சிறுகதை - இறுக்கம்



சத்தியமூர்த்தி காரிலிருந்து இறங்கி வட்டமலை குமரக் கடவுளுக்கு ஒரு கும்பிடு போட்டார்.  ‘‘முருகா... பத்து வருடங்களுக்கு அப்புறமா பகையோடு இருக்கிற அண்ணனைப் பார்க்கப் போறேன். நீதான் அருள் புரியணும்!’’ காரில் ஏறினார்.
அம்மாபாளையம் கிராமத்தில்தான் சத்தியமூர்த்தியும் அவருடைய அண்ணன் சென்னிமலையும் அவர்களின் அப்பா பழனி, அம்மா தேவியும் ஒன்றாக வசித்தார்கள். அப்பாவுக்கு, தான் உயிரோடு இருக்கும்போதே சொத்துக்களைப் பிள்ளைகளுக்குப் பிரித்துவிட வேண்டுமென்று தோன்றி அதற்கான வேலைகளை ஆரம்பித்தார்.

அம்மாபாளையத்தில் உள்ள வீடு, ஊருக்கு வெளியே இருந்த தென்னந் தோப்பு இவற்றைத் தங்கள் காலம் உள்ளவரையில் தாங்களே வைத்துக்கொள்வதென்றும்; காங்கயம் நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் இருந்த மூன்று ஏக்கர் நிலத்தை இரு மகன்களுக்கும் சமமாகப் பிரித்து ரிஜிஸ்தர் செய்து விடலாமென்றும் பழனி டாக்குமெண்ட் ரைட்டர் சாந்தகுமாரிடம் பத்திரம் எழுதச் சொன்னபோதுதான் பிரச்னை துவங்கியது.

‘‘அது எப்படிச் சரியாவும்? சத்தியமூர்த்தியைப் படிக்க வெச்சீங்க. எட்டாப்பு வரைக்கும் இங்க அம்மாபாளையத்துலியும், ஹை ஸ்கூல் படிப்பை குண்டடத்திலியும், காலேஜ் படிப்பை திருப்பூர்லயும் படிச்சான். அப்புறம் மெட்ராசுக்குப் போய் மேல படிச்சு இப்ப போலீஸ் வேலைல சேந்து கை நிறையச் சம்பாதிக்கிறான். 

என்னைப் படிக்க வெச்சீங்களா? மூணு ஏக்கர் நிலத்தையும் எனக்கு முழுசாக் கொடுத்துடுங்க. இல்லாட்டினா, அவனுக்கு அரை ஏக்கர் நிலம், எனக்கு ரெண்டரை ஏக்கர் நிலம்னு பிரிச்சு எழுதுங்க!’’ என்றார் அண்ணன் சென்னிமலை.

பழனிக்குக் கோபம் வந்தது. ‘‘ஒன்னிய ஆருடா படிக்க வேணாம்னு சொன்னாங்க? ஒனக்குப் படிப்பு ஏறலை. சத்தி நல்லாப் படிச்சான்...’’ என்றார்.

‘‘தம்பிக்கு கெவுர்மெண்டு வேலை இருக்கு. அதுவும் போலீஸ் வேலை. அதுனால எனக்கு ரெண்டரை ஏக்கர், சத்திக்கு அரை ஏக்கர்... அதான் நாயம்!’’கடைசிவரை பழனி பெரிய மகனின் கோரிக்கையை ஏற்கவேயில்லை.  சத்தியமூர்த்தி, ‘‘அப்பா, அண்ணன் சொல்றதுதான் சரி. எனக்கு அந்த ஒன்றரை ஏக்கர் நிலமுமே வேணாம். மொத்தத்தையுமே அண்ணன் பேருக்கு எழுதி வெச்சுடுங்க!’’ என்றார்.அண்ணன் சென்னிமலை தம்பியிடம், ‘‘ஏண்டா, அப்பாவை மயக்கி உன் விருப்பப்படி நிலத்தை எழுதச் சொல்லிப்புட்டு, ‘எனக்கு வேணாம்.

