Must Watch



ஸ்பேஸ்மேன்

‘நெட்பிளிக்ஸின்’ டிரெண்டிங் பட்டியலில் இருக்கும் சயின்ஸ் பிக்சன் படம், ‘ஸ்பேஸ்மேன்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்த ஆங்கிலப்படம். செக் நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரன், ஜேக்கப். அவனுடைய மனைவி லென்கா கர்ப்பமாக இருக்கிறாள். வியாழன் கோளுக்கு அருகில் மர்மமான முறையில் மேகம் கூட்டம் ஒன்று உருவாகிறது. 

இதை ஆராய்ச்சி செய்வதற்காகச் செல்கிறான் ஜேக்கப். இவ்வளவு தொலைவுக்குப் பயணிக்கும் முதல் செக் விண்வெளி வீரன் என்ற பெருமையைத் தன்வசமாக்குகிறான் ஜேக்கப். ஆறு மாதங்கள் அவன் விண்வெளியில் தங்கியிருக்க வேண்டும்.

கர்ப்பமான தன்னை விட்டு விட்டு எப்படி நீ விண்வெளிக்குச் செல்லலாம் என்று ஜேக்கப்பின் மீது கடுங்கோபத்தில் இருக்கிறாள் லென்கா. அதனால் ஜேக்கப்புடன் பேசுவதை நிறுத்தி விடுகிறாள். ஜேக்கப் எவ்வளவு முயற்சி செய்தும் லென்காவைத் தொடர்பு கொள்ள முடிவதில்லை. தனிமை அவனை வாட்டுகிறது. 

உலகிலேயே தனிமையான மனிதன் என்று ஜேக்கப்பை பூமியில் இருப்பவர்கள் சொல்கின்றனர். தன் தனிமையிலிருந்து ஜேக்கப் எப்படி மீண்டு, லென்காவுடன் இணைகிறான் என்பதே மீதிக்கதை. சயின்ஸ் பிக்சன் கதையையும் மிகுந்த உணர்வுபூர்வமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜோஹன் ரென்க்.

பிரமயுகம்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலைக் குவித்த மலையாளப் படம், ‘ பிரமயுகம்’. இப்போது ‘சோனி லிவ்’வில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.
பதினேழாம் நூற்றாண்டில் படத்தின் கதை நிகழ்கிறது. பாணனான தேவனும், அவனது நண்பனும் போர்ச்சுக்கீசிய அடிமைச் சந்தை வணிகத்திலிருந்து தப்பிக்கின்றனர். ஒரு நதிக்கரை ஓரத்தில் இருக்கும் காட்டுக்குள் இரவில் தங்குகின்றனர்.

காட்டுக்குள் இருக்கும் யட்சியால் தேவனின் நண்பன் கொல்லப்படுகிறான். தப்பித்துச் செல்லும் தேவன், வழியில் ஒரு கோட்டை போன்ற வீட்டை காண்கிறான். அங்கே இருக்கும் தேங்காயைத் திருடிச் சாப்பிடும்போது அந்த வீட்டுச் சமையல்காரனிடம் மாட்டிக்கொள்கிறான் தேவன். அந்த சமையல்காரன் தேவனை வீட்டின் உரிமையாளர் கொடுமன் போற்றியின் முன் நிறுத்துகிறான். தேவனைப் பாடச் சொல்கிறார் போற்றி. தேவனின் பாடல் பிடித்துப் போக, அவனை வீட்டிலேயே தங்கச் சொல்கிறார் போற்றி.

ஆனால், தேவனுக்கு அந்த இடத்தைவிட்டு ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் விருப்பம். போற்றியோ தேவனை வீட்டிலேயே தங்கச் சொல்ல, சூடுபிடிக்கிறது திரைக்கதை.
ஒரே இடத்தில் மூன்று பேரை வைத்து கதை சொல்லியிருந்தாலும் கொஞ்சம் கூட சுவாரஸ்யம் குறையவில்லை. போற்றியாக கலக்கியிருக்கிறார் மம்முட்டி. படத்தின் இயக்குநர்  ராகுல் சதாசிவன்.

