ஆழிசூழ் உலகெல்லாம் விவசாயிகள் போராட்டம்!



விவசாயிகள் பிரச்னை இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. கடந்த வருட தொடக்கம் முதல் இறுதி வரை சுமார் 65 நாடுகளில் விவசாயிகள் தெருவுக்கு வந்து போராடியுள்ளனர் என்கிறது ஓர் ஆய்வு. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் எல்லாம் விவசாயிகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டியை மடித்துக்கொண்டு பேன்ட்டை சுருட்டிக்கொண்டு போராட்டத்தில் குதித்ததாக சொல்கிறது அந்த ஆய்வு.
ஆனால், ஆசிய நாடான இந்தியாவை ஒப்பிட்டால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் பிரச்னை பூதாகரமானது என்று சில புள்ளிவிபரங்களைப் பார்த்தாலே புரியும்.
உதாரணத்துக்கு, ஐரோப்பிய விவசாயிகளின் முக்கியமான பிரச்னைகள் உள்ளீடு பொருட்களின் விலையேற்றம், விவசாயப் பொருட்களுக்கு கிடைக்கும் குறைந்த விலை, மலிவு விலை பொருட்களின் இறக்குமதி மற்றும் முக்கியமான பிரச்னையான சுற்றுச்சூழல் விதிகளுக்கு ஏற்ப பொருட்களை கட்டாயம் உற்பத்தி செய்யவேண்டியது... இல்லையெனில் அரசு கொடுக்கும் மானியங்களில் துண்டு விழுவது...

இந்தப் பிரச்னைகளில் சில இந்தியாவில் இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலை எப்படி உள்ளது என்று கொஞ்சம் பார்ப்போம்.

இந்தியாவில் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 44 விழுக்காடு வரும். ஆனால், இதுவே ஜெர்மனியில் ஒரு சதவீதம் மற்றும் ஃபிரான்சில் 2 சதவீதம். 
அதேபோல ஜிடிபி எனும் நாட்டின் மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு ஜெர்மனியில் 0.7 என்றால் அதே ஃபிரான்சில் 1.6 மடங்கு. இந்தியாவில் 1990களில் இது 35 சதவீதமாக இருந்தது. 2020களில்தான் இந்த நிலை வீழ்ச்சி அடைந்து 15 சதவீதத்துக்குச் சென்றது.

இப்படி ஐரோப்பிய விவசாயத்துக்கும் இந்திய விவசாயத்துக்கும் ஏணி வைத்தால்கூட எட்டமுடியாதபடி பல பிரச்னைகள் இருந்தாலும் விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி - Minimum Support Price) மற்றும் அரசு மானியங்கள் எல்லாம் ஐரோப்பிய விவசாயிக்கு எக்கச்சக்கமாகக் கிடைக்கிறது. 

ஆனால், இந்தியாவில் மட்டுமே கடந்த 50 வருடத்துக்கு மேலாக வெறும் அரிசிக்கும் கோதுமைக்கும் எம்எஸ்பி விலையை நிர்ணயிக்கிறது அரசு. இதனால் அரிசி மற்றும் கோதுமையை விளைவிக்கும் சுமார் 10 சதவீத விவசாயிகள்தான் இந்த ஆதார விலை நிர்ணயத்தால் பலன் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

இதனால்தான் இன்று தில்லி எல்லையில் போராடும் விவசாயிகள் அரிசி, கோதுமைக்கு மட்டும் விலை நிர்ணயம் போதாது... மேலும் 21 பொருட்களுக்கு விலை நிர்ணயம் தேவை என்று மீண்டும் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். 

2021ல் இந்திய விவசாயிகள் தில்லியில் சுமார் ஒன்றரை வருட காலமாக போராடியதில் அரசு அறிமுகப்படுத்த இருந்த கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. அப்போதே நம்ம ஊர் விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் எம்.எஸ்.பி தொடர்பான அறிக்கையைப் பின்பற்றுவதாக விவசாயிகளுக்கு அரசு வாக்குறுதி கொடுத்தது. ஆனால், அந்த உறுதி காற்றில் பறந்தது.

விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க, 2004ம் ஆண்டளவில் எம்.எஸ்.சுவாமிநாதனின் தலைமையில் அரசு ஓர் ஆணையத்தை (கமிஷன்) அமைத்தது. சுவாமிநாதனும் 2004 மற்றும் 2006க்கிடையில் 6 வால்யூம்கள் அடங்கிய ஓர் அறிக்கையை சமர்ப்பித்தார்.

 இந்தியாவில் இருக்கும் விவசாயிகளில் 67 சதவீதத்தினர் குறுவிவசாயிகள், 17 சதவீதத்தினர் சிறுவிவசாயிகள் என்று சொன்ன சுமாமிநாதன், விவசாய நிலங்களை பெரு நிறுவனங்களுக்கு கொடுப்பதை எதிர்த்தார். அத்தோடு நிலச் சீர்திருத்தம்தான் இந்த குறு மற்றும் சிறு விவசாயிகளைக் காப்பாற்றும் என்றும் சொல்லியிருந்தார்.

