மீண்டும் போராடும் விவசாயிகள்... என்ன காரணம்?அந்தக் காலத்தில் தலைநகர் தில்லியில் ஆட்சி செய்த ஆங்கிலேய அரசுக்கு எதிராக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உச்சரித்த மந்திர வார்த்தை ‘தில்லி சலோ’. இன்று, இந்திய நாட்டின் விவசாயிகள், சுதந்திர இந்தியாவில், ஆளும் மத்திய அரசுக்கு எதிராக இந்த மந்திர வார்த்தையை உச்சரிக்க வேண்டி வந்திருப்பது பெரிய அவலம்தான்.2020 - 21ம் ஆண்டு நடந்து முடிந்த விவசாயிகள் போராட்டம் நினைவிருக்கிறதா? இந்திய வரலாற்றில் விவசாயிகள் முன்னெடுத்த முதல் மிகநீண்ட போராட்டம் அதுதான்.

கடும் குளிர், கொரோனா அபாயத்துக்கு இடையே, 32 விவசாய அமைப்புகள் தலைநகர் தில்லியைச் சூழ்ந்து நடத்திய 13 மாத கால முற்றுகைப் போராட்டம் அது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று, தில்லி செங்கோட்டையைக் கைப்பற்றி விவசாயிகள் கொடியேற்றிய சம்பவம் கூட அப்போது நடந்தது.

750 விவசாயிகளின் உயிர்களை உறிஞ்சிக் குடித்த அந்தப் போராட்டம், பிரச்னைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.
இப்போது, அதேபோல மீண்டும் ஒரு விவசாயிகள் போராட்டம் வெடித்துக் கிளம்பியிருக்கிறது. தலைநகர் தில்லியை நோக்கி, ‘தில்லி சலோ’ என டிராக்டர்கள், லாரிகளில் புறப்பட்டிருக்கிறார்கள் பஞ்சாப் மாநில விவசாயிகள்.

*என்ன காரணம்?

பஞ்சாப் உள்பட சில வடமாநிலங்களில் சீரான மழைப்பொழிவு இல்லை. அவ்வப்போது அனல் காற்று, வெப்ப அலை. பஞ்சாப் மாநிலத்தில் கோதுமைக்கும், நெல்லுக்கும் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விதமான குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி.) உண்டு. இந்த ஆதரவு விலை, சட்டபூர்வமானதும் இல்லை.அதேநேரம் பருப்பு, எண்ணெய் வித்துகளுக்கு இந்த ஆதரவு விலைகூட கிடையாது. ஆகவே, இந்த வணிகப் பயிர்களை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய இக்கட்டான நிலை விவசாயிகளுக்கு.

பஞ்சாப் மாநிலத்தில் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. போதாக்குறைக்கு நெல், கோதுமை, சர்க்கரை, வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இவை அத்தனையும் இணைந்துதான் இந்தமுறை மீண்டும் ஒரு தில்லி நோக்கிய போராட்டத்தைத் தூண்டியிருக்கின்றன.

*விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன?

சட்ட அங்கீகாரம் அல்லது சட்ட உத்தரவாதம் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர் காப்பீடு திட்டம், விவசாயக் கடன் ரத்து, ஓய்வூதிய உயர்வு, 300 யூனிட் இலவச மின்சாரம்... இவைதான் விவசாயிகள் முன்வைக்கும் சில கோரிக்கைகள்.கூடவே, உலக வர்த்த அமைப்பில் இருந்து இந்தியா விலகவேண்டும், எம்.எஸ்.சுவாமி நாதனின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், 2020ம் ஆண்டு போராடிய விவசாயிகள் மீது போட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் நீதி வேண்டும், 2020ம் ஆண்டு போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வேண்டும்... இவற்றை எல்லாம் வலியுறுத்திதான் இந்த 2ம் கட்ட போராட்டம் தொடங்கியுள்ளது.

ஆர்ப்பாட்டத்துக்கு தயாராக, தடைகளைத் தகர்ப்பதற்கென்றே மாற்றியமைக்கப்பட்ட டிராக்டர்கள், பண்ணை வாகனங்களில் லட்சக்கணக்கான பஞ்சாப் விவசாயிகள் தில்லியை நோக்கி படையெடுக்க, பஞ்சாப் - அரியானா எல்லையில் உள்ள ஷம்பு, கானாவ்ரி உள்பட எல்லைப்பகுதிகளை அரசு முன்னெச்சரிக்கையாக தடாலடியாக மூடியுள்ளது. சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், சரக்குப் பெட்டகங்கள், இரும்பு ஆணிகள், முள்கம்பி வேலிகள் என பல அடுக்குத் தடைகள் போடப்பட்டுள்ளன.

