தாப்ஸிக்கு கல்யாணம்?
நடிகைகளில் கொஞ்சம் கெத்து காட்டுவதில் தாப்ஸிக்கும் இடம் உண்டு. சில வருடங்களுக்கு முன்பு, வட இந்தியாவில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார். அந்த கேள்வி, ‘நீங்க தென்னிந்தியப் படங்கள்ல நடிக்கிறதால, உங்கள தென்னிந்திய நடிகைன்னு சொல்லலாமா?’இந்த கேள்வியைக் கேட்டதும் தாப்ஸிக்கு டாப் கியரில் கோபம் எகிறியது.

‘நடிகர்கள் நடிகைகளுக்கு மொழிங்கிறதே கிடையாது. இந்திப் படங்கள்ல நடிச்சா இந்தி நடிகை, தமிழ்ப் படங்கள்ல நடிச்சா தமிழ் நடிகைன்னு இல்ல. மொத்தத்துல அவங்க ஒரு நடிகை’ என்று சொல்லி அந்த நிருபரையே கிடுகிடுக்க வைத்துவிட்டார்.  அப்படிப்பட்ட தைரியமான தாப்ஸி, இப்பொழுது மற்றுமொரு தைரியமான முடிவை எடுத்திருக்கிறார்.வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போல இருக்கும் தாப்ஸி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார். இதுவும் ஒரு காதல் திருமணம்தான் என்கிறது தாப்ஸிக்கு நெருங்கிய நண்பர்கள் வட்டாரம்.
தாப்ஸியின் கரம் பிடிக்க இருப்பவர் பெயர் மத்தியாஸ் போ. இவர் தாப்ஸியின் நீண்ட கால நண்பராம். பேட்மிண்டன் விளையாட்டு வீரர்.நீண்ட வருடங்களாக புகைந்து கொண்டிருந்த காதல் ஒரு வழியாக பற்றிக்கொண்டு இருப்பதால், அதை கட்டுப்படுத்த திருமணம் செய்து கொள்ள இருவருமே முடிவு செய்து இருக்கிறார்கள்.
கல்யாணம் உதய்ப்பூரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாப்பிள்ளை கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். தாப்ஸி சீக்கிய மதம். இதனால் இரண்டு மதங்களின் முறைப்படி கலாசார கலவையாக இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.
காம்ஸ் பாப்பா
|