நேற்று ‘ஆகாயம் தீப்பிடிச்சா...இன்று தயாரிப்பாளர்!



ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா...
நீ கவிதைகளா?! கனவுகளா?! கயல் விழியே...
மாய நதி இன்று... மார்பில் வழியுதே..!
வாழா என் வாழ்வை வாழவே...
தல கோதும் இளங்காத்து... சேதி கொண்டு வரும்...

இந்த வரிகளை எல்லாம் படிக்கும்பொழுதே பாடலின் ராகம் தாமாகவே நம் தலைக்குள் வந்து ஒட்டிக் கொண்டு படிக்காமல் நம்மையும் மீறி பாடலாகப் பாடத்தான் செய்வோம்.
காரணம், அந்தக் குரல்தான்.மாய நதியாய் பலரது மனங்களுக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கிறது பாடகர், இசையமைப்பாளர் பிரதீப்குமாரின் குரல். அப்படிப்பட்டவர் தற்போது தயாரிப்பாளராகவும் அடுத்த அடி எடுத்து வைத்திருக்கிறார்.

அப்படி என்ன மாயாஜாலம் வைத்திருக்கிறீர்கள் உங்கள் குரலில்? கேட்டவுடன் சிறு வெட்கப் புன்னகையுடன் சிரிக்கிறார் பிரதீப்குமார். ‘‘என் குரலுக்குக் காரணம் பெத்தவங்க. பாடுறது நல்லா இருக்குன்னா அதற்கு காரணம் என்னுடைய குரு ஜெ.வெங்கட்ராமன். படிப்பதற்காகத்தான் சென்னை வந்தேன். எனக்கு சொந்த ஊர் திருச்சி. என்னுடைய அம்மா லலிதா விஜயகுமார் பெரிய கர்நாடிக் பாடகி. அவங்கதான் ‘வாடி ராசாத்தி...’ (‘36 வயதினிலே’) பாடல் பாடினவங்க. மேலும் மியூசிக் டீச்சர், எனக்கும் அவங்கதான் ஆரம்பநிலை டீச்சர்.

அப்பா காவல்துறை அதிகாரி. அதனால் கண்டிப்புடன், கலையும் சேர்ந்து எனக்குள்ள வளர்ந்தது. அஞ்சு வயசுல இருந்தே பாட ஆரம்பிச்சுட்டேன்னு சொல்லுவாங்க. என்ன சொல்லிக் கொடுத்தாலும் அப்படியே திரும்ப பாடுவேனாம். 
சென்னை வந்த பிறகு ஆடியோ இன்ஜினியரிங் படிச்சேன். நிறைய டெக்னிக்கல் சார்ந்து வேலை செய்து வந்தேன். நான் ஒரு பாடகரா எங்கேயும் காண்பிச்சுக்க மாட்டேன். அதிலும் எனக்கு கணக்கு, இயற்பியல் இரண்டிலும் அதீத ஆர்வம். அதனால் அந்தத் துறை சார்ந்துதான் ஏதேனும் வேலை செய்யணும்... என்னுடைய கெரியரை அமைச்சுக்கணும்னு நினைச்சேன்.

ஆனால், காலப்போக்கில் இசை என்கூட பயணிக்க ஆரம்பிச்சிடுச்சு. ஒரு டிவி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சி.சத்யா, பாடகர்கள் கௌதம் பரத்வாஜ், கேதார், நாங்க எல்லோரும் சேர்ந்து எம்எஸ்வி சார் முன்னாடி ஒரு பாடல் உருவாக்கி பாடுகிற மாதிரி ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதில்தான் முதல் பாடல் பாடினேன். அப்ப எனக்கு 17 வயசு. அதன் பிறகு டிராக் பாட ஆரம்பிச்சேன். இசையமைப்பாளர் பிரவீன்மணி கூட பல வருடங்கள் வேலை செய்திருக்கேன். அப்போதுதான் நிறைய ட்ராக் பாடுகிற வாய்ப்பு கிடைத்தது.

ஆண் பாடகர்கள் மட்டுமில்லாமல் பெண் பாடகர்கள் பாடக்கூடிய இடத்தில் கூட நான் ட்ராக் பாடி இருக்கேன்...’’ என்ற பிரதீப் முதல் சினிமா பாடல் பாடும் வாய்ப்பு எங்கே எப்படி அமைந்தது என்பதையும் விவரித்தார்.