எல்லைப்பகுதிகளில் இந்தத் தடைகளைத் தாண்டி நுழைய முயலும் விவசாயிகள் மீது தடியடி, ரப்பர் குண்டு தாக்குதல், தண்ணீர் வீச்சு நடக்கிறது. கூடவே உரம், பூச்சிமருந்து தெளிக்கும் டிரோன்கள் மூலம் விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகை குண்டுவீச்சையும் காவல்துறை நடத்தி வருகிறது. பேரொலி எழுப்பி, எதிரில் இருப்பவர்களை நிலைகுலைய வைக்கும் அதிக அடர்ஒலி சோனிக் ஆயுதங்களை இந்தமுறை புதுவரவாக போலீசார் பயன்படுத்தி வருகிறார்கள்.

‘காவல்துறையின் தாக்குதலுக்கு எதிர்வினையாக, விவசாயிகள் நச்சுவாயு தடுப்பு முகமூடி அணிந்து கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு நடத்துகிறார்கள். கோணிச் சாக்குகளில் தீவைத்து எறிகிறார்கள். மிளகாய்ப்பொடியை வீசி எதிர்த்தாக்குதல் நடத்துகிறார்கள்’ என அரசுத் தரப்பு கூறுகிறது. கண்ணீர்ப்புகை குண்டுவீசும் டிரோன்களைத் தடுக்க விவசாயிகள் காற்றாடிகளைப் பறக்க விடும் அதிசயமும் நடக்கிறது.விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க, பஞ்சாப், அரியானாவின் 7 மாவட்டங்களில் இணையவசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

15 மாவட்டங்களில் 144 தடைச் சட்டம், ஐந்தாயிரம் பாதுகாப்புப் படையினர் குவிப்பு, விவசாயிகளின் சமூக வலைதளங்கள் முடக்கம், அரியானா காவல்துறை 30 ஆயிரம் கண்ணீர்ப்புகை குண்டுகளுக்கு ஆர்டர் என செய்திகள் வருகின்றன. மொத்தத்தில் எதிரி நாட்டுடன் போர் நடத்துவதைப் போல, விவசாயிகளுக்கு எதிராக தில்லிக்கு 200 கிலோமீட்டர் தொலைவில் ஒரு போர் நடத்தப்பட்டு வருகிறது.

*ஏழு வித்தியாசங்கள்

2020 - 21ல் நடந்த விவசாயிகளின் போராட்டத்துக்கும், இந்தமுறை நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கும் இடையே சிலபல வேறுபாடுகள் இருக்கின்றன.
2020ல் தொடங்கிய போராட்டத்தில் 32 அமைப்புகள் பங்கேற்றன. ஆனால், இந்தமுறை சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்.), கிசான் மஸ்தூர் மோர்ச்சா (கே.எம்.எம்.) என்ற 2 பெரிய அமைப்புகளே இந்த போராட்டத்தை வழிநடத்துகின்றன.

பல்வேறு விவசாய அமைப்புகள் இந்தமுறை ஒற்றுமையாக ஒரே பதாகையின் கீழ் கூடியிருப்பதைப்போலத் தெரியவில்லை.ஏற்கெனவே நடந்த விவசாயிகள் போராட்டத்தில் மேற்கு உத்தரப்பிரதேசம், அரியானா உள்பட பல வடமாநிலங்கள் பங்கேற்றன. ஆனால், இந்தமுறை பஞ்சாப்பை மட்டுமே குவி மையமாக வைத்து இந்த போராட்டம் சுழல்கிறது. உ.பி., ம.பி., ராஜஸ்தான் மாநிலங்கள் மௌனம் காக்கின்றன. மேற்கு உ.பி., காஷ்மீர் போன்ற இடங்களில் லேசான ஆர்ப்பாட்ட அதிர்வுகள் மட்டுமே ஏற்பட்டிருக்கின்றன.

ஜக்ஜித்சிங் தாலேவால், சர்வன்சிங் பாந்தேர் போன்ற புதிய முகங்கள் இந்தமுறை போராட்டத்தை வழிநடத்துகின்றனர். கடந்த போராட்டத்தில் பங்கேற்ற பல தலைவர்களை இந்தமுறை காணவில்லை.கடந்தமுறை சமூக ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலதரப்பினரின் ஆதரவு திரட்டப்பட்டது. இந்தமுறை விவசாயிகள் மட்டுமே தனித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

2020ல் தொடங்கிய போராட்டம், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம். ஆனால், இந்தமுறை ஏகப்பட்ட கோரிக்கைகளுடன் விவசாயிகள் களத்தில் குதித்துள்ளனர்.
விவசாயிகள் நடத்திய முதல் போராட்டத்துக்குப்பிறகு, பிரச்னைக்குரிய 3 வேளாண் திட்டங்கள் கைவிடப்பட்டன. பிரச்னை குறித்து ஆராய 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த நிபுணர்கள் இன்றுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை!

உணவு அரசியல் என்பது உலகளாவிய அரசியல் மட்டுமல்ல, ஓர் உணர்வு ரீதியான அரசியல். இந்தநிலையில், விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு வழக்கம்போல வெளிநாட்டு சதி, வெளிநாட்டுத் தூண்டுதல் என்றெல்லாம் குற்றம் சொல்லாமல், உரியமுறையில் நல்லவிதமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். எல்லோரது எதிர்பார்ப்பும் இதுதான்.

ஜான்சி