அன்வேஷிப்பின் கண்டேத்தும்

‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இருக்கும் மலையாளப் படம், ‘அன்வேஷிப்பின் கண்டேத்தும்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. லவ்லி என்ற இளம் பெண் காணாமல் போகிறாள். லவ்லியைக் கண்டுபிடிப்பதற்காக சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த், தனது குழுவுடன் களத்தில் இறங்குகிறார். 

லவ்லியைப் பின்தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் சென்றதாக ஒரு பெரியவர் சொல்கிறார். சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞர்களைப் பிடித்து விசாரிக்கின்றனர். அடுத்த சில நாட்களில் கிணற்றிலிருந்து லவ்லியின் பிணம் கண்டெடுக்கப்படுகிறது. லவ்லியின் மரணம் கேரளாவையே உலுக்குகிறது. அந்த இளைஞர்களுக்கும், லவ்லியின் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிகிறார் ஆனந்த்.

குற்றவாளியைப் பிடிக்கச் சொல்லி காவல்துறைக்கு அழுத்தம் அதிகமாக, லவ்லியின் வழக்கு உயரதிகாரியிடம் செல்கிறது. இந்த வழக்கிலிருந்து ஆனந்த் ஒதுக்கி வைக்கப்படுகிறார்.
இருந்தாலும் தனிப்பட்ட முறையில் விசாரணையில் இறங்கி லவ்லியைக் கொலை செய்தவனை ஆனந்த் எப்படி கண்டுபிடிக்கிறார், லவ்லி மாதிரி தேவி என்ற இளம் பெண்ணைக் கொன்றவனையும் ஆனந்த் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே திரைக்கதை. திரில்லிங் படப் பிரியர்கள் தவறவிடக்கூடாத ஒரு படம் இது. இதன் இயக்குநர் டார்வின் குரியாகோஸ்.

ஊரு பேரு பைரவகோனா

அமானுஷ்ய கதையைக் கொண்ட படங்களை விரும்புகிறவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கான படம் தான், ‘ஊரு பேரு பைரவகோனா’.‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது இந்த தெலுங்குப் படம். சினிமாவில் ஸ்டண்ட் டபுளாக வேலை செய்கிறான் பசவா. 

அவனுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அதனால் ஒரு கல்யாண நிகழ்வுக்குள் புகுந்து மணப்பெண்ணின் நகைகளைக் கொள்ளையடிக்கிறான். திருடும் போது மாட்டிக்கொள்கிறான். இருந்தாலும் புத்திசாலித்தனமாக தனது ஸ்டண்ட் திறமையை வைத்து தப்பிக்கிறான்.

பசவாவுக்குத் துணையாக ஜான் என்பவனும் உடன் வருகிறான். போலீஸ் பசவாவையும், ஜானையும் துரத்துகிறது. இருவரும் தப்பிக்க ஓடும் போது கீதா என்ற பெண்ணைச் சந்திக்கின்றனர். ஒரு விபத்தில் மாட்டிக்கொண்ட கீதாவுக்கு பசவாவும், ஜானும் உதவுகின்றனர். பசவாவும், ஜானும், கீதாவும் சேர்ந்து மர்மமான ஒரு இடத்துக்குச் செல்கின்றனர். 

அங்கே விநோதமான விஷயங்கள் அரங்கேறுகின்றன. அந்த இடத்துக்கு வந்த மூன்று பேரும் அங்கிருந்து எப்படி வெளியேறுகின்றனர் என்பதை அமானுஷ்ய பின்னணியில் சொல்கிறது திரைக்கதை. வித்தியாச அனுபவத்தைக் கொடுக்கும் இப்படத்தின் இயக்குநர் விஐ ஆனந்த்.

தொகுப்பு: த.சக்திவேல்