அண்ணனுக்கே கொடுத்துடுங்க’ன்னு டிராமாவா போடறே? நா செத்தாலும் இனிமே ஒங்க ரெண்டு பேர் மொகத்துலியும் முழிக்க மாட்டேன்!’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார்.
ஒருவழியாக ஊர்ப் பஞ்சாயத்தார் தலையிட்டு இரு மகன்களுக்கும் ஒன்றரை ஏக்கர் என்று பங்கு பிரித்து, பெரிய மகனை சமாதானம் செய்து வரவழைத்து ரிஜிஸ்டர் செய்து வைத்தது பெரிய கதை. அதற்கப்புறம் சென்னிமலை காங்கயத்தில் உரக்கடை வைத்திருப்பதாகவும், ஓரிரு வருடத்தில் யாருக்கும் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்.

சத்தியமூர்த்தி ஐபிஎஸ் தேர்வில் அதிகமான மதிப்பெண் எடுத்திருந்ததால், சொந்த மாநிலத்துக்கே போஸ்டிங்ஸ் கிடைத்து, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யாகச் சேர்ந்து பணி புரிந்தார். அவ்வப்போது பெற்றோரைப் பார்க்க அம்மாபாளையம் செல்வது அவர் வழக்கம். அப்படி இந்த முறை வந்தபோது அவருக்குக் கிடைத்த ஒரு அனுபவமே, அண்ணன் சென்னி
மலையைத் தேடிச் சென்று உதவி கோர வேண்டியதான ஒரு நிலை...

போனவுடன் அண்ணனின் கால்களில் விழுந்து வணங்கினார் சத்தியமூர்த்தி. அண்ணனின் மனைவியும், அருகில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையும் இவரை வெறிக்கப் பார்த்து நின்றார்கள்.‘‘அண்ணே, நல்லா இருக்கீங்களா?’’ என்றபடி கொண்டு போயிருந்த பழங்கள், இனிப்பு  நிறைந்த பையை ஒரு ஓரமாக வைத்தார்.‘‘இதெலாம் என்னத்துக்கு?

இப்ப என்ன காரியத்துக்காக நீ வந்துருக்கே? அதைச் சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணு...’’‘‘அப்படிப் பேசாதீங்கண்ணே. நல்ல காரியத்துக்காக ஒரு உதவி வேண்டித்தான் உங்ககிட்டே வந்துருக்கேன். தட்டாம எனக்குச் செய்யணும். ப்ளீஸ்...’’‘‘ஓ, அதானே பாத்தேன். காரியமாத்தான் வந்திருக்கே! சரி, என்ன விசயம், சொல்லு...’’‘‘ஒரு நல்ல காரியத்துக்காக மூணு ஏக்கர் நிலம் தேவைப்படுது. 

என்னோட ஒன்ணரை ஏக்கர் நிலம் போக, மீதி ஒண்ணரை ஏக்கர் உங்க நிலம் என் நிலத்துக்குப் பக்கத்துலியே இருக்கறதால ரொம்ப உதவியா இருக்கும். இப்போதைய விலை மதிப்பு என்னவோ அதை நா கொடுத்துடறேன்...’’‘‘அடப்பாவி, என்கிட்டே இருக்கிற கொஞ்ச நிலத்தையும் புடுங்கணும்னு வந்துருக்கியா?’’சத்தமாகப் பேசிய சென்னிமலையின் கண்கள் ஆக்ரோஷத்தில் சிவந்து போயின. ‘‘மொதல்ல வெளியே போ!’’ என்று கத்தினார்.

‘‘அண்ணே, நா சொல்றதக் கேட்டீங்கன்னா..?’’

‘‘என்னடா, நீ சொல்றதக் கேக்குறது? கோடி ரூவாக் கொடுத்தாலும் எனக்குன்னு இருக்குற அந்த நிலத்தை நா கொடுக்க மாட்டேன். போடா வெளியே!’’அவருடைய கத்தல் சத்தியமூர்த்தியை நிலைகுலைய வைத்தது.  அண்ணியையும் அண்ணனையும் பார்த்து கை கூப்பியபடியே வெளியே வந்தார்.

அதே நெடுஞ்சாலையை ஒட்டினாற் போன்று  சின்னசாமி என்ற நபருக்கு நாலைந்து ஏக்கர் நிலம் இருந்தது. விலையைக் கொஞ்சம் அதிகமாகத் தருவதாகச் சொன்னால் கொடுப்பார் என்று சத்தியமூர்த்தியின் தந்தை பழனி சொன்னது ஞாபகம் வந்தது.

