சிறுகதை - நிமித்தம்



‘‘செல்வி உங்களைப் பார்க்கணுமாம்...’’
ஸ்ரீமதி சொன்னதும் எனக்குள் கொஞ்சம் எரிச்சல். இன்றைக்குள் வேலை முடித்து புரடக்‌ஷனுக்கு அனுப்ப வேண்டும். டீம் மேனேஜர் ஏற்கெனவே லீவ் லெட்டர் அனுப்பி விட்டார்.
‘‘என்னவாம்?’’

‘‘என்கிட்ட சொல்லமாட்டா...’’ஸ்ரீமதியின் குரலில் நையாண்டி. எழுந்து போனேன்.மாடிப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் வாருகோலும் ப்ளாஸ்டிக் முறமும்.‘‘என்னம்மா...’’‘‘ஆயிரம் ரூபா வேணும். சம்பளத்துல பிடிக்க வேணாம். ரெண்டு மாசத்துல திருப்பிடறேன்...’’முன்பு இப்படிச் சொல்லி வாங்கியதே இன்னும் பாக்கி நிற்கிறது.

என் முகத்தில் நினைப்பின் வரிகள் ஸ்க்ரோல் ஆவதைக் கண்டு பிடித்து விட்டாள்.‘‘அவருக்குக் கண்ணுல ஆபரேசன். கெவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரில. சொட்டு மருந்துல்லாம் வாங்கணும்...’’
உள்ளே வந்தேன். என் பர்சிலிருந்து இரண்டு ஐநூறு நோட்டுகளை எடுத்தேன்.

‘‘இந்தாங்க...’’
வாங்கிக் கொண்டு கிளம்பியவளிடம் ‘நாளைக்கு வேலைக்கு வருவீங்களா’ என்று கேட்கக் கூச்சமாய் இருந்தது.செல்வி போகிறபோக்கில் சொன்னாள்.‘‘காலைல வாசத் தெளிக்க வந்துருவேன்...’’ஸ்ரீமதியின் பார்வையில் கேலி தெரிந்தது.‘‘கர்ண மஹாராஜா இன்றைய தினத்தை இப்படியாக ஆரம்பித்தார்...’’பதில் சொல்லாமல் மீண்டும் என் வேலைக்குள் மூழ்கிப் போனேன்.

செல்வி வேலைக்கு வந்து மூன்று ஆண்டுகள். வந்த பத்தாம் நாளே அட்வான்ஸ். இன்று வரை முழுச் சம்பளம் வாங்கியதில்லை. இருபது தேதிக்குள் ஒரு தொகை. மீதி ஒன்றாம் தேதி.
கணவன் வேலைக்குப் போகவில்லை. குடிகாரன். சவடாலாய் வாசலில் நிற்பான். செல்வி கொடுத்த ஃபோன் நம்பர் அவனுடையது. அழைத்தால் ‘‘வூட்டுல இல்லீங்க. வந்தா பேசச் சொல்றேன்’’ என்பான். பேசச் சொன்னதே இல்லை.

இரண்டு மகன்கள். மூத்தவனும் குடிக்கு அடிமை. இரண்டாவது மன வளர்ச்சி இல்லை. பார்த்தால் தெரியாது. செல்வியுடன் அவனும் வருவான். அபார்ட்மென்ட் கழுவி விடும் வேலைக்கு உதவியாக பக்கெட்டில் நீர் கொண்டு வருவது, செல்வி ஒரு பக்கம் பெருக்கினால் இவன் இன்னொரு பக்கம் கூட்டித் தள்ளுவான். என் மூன்று மாதப் பழைய டிஷர்ட்டை அவனுக்குக் கொடுத்தேன். ஒருநாள்தான் போட்டு வந்தான்.

