவதூறு, பதிப்புரிமை, வர்த்தக ரகசியங்கள், பேச்சு சுதந்திரம், சைபர் துன்புறுத்தல் மற்றும் பின் தொடர்தல் என பலவிதமாக வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு குற்றத்திலும் இருக்கும் பாதிப்பை ஆய்வு செய்து இதற்கான சட்டங்கள் முறைப்படி இயற்றப்பட்டுள்ளன. அந்த வகையில் சைபர் குற்றங்களுக்கு என தனிப் பிரிவுகளும் கூட ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சரியான முறையில் நமக்கு நடக்கும் சைபர் குற்றங்களை தகுந்த ஆதாரங்களுடன் புகார் கொடுக்கும் பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதிலும் பெண்களுக்கு நடக்கும் சைபர் குற்றங்களில் உதவுவதற்கு மகளிர் தனிப்பிரிவு மற்றும் சைபர் பிரிவுகள் ஏராளமாக இருக்கின்றன. இப்படி பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவரும் பாதிக்கப்பட்டவர்களைச் சேர்ந்தவர்களும் முதலில் பயப்படாமல் தங்களுக்கு நடந்த குற்றங்களை வெளிப்படுத்த வேண்டும்; புகார் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் அந்தரங்க புகைப்படங்கள், அடையாளங்கள், பணம், பொருள் என எதையும் மூன்றாம் நபரிடம் பகிர்வதை தவிர்ப்பது அவசியம் என்பதைத்தான் சினிமா முதல் சமூக ஆர்வலர்கள், ஏனைய பாதுகாப்புச் சட்டங்கள் அனைத்தும் அறிவுறுத்துகின்றன...’’ என்கிறார் திருமதி லதா சுப்ரமணியன்.

ஷாலினி நியூட்டன்