முதல் முறையா இந்த தமிழ்ப் படம் பிரிட்டிஷ் இங்கிலீஷ்லயும் டப் ஆகுது!
இயக்குநர் ஷங்கரின் அறிமுகம், தேவயானியின் தம்பி என சினிமா பின்புலத்துடன் வந்தவர் நகுல். படங்கள் மூலம் தன் திறமையை நிரூபித்தவர். இப்போது ‘த டார்க் ஹெவன்’ முடித்துள்ளார். பாலாஜி இயக்கியுள்ளார்.
 தமிழ்ப் படத்துக்கு ஆங்கிலத் தலைப்பு ஏன்?
சிறிய படங்களுக்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. நாட்டார் கதைகளை மையப்படுத்தின த்ரில்லர் கதை இது. இந்த டைட்டில் கதைக்கு நெருக்கமா இருந்துச்சு. உங்களை மாதிரி எல்லோரையும் கேள்வி கேட்க வைத்துள்ளது இந்த டைட்டில்.சமீபத்துல மலையாளத்தில் ‘ஹெவன்’, ‘சீக்ரெட் ஹோம்’ என இரண்டு படங்கள் இந்த ஜானர்ல வந்துச்சு.  தமிழிலும் ‘பைட் கிளப்’ வந்துச்சு. அந்தவகையில் நம்மூர் ரசிகர்களும் இந்த மாதிரி கதைகளுக்கு டியூனாகிட்டிருக்காங்க. இப்போ, 2 கே கிட்ஸ்தான் அதிகமா தியேட்டருக்கு வர்றாங்க. அவங்களுக்கு இந்த டைட்டில் ஈஸியா கனெக்ட்டாகிடும். ஒரு கிராமத்தில் இருபத்தைந்து வருடங்களுக்கு ஒருமுறை அசம்பாவிதம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த சமயத்தில் மலையில் வசிக்கும் குறிப்பிட்ட குடும்பம் சாமியை வழிபட கிராமத்துக்கு வருவார்கள். அந்தக் குடும்பம் கிராமத்துக்கு வந்தாலே அசம்பாவிதம் எதாவது நடக்கலாம் என்று ஊர் மக்கள் பயப்படுவாங்க. அதே சமயத்தில் பணிமாறுதல் காரணமா போலீஸ் அதிகாரியும், நாயகனுமான நகுல் அந்த கிராமத்துக்கு வருவார்.
அப்போது அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. அந்தக் கொலைகள் கிராம மக்களின் நம்பிக்கையின்படி நடக்கும் கொலைகளா அல்லது அதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பதை நகுல் கண்டுபிடிப்பதுதான் கதை.
உங்க ஹீரோ நகுலைதத் தேடிப் பிடிச்சு நடிக்க வெச்ச மாதிரி இருக்கிறதே?
கேள்வி குதர்க்கமா இருக்கே! என்னுடைய முதல் படம் ‘டி 3’. அந்தப் படத்தில் பட்ஜெட் காரணமா நகுல் நடிக்க முடியல. ஆனா, அவருடன் கம்யூனிகேஷன்ல இருந்தேன். இந்தக் கதையில நகுல் பண்ணா கரெக்ட்டா வரும்னு தோணுச்சு. அவரிடம் முதல் பகுதி கதையை மட்டும்தான் சொல்லியிருப்பேன். அதற்குள் நான் பண்றேன்னு சொல்லிட்டார். இரண்டாவது பாதியை ஷூட்டிங் ஸ்பாட்டில்வெச்சுதான் சொன்னேன். அந்தளவுக்கு கதை மீது நம்பிக்கை வெச்சிருந்தார்.