சின்னசாமிக்கு இவரைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கொஞ்சம் ஊர்க் கதையெல்லாம் பேசிவிட்டு சின்னசாமியின் நிலத்தில் ஒன்றரை ஏக்கர் நிலம் தனக்கு தேவைப்படுவதாக விவரமாகக் கூறினார். ‘‘இல்லே சத்தி, நா இப்ப நிலத்தை விக்கிற ஐடியாவுல இல்ல!’’ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பினார் சத்தியமூர்த்தி. அவருடைய லீவு முடிய இன்னும் ஒரு நாள்தான் இருந்தது.

அதற்குள் அவரின் முயற்சி வெற்றி அடையுமா?

காரில் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அம்மா தேவி காபி போடப் போனார்.

மூன்று நாட்களுக்கு முன் அவர் திருவள்ளூரிலிருந்து சொந்த ஊருக்குக் காரில் கிளம்பி வந்தார்.அம்மாபாளையம் வயற்காட்டில் நிறைய ஆடு மாடுகள் மேய்ந்தது கண்ணில் பட்டது. காரை நிறுத்தச் சொல்லி, இறங்கினார். கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பையன்களைக் கைதட்டி அழைத்தார்.

‘‘தம்பிகளா, பெரிய வீட்டுல பழனின்னு இருக்காரே பழைய மிலிட்டரிக்காரர். அவரோட மகன்தான் நானு...’’அவர்கள் முகம் மலர்ந்தார்கள். ‘‘நீங்க பெரிய போலீஸ் அதிகாரியா இருக்கீங்கன்னு தெரியும். எங்க ஊருக்கு உங்களாலே ரொம்பப் பெருமை சார்!’’ என்று உற்சாகத்துடன் சொன்னார்கள்.‘‘அது சரி, பள்ளிக்கூடம் போற வயசுல ஆடு, மாடு மேய்ச்சுக்கிட்டிருக்கீங்களே, ஏன், படிக்கலையா?’’

அவர்கள் தலையைக் குனிந்து கொண்டார்கள். ஒருவன் மெல்லச் சொன்னான். ‘‘படிக்க ஆசைதான் சார். ஆனா, அம்மாபாளையத்துல இருக்குற ஸ்கூல்ல எட்டாப்பு வரைக்கும்தான் இருக்கு. நாங்க எட்டாப்போட நின்னுப்புட்டோம்...’’‘‘ஏன்பா, குண்டடம் ஸ்கூலுக்குப் போய் ப்ளஸ் டூ வரைக்கும் படிக்கலாமே...’’‘‘படிக்கலாம் சார்... ஆனா...’’ என்று ஒருவன் இழுத்தான்.

‘‘ஆனா, என்ன தம்பிகளா பத்து கிலோ மீட்டர் தூரம்தானே, சைக்கிள்ல போயிட்டு வரலாமே? நானெல்லாம் அப்படிப் போய்த்தானே படிச்சேன்!’’‘‘ஒங்க கதை வேற சார். வழியில சந்திரநல்லூர்னு ஒரு ஊரு இருக்கே, அது வழியாப் போக எங்களுக்கு அனுமதி கெடையாது. நாங்க குண்டடம் போகணுமின்னா குச்சிபாளையம் வழியா இருபது கிலோமீட்டர் சுத்தித்தான் போகணும்...’’தூக்கிவாரிப்போட்டது சத்தியமூர்த்திக்கு.

 ‘‘யார் உங்களுக்கு அனுமதி கொடுக்கணும்?’’

‘‘அந்த ஊர் பண்ணையாரும் ஊர் மனுசங்களும் சாதி பாக்குறாங்க. நாங்க அந்த ஊர் வழியா வரக்கூடாதுன்னு சட்டம் போட்டிருக்காங்க. அதனால நாங்க தெனம் இருவது கிலோ மீட்டர் போய், அதே தூரம் திரும்பி வர்றது முடியற காரியமா சார்?’’நெஞ்சில் பந்தாய் எதுவோ அடைத்துக் கொண்டது சத்தியமூர்த்திக்கு. 