இரண்டாவதாக, நீர்ப்பாசனம். நீர்ப் பங்கீட்டில் அரசின் முக்கியத்துவத்தைப் பேசினார். மூன்றாவதாக, கடன் பிரச்னை. கடன் பிரச்னைதான் இந்திய விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கியமான காரணம் என்றும் சொன்னார். ஐந்தாவதாகத்தான் இந்திய விவசாயிகளின் முக்கியமான பிரச்னையான குறைந்தபட்ச ஆதார விலை... அதாவது எம்எஸ்பி... இதை ஒரு முக்கியமான தலைப்பிட்டு அவர் அறிக்கையாக சமர்ப்பித்தார். 

அந்தத் தலைப்பு ‘இந்திய விவசாயிகளின் போட்டித் திறனை வளர்ப்பது... இந்திய விவசாயிகளின் போட்டித் திறனை வளர்ப்பது என்றால் என்ன... அதுவும் குறைந்தபட்ச ஆதார விலையால் இது எப்படி சாத்தியமாகும்... அதுவும் இந்த குறைந்தபட்ச ஆதார விலையை C2+50 என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது குறைந்தபட்ச விலை என்றால் comprehensive cost (C2) ப்ளஸ் 50 என்று அதைச் சொல்லலாம். ஒரு விளைபொருளுக்கான விலையை அதன் உற்பத்திக்குச் செலவாகும் மொத்த செலவுடன் உழைப்பையும் சேர்த்து வருவதே C2. இந்த C2 உடன் லாபம் 50 சதவீதம் இருக்கவேண்டும் என்பதே சுவாமிநாதனின் ஃபார்முலா. ‘என்னது... பொருள் செலவு ப்ளஸ் உழைப்பு... ப்ளஸ் 50 சதவீத லாபமா..? இது எல்லாம் பொருந்தாது...’ என்பதே விவசாயிகளின், விவசாயத்தைப் பற்றித் தெரியாத விமர்சகர்கள் பலரின் பேச்சாக இருக்கிறது என்று காட்டமாக சொல்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஹிமன்சு.

அவர் அண்மையில் ‘வயர்’ இணைய இதழுக்குக் கொடுத்த பேட்டியில் இது குறித்து விளக்கியிருக்கிறார்.‘‘விவசாயிகளுக்குக் கொடுக்கும் ஆதார விலை இப்போது வெறும் 10 சதவீத விவசாயிகளுக்குத்தான் செல்கிறது. பிறகு ஏன் இந்த எம்எஸ்பி என்று பலர் கேட்கிறார்கள். உண்மையில் இதனால்தான் எம்எஸ்பி அவசியம் என்று எங்களைப் போன்றவர்கள் சொல்கிறோம். 

ஒருகாலத்தில் பஞ்சாப் விவசாயிகள் பணப் பயிர்களான பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களில்தான் பெரிய லாபம் பார்த்தனர். ஆனால், பட்டினி, பஞ்சம் வந்தபோது அரசானது அரிசி, கோதுமையை விளைவித்தால் எம்எஸ்பி மற்றும் மானியம் எல்லாம் கொடுப்பதாக ஆசை காட்டியது.

இதை நம்பி  விவசாயிகள் அரிசி, கோதுமையை விளைவித்தனர். இப்படி இந்தியாவின் பசி பட்டினியைப் போக்கினர் பஞ்சாப், அரியானா விவசாயிகள். இன்று தெருவில் போராடும் விவசாயிகளின் காலுக்குக் கீழே இரும்புக் கம்பிகளை நடுகிறது அரசு. எம்எஸ்பி என்பதை பலர் விவசாயிக்கு கொடுக்கும் பிச்சைப் பணமாகப் பார்க்கின்றனர். உண்மையில் எம்எஸ்பி என்பது ஒரு விலைக் கட்டுப்பாடு இயந்திரம்.

உதாரணமாக, விவசாயப் பொருட்களை நாம் நினைத்தமாதிரி அறுவடை செய்யமுடியாது. விளைச்சலுக்கு பல்வேறு காரணங்கள் உதவுகிறது. ஆகவே சுமாமிநாதன் சொல்லியபடி விலையை நிர்ணயிக்கும்போது ஒருவேளை பொருளின் உற்பத்தி தேவையைக் காட்டிலும் அதிகமானால் விலைக் குறைவு ஏற்படும். அப்போது தனியார் அடிமாட்டு விலைக்குக் கேட்பார்கள்.