நகுல் கேரக்டர் பேர் இளம்பாரி. இதுவரை பார்க்காத நகுலை இதில் பார்க்கலாம். நகுல் எனர்ஜியான பெர்சன். பாசிடிவ்வா திங் பண்ணுவார். பொதுவா, என்னுடைய ஒர்க்கிங் ஸ்டைல் எப்படியிருக்கும் என்றால், இருபத்தி நான்கு மணி நேரமும் தொடர்ச்சியா ஷூட் பண்ணுவேன். அஞ்சு நாட்கள் அது மாதிரியும், மத்த நாட்களில் பதினாறு மணிநேரமும் ஷூட் பண்ணுவேன். அந்த ஒர்க்கிங் ஸ்டைலுக்கு நிறைய ஆர்ட்டிஸ்ட்ஸ் அடாப்ட் ஆகமாட்டாங்க என்பதால் என்னுடைய ஸ்டைலுக்கு ஒத்துப்போகக்கூடிய ஆர்ட்டிஸ்ட்டைதான் நடிக்க வைப்பேன்.
சினிமாவில் ஜெயிக்கணும்னு ஆர்வத்தோட இருக்கிற ஆர்ட்டிஸ்ட்தான் என் மைண்ட்ல இருப்பாங்க. நகுல் என்றாலே அவருடைய துறுதுறு முகம்தான் நினைவுக்கு வரும். இதுல அப்படியே அந்த லுக்கை மாத்தியிருக்கிறோம். எப்போதும் கேஸ் சம்பந்தமான அழுத்தத்துல இருக்கிற போலீஸ் ஆபீசர் மனநிலையை அழகா வெளிப்படுத்தியிருப்பார்.
போலீஸ் கேரக்டருக்கான எல்லா நியாயத்தையும் செஞ்சார். படத்துல கமிட் பண்ணும்போது போலீஸ் கேரக்டருக்கு ஏத்தமாதிரி உடலை கட்டுக்கோப்பா வெச்சிருந்தார். எந்த இடத்திலும் முகம் சுளிக்காம முழு இன்வால்வ்மென்ட்டோடு பண்ணினார்.
ஒரு காட்சியில் கண்ணாடியை உடைக்கணும். கண்ணாடியை முகத்தை வெச்சு நேரடியா உடைச்சா பெரியளவில் காயம் ஏற்படும். தோள்பட்டையால் உடைச்சுப் பண்ணணும். அதை டூப் இல்லாம அவரே லாவகமா உடைச்சார். அந்த உழைப்புக்கு நகுலுக்கும் பேர் கிடைக்கும், எனக்கும் பேர் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. நாயகியா ரேணு செளந்தர் பண்ணியிருக்கிறார். மலையாளத்துல சில படங்கள் பண்ணியவர். ஹோம்லி லுக் தேவைப்பட்டுச்சு. என்னுடைய பட்ஜெட்டுக்கும் ஓகே சொன்னார். ஓரிரு தமிழ்ப் படங்கள் பண்ணியவர் என்பதால் மொழிப்பிரச்னையும் வரலை. நடிப்பும் பாராட்டும்படியா இருந்துச்சு. ‘எமன்’ல வில்லனா நடிச்ச அருள் ஜோதி இருக்கிறார். சக்தி பாலாஜி மியூசிக். ‘உடன்பால்’ பண்ணியவர். குத்துப்பாடலை வித்தியாசமா டிரை பண்ணியிருக்கிறோம்.
மணிகண்டன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். என்னுடன் ‘டி 3’ல ஒர்க் பண்ணியவர். ஹன்சிகாவின் ‘த மேன்’ படத்துக்கும் அவர்தான் கேமரா. மணிகண்டன் இருந்தா எனக்கு பாதி டென்ஷன் குறைஞ்சுடும். நேரமும் மிச்சமாகும்.
