பீகாரின் புர்ஜ் கலிஃபா!உலகின் உயரமான கட்டடமென பெயர் பெற்றது துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா. பல்வேறு உலக சாதனைகளைப் படைத்த இந்தக் கட்டடம் 163 மாடிகளைக் கொண்டது.
ஆனால், இப்போது இந்தியாவிலுள்ள புர்ஜ் கலிஃபா என வேடிக்கையாகச் சொல்லப்படுகிறது பீகார்காரர் ஒருவரின் வீடு. அந்த வீட்டின் வீடியோவும் இணையத்தில் செம வைரலாகி லட்சக்கணக்கானவர்களின் லைக்ஸை பெற்றுள்ளது.  

அப்படியென்ன அவர் செய்துள்ளார்?

ஒன்றுமில்லை. ஆறடி அகல நிலத்தில் ஐந்து மாடி கட்டடத்தை எழுப்பியுள்ளார். அவர் பெயர் சந்தோஷ். திருமணத்திற்குப் பின் தனது மனைவியுடன் இந்த ஆறடி அகல நிலத்தை வாங்கியுள்ளார். இவ்வளவு சிறிய இடத்தில் வசிக்க இருவரும் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.பிறகு, இதில் என்ன செய்ய முடியும் என யோசித்தவர் ஒரு எஞ்சினியரைச் சந்தித்து தனது தனிப்பட்ட வரைபடத்தைக் கொடுத்து ஒப்புதல் பெற்றுள்ளார். அப்படியாக இந்த ஐந்து மாடி வீடு கடந்த 2015ல் கட்டப்பட்டுள்ளது.  

பீகாரின் முசாஃபர்பூரிலுள்ள கன்னிப்பூரில் இருக்கிறது இந்த வீடு. இரண்டு பகுதிகளாக உள்ள இந்த வீட்டின் முதல் பகுதியில் படிக்கட்டுகளும், அடுத்த பகுதியில் அறைகளும் காணப்படுகின்றன. அவ்வளவு சிறிய இடத்தில் படுக்கையறை, சமையலறை, கழிப்பறை என சகல வசதிகளும் உள்ளபடி கட்டியுள்ளார் சந்தோஷ்.

2015ல் கட்டப்பட்டிருந்தாலும் இப்போது ஒரு வீடியோ பதிவர் இதனை தனது தளத்தில் வெளியிட அதுவே செம வைரலாகக் காரணம். அந்த வலைப்பதிவர் இதனை பீகாரின் புர்ஜ் கலிஃபா எனப் பெயரிட்டு பதிவிட்டுள்ளார். சிலர் இதனை ஈஃபிள் டவர் ஆஃப் பீகார் என்றும் கூறுகின்றனர்.இந்த வீடியோவால் இப்போது இதனை காண வேண்டியே உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூர் மக்களும் கன்னிப்பூர் வந்து செல்கின்றனர்.

பி.கே