இந்த நேரத்தில் அரசுதான் நிர்ணயித்த விலையில் வாங்கிக்கொள்ளும். அரசே எல்லாவற்றையும் வாங்கும்போது சிலநாட்களில் அந்தப் பொருளுக்கு தட்டுப்பாடு வரலாம். அப்போது சந்தையில் நல்ல விலை கிடைக்கும். அப்போது அரசு அதை விற்று லாபம் பார்க்கும். ஒருவேளை விளைச்சல் குறைவாக இருந்தால் தனியார் விவசாயியை மொய்த்தெடுப்பார்கள். அப்போது ஒரு விவசாயி தன் பொருளை, தான் நிர்ணயித்த விலையிலேயே தனியாருக்கே விற்றுக்கொள்ளலாம்.

என்ன பிரச்னை என்றால், எம்எஸ்பி என்பது எல்லா பொருட்களையும் அரசே வாங்கிக்கொள்ளும் என்று பலர் புரிந்து வைத்திருப்பது. இது தவறான கருத்து. உண்மையாக ஒரு பொருளின் விளைச்சல் குறையும்போது அல்லது கூடும்போது அதன் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கும்படியான ஒரு ஃபார்முலாவைத்தான் இந்த எம்எஸ்பி விலை நிர்ணயம் கொண்டிருப்பதாக...’’ ஆணித்தரமாகச் சொல்கிறார் ஹிமன்சு.

அதிலும் எம்எஸ்பி என்பது விவசாயிக்கு அரசு கொடுப்பதல்ல... மாறாக, அது ஓர் இந்திய உணவு நுகர்வோனுக்கு அரசு கொடுக்கும் விலைப் பாதுகாப்பு என்று சொல்கிறார் ஹிமன்சு.  
இந்த எம்எஸ்பி உடன் தொடர்புடைய இன்னொரு பிரச்னை கடன். இந்திய விவசாயிகள் தற்கொலைக்கான முக்கியமான காரணம் கடன் என்று புள்ளிவிபரத்துடன் சொல்கிறார் விவசாய நிபுணர் சாய்நாத்.

ஒரு பேட்டியில் அவர் கூறும்போது... ‘‘2020ல் இந்தியாவில் சுமார் 11,290 விவசாயிகள் தற்கொலை செய்தனர். மகாராஷ்டிராவின் விதர்ப்பா, மரத்வாடா எல்லாம் விவசாய தற்கொலைக்கான முக்கியமான பிரதேசங்கள். இந்த 11,290 தற்கொலைகளில் முதலில் இடம்பெறுவது மகாராஷ்டிரா. இங்கு மட்டுமே 4248 தற்கொலைகள். அடுத்து கர்நாடகா. இங்கு 2392. மூன்றாவதாக ஆந்திரா. இங்கு 917. நான்காவதாக நம்பவே முடியாத தமிழ்நாடு. இங்கு 728.

இந்தியாவில் இருக்கும் விவசாயத் தொழிலாளர்களில் சுமார் 65 சதவீதம் பெண்கள். பெண்களின் தற்கொலை மட்டுமல்ல... மற்ற பிரச்னைகள் குறித்தும் இந்தியாவில் எந்தவித புள்ளிவிபரங்களும் இல்லை; ஆய்வுகளும் இல்லை...’’ என்று நொந்துகொள்கிறார் சாய்நாத். ‘‘சாய்நாத் சொல்லும் எண்களைவிட கூடுதலாகவே இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை இருக்கும் என்று நிச்சயமாக சொல்லலாம். உதாரணமாக, பல தற்கொலைகளை சாய்நாத்தே சொல்வதுபோல வயிற்றுவலி, மாரடைப்பு என்று இறப்புச் சான்றிதழில் எழுதி விடுவார்கள்.

இந்தியாவில் சுமார் 40 சதவீதமான விவசாயிகள் குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் பார்ப்பவர்கள். கூலிகள் இன்னும் அதிகம். இவர்களின் தற்கொலை எல்லாம் விவசாயிகள் எனும் வகைக்குள்ளேயே வராது. அதிலும் பெண்களின் நிலை இன்னும் மோசம். இதை எல்லாம் போக்கவே சுமாமிநாதன் தன் அறிக்கையில் பல விஷயங்களைப் பேசினார். சுவாமிநாதன் அறிக்கைகூட ரொம்ப பழசாகப் போய்விட்டது. ஆனால், அதைக்கூட அரசு பின்பற்ற மறுக்கிறது.

உண்மையில் அன்று சுவாமிநாதன் சொன்ன 50 சதவீத லாபத்தைக்கூட இன்றைய தேதியில் உயர்த்தணும். வருடம் பூராவும் ஒரு பயிரை, எலி, பூச்சிகளில் இருந்து காப்பாற்றி பாதுகாப்பாக நம் தட்டில் உணவாகப் பரிமாறும் ஒரு விவசாயிக்கு அந்த லாபம் 50 சதவிதம் இருந்தால் என்ன, 20 அல்லது 30 ஆக இருந்தால் என்ன அல்லது 70, 80 சதவீதமாக இருந்தால் என்ன...’’ என்று லாஜிக் ஆக கேட்கிறார் வேளாண் ஆர்வலர் அனந்து.

டி.ரஞ்சித்