ஒளிப்பதிவாளருக்கும் இயக்குநருக்குமிடையே சரியான புரிதல் இல்லையென்றால் கால விரயம் அதிகமாகும். ஒரு காட்சியை எந்த கோணத்துல காட்டணும் என்பதுல தெளிவா இருப்பார். டைரக்டர் மானிட்டர்ல கவனிச்சா போதும் என்ற நிலையில அவருடைய ஒர்க் இருக்கும். என்னுடைய சஜஷனை சொல்லியும் வேலை வாங்குவேன். ‘லேபிள்’ பண்ணிய ராஜா ஆறுமுகம் எடிட் பண்ணியிருக்கிறார். தயாரிப்பு டீம் பி புரொடக்ஷன் ஹவுஸ். க்ரைம் படத்துக்கான டெம்ப்ளேட் எதுவும் இதுல இருக்காது. அதையெல்லாம் உடைச்சு பண்ணியிருக்கிறேன். யார் கொலைகாரன் என்பது ஆடியன்ஸுக்கான திரை அனுபவமா இருக்கும். இந்தி, தெலுங்கு மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் இங்கிலீஷ்ல ‘டப்’ பண்ணியிருக்கிறோம். அது புது முயற்சியா இருக்கும்.
டைரக்ஷனை யாரிடம் கத்துக்கிட்டீங்க?
படிச்சது விஸ்காம். உதவி இயக்குநரா சேர்ந்து சினிமா கத்துக்க முயற்சி பண்ணினேன். ஐயாயிரம் கொடு, பத்தாயிரம் கொடுனு பணம் கறக்கிறதுலேயே குறியா இருந்தாங்க. பாதி உப்புமா கம்பெனியா இருந்துச்சு.
குறும்படங்கள் எடுத்துதான் சினிமா கத்துக்கிட்டேன்.‘டி 3’ என்னுடைய முதல் படம். அந்தப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்துச்சு. ஆனா, படம் ரிலீஸ் பண்ணும்போது பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருந்துச்சு. நம்பியவர்கள் மோசம் பண்ணினார்கள். சிலர் ‘கியூப்’க்கு கட்ற பணம் கூட திரும்பக் கிடைக்காதுனு பயமுறுத்தினாங்க. அதையும் மீறி ரூரல் ஏரியாவுல இரண்டாவது வாரமும் படம் ஓடுச்சு. தென் மாவட்டங்களில் சில தியேட்டர்களில் மூன்று இலக்க எண்ணிக்கையில் ஆடியன்ஸ் தியேட்டருக்கு வந்தாங்க. டீசன்ட்டான படமா இருந்து, டீசன்ட்டான தியேட்டர்ல ரிலீஸ் பண்ணினா ஓரளவுக்கு ஆடியன்ஸை வரவழைக்க முடியும்.சின்ன பட்ஜெட் படங்களுக்கு வரவேற்பு இருக்காது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒரு படத்தை கரெக்ட்டான பட்ஜெட்டில் பண்ணினா தயாரிப்பாளர் சேஃப்பாகிடலாம்.
ஹீரோவுக்கு ஏத்த மாதிரிதான் செலவு பண்ணணும். நகுல் சார் மாதிரியான ஹீரோவுக்கு நான்கைந்து கோடி செலவு பண்ணினால் மொத்தமா நஷ்டமாகிவிடும்.சரியான முறையில் பட்ஜெட் போட்டாலே நஷ்டத்துலயிருந்து தப்பிக்கலாம். ஒன்றரைக் கோடியில் எடுத்தால் ஓரளவுக்கு பிசினஸ் பண்ணிடலாம்.
இந்தி மற்றும் பிற மொழி ரைட்ஸ், கேரளா ரைட்ஸ், எப்.எம்.எஸ் ரைட்ஸ் மூலமா முதலீடு பண்ணிய பணத்தில் பாதியை எடுத்துடலாம்.சினிமா மாதிரி கிரிக்கெட் எனக்கு பிடிக்கும். என்னுடைய டீம் மெம்பர்ஸ்தான் என்னுடைய உதவி இயக்குநர்கள். அடுத்து கிரிக்கெட்டை மையமா வெச்சு ஒரு படம் பண்றேன்.
எஸ்.ராஜா
|