ஆறேழு மாதங்களுக்கு முன் மூத்த மகன் மனைவி குழந்தையுடன் வேறு வீடு பார்த்து போய் விட்டதாய்த் தகவல்.‘சின்னவன் முறைச்சு பார்க்கிறான்னு அடிச்சுப்புட்டாளாம். நீ தனியாப் போடான்னு செல்வி விரட்டி விட்டுட்டா’ - ஸ்ரீமதியின் ரிப்போர்ட்.செல்வியைப் பார்த்தால் லைட்டாய் ஒரு அனுதாபம். அவள் பிரச்னைகளை அவ்வப்போது கேட்கும்போது வருத்தம் வரும். என்னால் முடிந்தது இம்மாதிரி சலுகைகள்.மறுநாள் அலுவலகத்திலிருந்து வந்ததும் மதியின் புகார்ப் பட்டியல்.

‘‘உங்க செல்வி இன்னிக்கு என்ன பண்ணா தெரியுமா?’’

‘‘வேலைக்கு வரலியா...’’
‘‘எல்லாம் வந்தா. கூடவே ஒரு குழந்தையோட...’’மூத்த மகனின் பையன். சிட் அவுட்டில் உட்கார வைத்து விட்டாள் இவள் வேலை முடிக்கும் வரை. கீழ் வீட்டுப் பெண்மணி வழக்கமாய் உட்காரும் இடம்.‘‘இவனை யாரு இங்கே ஒக்கார வச்சது...’’ என்று ரகளை. கூச்சல் கேட்டு மதி ஓடிப் போய் சமாதானம் செய்திருக்கிறாள்.‘‘என்னால இந்த மாதிரி அக்கப்போர்லாம் தினமும் பஞ்சாயத்து பண்ண முடியாது...’’‘‘நான் செல்விட்ட பேசறேன்...’’

மறுநாள் செல்வி வரும்போது கூடவே குட்டிப் பையனும்.

‘‘ஹாய். உன் பேர் என்ன?’’

கையில் ஒரு சாக்லேட் வைத்திருந்தேன் முன்னேற்பாடாய். வாங்கிக் கொண்டான். ‘இப்படிப் பிரிச்சு சாப்பிடணும். ஓக்கேவா’ என்று சொல்லும் முன்னரே பிரித்து விட்டான்.செல்வி பெருக்கும்போது அருகில் போய் ப்ளாஸ்டிக் முறத்தை நீட்டினான். பக்கட்டில் நீர் கொண்டு வரும்போது மக்கைத் தூக்கிக் கொண்டு வந்தான்.
‘‘சூட்டிகையா இருக்கான். பேரப் புள்ளையா?’’

செல்வி தலையாட்டினாள்.
‘‘ஆபரேஷன் ஆயிருச்சா?’’
அதற்கும் தலையசைப்பு. செல்விக்குத் தெரிந்திருக்க வேண்டும். நான் ஏன் அவளோடு பேச வந்திருக்கிறேன் என்று.
அதற்குள் கீழ் வீட்டுப் பெண்மணியும் வந்து விட்டார்.
‘‘சின்னக் குழந்தையைக் கூட்டிகிட்டு வரா. ஏதாச்சும் ஒண்ணு ஆச்சின்னா...’’
‘‘நான் விசாரிக்கிறேன்...’’
‘‘இதெல்லாம் நல்லால்ல...’’

செல்விக்கு அப்போதுதான் சீற்றம் வந்தது.‘‘எதும்மா நல்லால்ல. சின்னப் புள்ளைய போயி எறக்கி விட்டியே. அது நல்லாருக்கா..?’’‘‘எப்படிப் பேசறா பாருங்க...’’‘‘கொஞ்சம் இருங்கம்மா. நான்தான் கேட்கறேன்னு சொன்னேனே...’’‘‘என்னத்த கேட்டீங்க. வேலைக்காரிட்டல்லாம் பேச்சு வாங்கத்தான் இங்கே இவ்ளோ வாடகை கொடுத்து குடி வந்தோமா?’’30 ஃப்ளாட்கள். மூன்று ப்ளாக். சிலர் எட்டிப் பார்த்தார்கள். யாரும் வெளியே வரவில்லை. 