 ‘‘சென்னை வந்த புதிதில் எனக்கு நிறைய சப்போர்ட் செய்தவர் பாடகர் ஹரிசரண். அவர் ஒரு முறை என்னை இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதரிடம் அழைத்துப் போனார். அப்போதுதான் எனக்கு முதல் பாடல் பாடுகிற வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பாடல் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பு கிடையாது.

‘உயிர்’ (2006) படத்தில் ஒரு பாடல் பாடினேன். அதுதான் என்னுடைய முதல் பாடல். தொடர்ந்து சில பாடல்கள் பாடத்துவங்கி ‘அட்டகத்தி’யில் பாடிய போதுதான் பிரதீப் குமார் என்கிற குரல் வெளியே தெரிய ஆரம்பித்தது...’’ என்றவர் இசையமைப்பாளரானது சுவாரஸ்யமான விஷயம்.  ‘‘எனக்கு மேடையில் ஏறி பாடும் பொழுது நான் நானாக இருக்கிறதா உணர்றேன். இசையமைப்புன்னு கமிட்மெண்ட் கொடுத்துட்டா லைவ் கான்செர்ட்களில் என்னால் அதிகம் ஈடுபாடு செலுத்த முடியாது. அதனால் அதிகம் இசையமைப்புக்கு நேரம் ஒதுக்கறதில்லை.

என்னுடைய குரு எனக்கு சொன்ன ஒரு விஷயம்... ‘நீ என்ன வேணும்னாலும் படி. ஐஐடி கூட பாஸ் செய். ஆனா, இசைதான் உனக்கு சோறு போடும்...’இப்போது அதுதான் நடக்குது. 

2014ல தெலுங்கில் ‘மெயினே பியார் கியா’ என்கிற படத்தில் முதலில் இசையமைக்க கேட்டிருந்தார்கள். அதுதான் நான் முதலில் இசையமைத்த படம்.
தொடர்ந்து ‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘சில்லு கருப்பட்டி’, ‘அந்தகாரம்’, ‘மேதகு’, ‘வாழ்’ உள்ளிட்ட ஒன்பது படங்களுக்கு இசையமைச்சிருக்கேன். இது இல்லாம நிறைய தனி இசை பாடல்கள் உருவாக்கி இருக்கேன். அதில் திருப்பாவையும் அடக்கம்...’’ என்கிறவர் பிரசாத் ராமர் இயக்கத்தில் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படம் மூலம் தயாரிப்பாளராக அடுத்த அவதாரம் எடுத்திருக்கிறார்.

‘‘நான் ஒரு தயாரிப்பாளர் என்கிற அடையாளத்துக்காக இந்தப் படத்தை எடுக்கலை. பிரசாத் ராமர் என்னுடைய நீண்ட நாள் நண்பர். நானும் அவரும் சேர்ந்து ‘பீட்சா’ படத்தப்ப ‘மோகத்திரை...’ பாடலில் வேலை செய்தோம். அப்ப ஆரம்பித்த நட்பு இப்ப வரை தொடருது. அவருடைய கதைகள் எல்லாத்தையும் படிச்சிருக்கேன். 

அவர் கதைகள் நல்லா இருக்கும். என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் டிஜிட்டல் யுகம் இவ்வளவு பெரிதா மாறி இருந்தாலும், இன்னமும் ஆண், பெண் கிட்டயும்; பெண், ஆண்கிட்டயும் பேசுவதற்கே நிறைய தயக்கங்கள் இருக்கு; கேள்விகள் இருக்கு. தவறான புரிதல்கள் கூட இருக்கு.

இதையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டுதான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கோம். படம் பார்த்தவங்களுக்கு நான் சொல்றது புரியும். எந்த சினிமா டெம்பிளேட்டும் இல்லாமல், சினிமாவுக்கான விஷுவல் காட்சிகள் கூட இல்லாம ரொம்ப லைவ்வா நேச்சுரலா ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’வை உருவாக்கி இருக்கோம். தயாரிப்பாளரா ஆகணும்னு ஆசைப்படல. ஆனா, இந்தப் படத்துக்கு நான் தயாரிப்பாளரா ஆனதுக்கு சந்தோஷப்படறேன். உண்மையாகவே எல்லோரும் பேச வேண்டிய  டாபிக் இது...’’ என்றவர் தன் வெற்றிக்கான ஃபார்முலாவை விவரித்தார்.