சுதந்திரம் வாங்கி இத்தனை காலத்துக்குப் பிறகுமா இந்தக் கொடுமை? மாவட்ட எஸ்.பி.யிடம் சொல்லி இதற்குத் தீர்வு காணவேண்டும் என நினைத்தார்.‘‘இந்த ஊரிலேயே பிளஸ் டூ வரை படிக்க வசதி வந்தால் நீங்க படிப்பீங்களா?’’ என்று கேட்டார்.  ‘‘ஓ, நிச்சயமாய்!’’ என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

வீட்டுக்குப் போனதும் மாவட்ட சி.இ.ஓ. (முதன்மைக் கல்வி அலுவலர்)வுக்கு போன் போட்டார். ‘‘அம்மாபாளையத்தில் தற்போது எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளியை உயர்நிலைப்
பள்ளியாக்க என்ன விதிமுறைகள்?’’ என்று விசாரித்தார்.‘‘அந்தப் பள்ளிக்கூடம் ரொம்பவும் சின்ன இடத்துல இருக்கு. ஹைஸ்கூலாக்க மூணு ஏக்கர் நிலம் வேணும். கூடவே, அரசாங்கத்துக்கு இரண்டரை லட்ச ரூபாய் பணம் செலுத்தணும். இதையே மேனிலைப் பள்ளியாத் தரம் உயர்த்தணுமின்னா இன்னொரு இரண்டரை லட்ச ரூபா கட்டணும்...’’ என்றார் சி.இ.ஓ.

‘என்னுடைய ஒன்றரை ஏக்கர் நிலத்துடன் அண்ணன் சென்னிமலையின் ஒன்றரை ஏக்கர் நிலமும் சேர்ந்தால், மூன்று ஏக்கர் கிடைத்து விடும். பணம் நாமே செலுத்தி விடலாம்’ என்று முடிவு செய்து கொண்டார் சத்தியமூர்த்தி.

ஆனால், அண்ணன் மறுத்துவிட்டார். வேறு எவரும் நிலம் கொடுக்க மறுக்கிறார்கள். வேதனை அவரைத் தின்றது.உறக்கமே வரவில்லை.

‘மனிதர்கள் ஏன் இப்படி மனிதத்தன்மையே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்?’

காலையில் அப்பாவும் அம்மாவும் வழியனுப்பினார்கள். கார் கிளம்பியது. வட்டமலை முருகனைப் பார்த்து ‘‘நீ கூட ஏமாத்திட்டியே சாமி?’’ என்று சத்தியமூர்த்தி முணு முணுத்தார்.
கார் ‘சடக்’கென்று நின்றது. எதிரில் இரு சக்கர வாகனம். நல்ல வேளை, டிரைவர் பிரேக்கை அழுத்தி விட்டார்.‘‘என்னப்பா ஆச்சு?’’ என்று டிரைவரைக் கேட்டபடியே, எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்து மோதவிருந்தவரைப் பார்த்துத் திடுக்கிட்டார்.

கதவைத் திறந்து இறங்கினார்.எதிரில் அண்ணன் சென்னிமலை நின்றார்.சத்தியமூர்த்தியைப் பார்த்துக் கை கூப்பினார். அவர் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது. ‘‘என்னை மன்னிச்சுடுடா சத்தி. நீ நேத்து வந்தப்ப கொஞ்சம் கூட இரக்கமில்லாம நடந்து உன்னை விரட்டிப்புட்டேன். 

சந்திரநல்லூர்ப் பண்ணையாரும் அந்த ஊர்க் காரப் பயலுகளும் பண்ற அக்கிரமத்தால் சுற்றுப்பட்டு கிராமத்துப் புள்ளைக எட்டாப்பு படிப்பைத் தாண்டாம மாடு மேச்சுகிட்டுத் திரியுதுங்க. அது பொறுக்காம நீ நடவடிக்கை எடுக்கிறது தெரியாம உனக்கு நீ கேட்ட நிலத்தைத் தர மறுப்பு சொல்லிட்டேன்.

சின்னசாமி என்னோட உரக்கடைக்கு வந்தப்ப சொல்லித்தான் எனக்கு விசயம் தெரிஞ்சது. என் ஒண்ணரை ஏக்கர் நிலத்தை ஒரு பைசா கூட வாங்காம இப்பவே கெவர்மெண்டுக்கு எழுதித் தந்துப்புடறேன். கூடவே நீ ரெண்டரை லட்ச ரூபா போடு, நானும் ரெண்டரை லட்ச ரூபா கொடுக்கறேன்.

ஸ்கூலை பிளஸ் டூ வரைக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கிற பள்ளிக்கூடமா மாத்தி இந்த ஊர்ப் புள்ளைங்க மாடு மேய்க்கப் போகாம, படிக்கறதுக்கு வழி செஞ்சுடலாம்...’’சத்தியமூர்த்தி புழுதி மண்ணில், அண்ணனின் காலடியில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுதார்.

 - ஜே.வி.நாதன்