என்ன நடந்தாலும் வேடிக்கை பார்ப்பது என்கிற கட்டமைப்பு மனோபாவம்.‘‘செல்வி உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறது இங்கே இருக்கிற 30 வீட்டுக்காரவுங்களும்தான். அவங்ககூட வம்பு செய்யலாமா?’’

‘‘அய்யா அது சின்னப் புள்ள. அதுகிட்ட போயி உன் சொந்த வூடா சொகுசா ஒக்கார்ந்துருக்கன்னு கேட்டா என்னா புரியும். பாட்டின்னு சொல்லி சிரிச்சுது. நா ஒனக்குப் பாட்டியான்னு அதுக்கும் வசவு...’’செல்வியின் கண்களில் நீர்.

‘‘ஆமா. இவன் எனக்குப் பேரனா என்ன?’’
அடக் கடவுளே. ஒரு பிஞ்சிடம் போயா சமர் செய்கிறார். வலித்தது. குனிந்து அவனைத் தூக்கிக் கொண்டேன்.‘‘வா அந்தப் பக்கம் போகலாம்...’’செல்வி வேலையை முடித்துவிட்டு வரும்வரை அவனோடு விளையாட்டு.

‘‘வீட்டுல விட்டுட்டு வரலாம்ல...’’‘‘போக்கத்தவ புள்ளையை விட்டுட்டு போயிட்டா. நான் பெத்த மவராசன் என்கிட்ட கொண்டு வந்து தள்ளிட்டான். இது என்னடான்னா அப்பத்தா அப்பத்தான்னு என் பின்னாடியே வருது...’’செல்வியின் குரலில் வறட்சி. எந்த உணர்வும் இல்லை.

‘‘வேற வழி தெரியல. சரிய்யா... அவருக்கு சொட்டு மருந்து போடணும். போறேன்...’’
திரும்பிப் போகும்போது கீழ் வீட்டுக் கதவு மூடியிருந்தது. என்னைப் பார்க்க விரும்பவில்லை! இதேபோல் முன்பு ஏதோ ஒரு பிரச்னையில் என் மீதிருந்த கோபத்தில் மாதப் பராமரிப்புத் தொகையை 20 தேதி வரை தராமல் இழுக்கடித்தார். இந்த முறை என்ன செய்வாரோ.
வீட்டுக்குள் நுழைந்ததும் ஸ்ரீமதி பிடித்துக் கொண்டாள்.

‘‘ஒங்களுக்கு ஏன் இந்த வீண் வம்பு...’’
‘‘குழந்தைட்ட போயா வீரம் காட்டறது?’’
‘‘மனுச சுபாவத்தை மாத்த முடியாது...’’
‘‘என் சுபாவத்தையும்...’’
‘‘பட்டாத்தான் ஒங்களுக்குப் புத்தி வரும்...’’
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புகார் வர ஆரம்பித்தது அதன்பின். இந்த முறை இன்னொரு ப்ளாட்காரர்.
தணிந்த குரலில் பயமுறுத்துகிற பாவனையில் சொன்னார்.

‘‘தெனம் அந்தக் குழந்தை இப்ப வருது...’’
‘‘ம்ம்...’’
‘‘எனக்கு அதுல அப்ஜக்‌ஷன் இல்ல. ஆனா...’’
‘‘ஆனா..?’’‘‘அவகூடவே வாசத் தெளிக்க பெருக்கன்னு சுத்துது. குழந்தைகளை இங்கே வேலை வாங்கறாங்கன்னு யாராச்சும் கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டா நீங்கதான் போலீஸ் கோர்ட்னு அலையணும். உங்க மேல இருக்கிற மதிப்புல சொல்றேன். டோண்ட் மிஸ்டேக்...’’போய்விட்டார் சந்தோஷமாய். கீழ் வீட்டுப் பெண்மணிக்கு இவர் தூரத்து உறவு.