‘‘கடந்த பத்து வருடங்கள்ல ஒரு பாடகரா இசைக் கச்சேரி, மேடை நிகழ்ச்சிகள் தனியா செய்தது நான்தான்... இதைத்தான் எனக்கான வெற்றிக்கான ஃபார்முலாவா எல்லாரும் சொல்றாங்க.
முன்னாடியே சொன்ன மாதிரி எனக்கு மேடைல ஏறி பாட ரொம்ப பிடிக்கும். மேடையில் பிரதீப், பிரதீப்பாக இருப்பான். இரண்டு வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் ஒரு மேடை நிகழ்ச்சி செய்யலாம்னு கூப்பிட்டாங்க. அதற்கான டிக்கெட்டுகள் எல்லாம் அறிவிப்பு கொடுத்து சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்திடுச்சு.

அந்த மொமெண்ட்தான் எனக்கே என்னைப் பற்றி இன்னும் நல்லா புரிய ஆரம்பிச்சது. ஒரு தன்னம்பிக்கை வர ஆரம்பிச்சது. அந்த நாள் முதல் என்னால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் லைவ் நிகழ்ச்சிகள் நடத்திட்டுதான் இருக்கேன். என்னுடைய இசை நிகழ்ச்சிகளில் என்னை பாட விடாம அல்லது என்னுடைய குரல் கேட்காத அளவுக்கு ரசிகர்களே பாடறதா அல்லது பார்வையாளர்கள் கூடவே சேர்ந்து பாடுறதா சில விமர்சனங்கள் கூட இருந்துச்சு.

ஒரு கலைஞனா ரெண்டு பக்கமும் நான் திருப்திப் படுத்திதான் ஆகணும். பணம் கட்டி டிக்கெட் வாங்கிட்டு உள்ள வர்றவங்க என் குரலைக் கேட்கணும்னு நினைப்பாங்க. இன்னொரு பக்கம் என் கூடவே சேர்ந்து மெய்மறந்து பாடவும் செய்வாங்க. இதைக் கட்டுப்படுத்த முடியாது. அதே சமயம் என் பாடலைக் கேட்க முடியலன்னு வருத்தப்படுறவங்களையும் நான் மதிக்கறேன். இதனால்தான் இப்ப எல்லாம் எந்த அளவுக்கு பீட் பாடல்கள் ஆரம்பத்தில் பாடி பார்வையாளர்களைப் பாட வைத்து டயர்ட் ஆக்க முடியுமோ அப்படிச் செய்து, பிறகு தொடர்ந்து பல முக்கியமான பாடல்களை பாட ஆரம்பிக்கறேன்.

இதனால இப்ப ஓரளவுக்கு இரண்டு பக்கமும் என்னால அவங்க எதிர்பார்த்ததைக் கொடுக்க முடியுதுன்னு நினைக்கிறேன். சமகால எஸ்.பி.பாலசுப்ரமணியம்னு என்னை குறிப்பிடறாங்க. இதை உண்மைல எனக்குக் கிடைச்ச ஆசீர்வாதமா நினைக்கறேன். உண்மைல எஸ்பிபி சார் பாடுவதை ரெக்கார்ட் செய்கிற வாய்ப்பும் கூட எனக்கு கிடைச்சிருக்கு. 

அவருடைய உயரம் வேறு, லெஜண்ட். நானே அவருடைய மிகப்பெரிய ஃபேன். அவருடைய பாடல்களை அல்லது அவர் பாடறதை மெய்மறந்து கேட்டிருக்கேன்...’’ நெகிழும் பிரதீப், சினிமாவில் பாடல்கள் குறைந்து வருவது காலத்தின் கட்டாயம் என்கிறார்.

‘‘இது கால மாற்றம். இப்படியான சூழல்ல ஒரு பாடகரா எனக்கும் வாய்ப்பு குறையும். ஆனா, ஒரு கதவு மூடினா இன்னொரு கதவு திறக்கும். மேலை நாடுகளில் சினிமாவில் பாடல்கள் கிடையாது. அதற்கு நிகரா பாப் இசை ஆல்பங்களும் தனி இசைப் பாடல்களும் அங்க கொடி கட்டிப் பறக்குது. 

இன்னும் சொல்லணும்னா சினிமா பிரபலங்களைக் காட்டிலும் அங்க பாப் இசைக் கலைஞர்களுக்குதான் மரியாதையும் புகழும் அதிகம். அந்த வகைல ஒருவேளை இந்திய சினிமாவில் பாடல்கள் குறைந்தால், தனி இசைப் பாடல்களும் ஆல்பங்களும் அதிகம் வரும்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் பிரதீப்குமார்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்