அட்வான்ஸ் வாங்க வந்தபோது குட்டிப் பையனும் வந்தான். பிஸ்கட்டை கொடுத்தேன்.
‘‘ஸ்கூல்ல போட்டேன். கொஞ்சம் செலவு...’’‘‘நல்ல விஷயம். அவன் அம்மா வரலியா?’’
‘‘இவன் என்னை விட்டுப் போக மாட்டேங்கிறான். அது அவங்களுக்கு வசதியாப் போச்சு...’’
‘‘அம்மா...’’அம்மாவா?‘‘இப்ப என்னைத்தான் அம்மான்னு கூப்பிடறான்...’’

ஒரு மாதம் ஓடியது. பேரன் இப்போது தினமும் வருவதில்லை. பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் வருவான்.

மூலையில் உட்காருவான் ஓரமாய்.‘‘பூச்சி ஏதாச்சும் இருக்கப் போவுது...’’ என்றேன் பதற்றமாய்.சிரித்தான். கையில் வைத்திருந்த ஸ்கூல் பேக் பழசாய் இருந்தது.‘‘புதுசு வேணுமா... பொம்மை போட்டது?’’அதற்கும் சிரிப்பு. செல்வி வரவும் அவளுடன் போய் விட்டான்.

‘‘நல்ல ட்ரெஸ் இல்லை அவனுக்கு. யூனிபார்ம் கிடையாது போல. நாம வேணா ஒரு செட் வாங்கித் தரலாமா?’’ என்றேன் ஸ்ரீமதியிடம்.
‘‘நான் என்ன பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க..?’’
‘‘ஏதாச்சும் ஐடியா சொல்வேன்னு...’’‘‘நீங்களே யோசிங்க. உங்களுக்கு எது செய்யணும்னு தோணுதோ அதைச் செய்ங்க...’’அபார்ட்மென்ட் பெண்மணிகள் மாலை நேரத்தில் கீழே அரட்டை அடிப்பார்கள். 

முன்பெல்லாம் ஸ்ரீமதியும் போவாள். இப்போது தவிர்த்து விடுகிறாள்.‘‘எல்லாம் ஒங்களாலதான். போனா செல்வி மேட்டர். ஏன் ஒங்க வீட்டுக்காரர் அநியாயத்துக்கு அவளுக்கு சப்போர்ட்னு. தேவையா எனக்கு இந்தப் பேச்சு...’’இன்று மெதுவாகத்தான் எழுந்தேன். இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை. அபூர்வ வாய்ப்பு.

கீழே செல்வியின் பேரன் குரல். அலுப்பாய் எட்டிப் பார்த்தேன்.சிட் அவுட்டில் அவன் உட்கார்ந்திருந்தான். எதிரே புது பேக். கீழ் வீட்டுப் பெண்மணியும்.
‘‘புடிச்சுருக்காடா..?’’
மலர்ச்சி அவன் முகத்தில்.

‘‘இங்கே பார். உன் பேர் போட்டுருக்கு...’’பிரபு!
‘‘பத்திரமா வச்சுக்கோ...’’ஸ்ரீமதியின் குரல் எனக்குப் பின்னிருந்து கேட்டது.‘‘செல்வி கதை இப்பதான் தெரிஞ்சுதாம். அவளுக்கு ஏன் கஷ்டத்துக்கு மேல கஷ்டம்னு பாட்டி புலம்பினாளாம். அந்தப் பையன் பேர் கூட நேத்து வரை தெரியாது எனக்கு...’’சட்டென்று அவள் குரல் தேம்பியது. ஸ்ரீமதியையே வெறித்தேன் அதே குற்ற உணர்வுடன் அப்போது.

 - ரிஷபன்