எம்ஜிஆரின் மேக்கப் மேன் பீதாம்பரம் என் தாத்தா... இயக்குநர் பி.வாசு என் அங்கிள்... நான் மூன்றாவது தலைமுறை!



அறிமுக இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘இடி மின்னல் காதல்’. ‘வஞ்சகர் உலகம்’ பட நாயகன் சிபிச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கும் 2வது படம்.பவ்யா த்ரிக்கா, யாஸ்மின் பொன்னப்பா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெயச்சந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். டி பாலசுப்ரமணியன் ஆர்ட் டைரக்‌ஷன், எடிட்டிங் ஆண்டனி.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும், இயக்குநருமான ஆர்.மாதவன் வெளியிட்டதிலிருந்தே இந்தப் படம் மீதான எதிர்பார்ப்புகள் கூடியிருக்கின்றன.

‘‘இயக்குநர் மிஷ்கின் மற்றும் ஆர்.மாதவன் இரண்டு பேருடைய பயிற்சிப் பட்டறையையும் என்னுடைய கரியரில் மறக்க முடியாது...’’ நெகிழ்வுடன் ஆரம்பிக்கிறார் இயக்குநர் பாலாஜி மாதவன்.
எதனால் இந்தத் தலைப்பு?இந்தப் படம் காதல் சார்ந்த படம்தான். ஆனால், காதல் பிரதானம் கிடையாது. அதைத் தாண்டி ஒரு ஆறு கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இடையிலே நடக்கக் கூடிய ஒரு விபத்து, அந்த விபத்து எப்படி ஒருவரை ஒருவர் பாதிக்கிது என்கிறதுதான் கதை.

எவ்வளவு வன்மம் இருந்தாலும், பழிவாங்குகிற எண்ணம் இருந்தாலும் அதைத் தாண்டிய மனிதத்துவம் நிச்சயம் ஒவ்வொரு மனிதருக்குள்ளேயும் இருக்கு. அதைத்தான் மையக் கருவாக வைத்து இந்தக் கதை எழுதியிருக்கேன். காதல், இடி, மின்னல் இந்த மூன்றுக்கும் ஒரு முக்கியப் பங்கு படத்தில் இருக்கும்.

உங்களைப் பற்றி சொல்லுங்க..?

எனக்கு சொந்த ஊர் சென்னை. படித்தது சத்யபாமா கல்லூரியிலே. எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் எடுத்து படிச்சேன். கல்லூரி நாட்களில்தான் சினிமா மேலே ஆர்வம் வந்தது. சரி ஒரு முயற்சி செய்தால் என்ன... ஒருவேளை இது சரிப்பட்டு வரவில்லை எனில் மீண்டும் படிப்பு, மாஸ்டர் டிகிரி என்னும் எண்ணத்தில்தான் சினிமா நோக்கிய பயணத்தைத் துவக்கினேன்.

ஒரு நேர்முகத் தேர்வில் தேர்வாகி மிஷ்கின் சாருடன் ‘முகமூடி’ படத்தில் இணைந்தேன். அவர் என்னை சேர்க்கும் போதே ‘ஏற்கனவே என்னிடம் 12 பசங்க இருக்காங்க, உனக்கு ஓகேவா’ எனக் கேட்டார்.‘உங்களுக்கு ஓகே எனில் சேர்கிறேன் சார், இல்லையேல் அப்படியே கிளம்பிடுவேன்’ என்றேன். அவருடன் மூன்று வருடங்கள், தொடர்ந்து அவருடைய அசிஸ்டெண்ட் கௌதம் ராமச்சந்திரன் இயக்கிய ‘ரிச்சி’ படத்தில் ஒர்க் பண்ணினேன். ‘கார்கி’ படத்தின் கதையிலும் வேலை செய்தேன்.

இந்த ‘இடி மின்னல் காதல்’ கதை முடித்த கையுடன் நான் அழைத்தது மாதவனைத்தான். ஆனால், அவரிடம் கால்ஷீட் இல்லை. தொடர்ந்து சில நாட்களில் மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு. ஒரு நான்கைந்து மணி நேரம் ‘ராக்கெட்டரி’ படத்தின் கதையைச் சொல்லி, ஸ்கிரிப்ட் புத்தகத்தையும் கொடுத்தார். அந்த மொமெண்ட் நானும் படத்தில் இணைந்தேன். அங்கே மேலும் சில முழுமையான அனுபவம் கிடைத்தது. இதோ இப்போது ‘இடி மின்னல் காதல்’.

நீங்களே தயாரிப்பாளராகவும் களமிறங்கக் காரணம் என்ன?

என்னுடைய தாத்தா பீதாம்பரம். எம்ஜிஆர், சிவாஜி, என்டிஆர் உட்பட பல ஜாம்பவான்களுக்கு மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இறுதி வரை இருந்தவர். என்னுடைய அங்கிள்தான் இயக்குநர் பி.வாசு. நான் அவர்கள் வழித்தோன்றலான மூன்றாவது தலைமுறை. அதனாலேயே என்மேலே எனக்கிருந்த நம்பிக்கை, மேலும் என் மேலே என் குழுவுக்கு இருந்த நம்பிக்கை... ‘இவன் தயாரிப்பாளரா, பணம் வருமா’ என ஒரு முறை யோசித்திருந்தால் கூட எனக்குத் தயாரிப்பு சாத்தியப்பட்டிருக்காது.

ஆனால், என்னுடைய குடும்ப அடையாளத்தை நான் எங்கேயும் பயன்படுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். இந்தப் படத்தின் சினிமாட்டோகிராபர் ஜெயச்சந்திரனும் நானும் நீண்ட நாட்கள் நண்பர்கள். இருவரும் சேர்ந்துதான் இந்தத் தயாரிப்பு நிறுவனமான பாவகி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் துவக்கினோம்.

ஹீரோ சிபி, ஹீரோயின் பவ்யா தவிர்த்து பாலாஜி சக்திவேல் சார், ராதாரவி சார், யாஸ்மின் பொன்னப்பா, ஜெகன்... இவர்கள் எல்லாம் மிக முக்கியமான கேரக்டர்களில் நடிச்சிருக்காங்க. நானும், சினிமாட்டோகிராபர் ஜெயச்சந்திரனும் தவிர அத்தனை பேரும் அனுபவசாலிகள்.

எப்படிப்பட்ட அனுபவம் கொடுக்கும் இந்த ‘இடி மின்னல் காதல்’?

மனிதம் , மனிதத்துவம் பற்றி வலிமையாகப் பேசும். படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் செய்யும் ஒவ்வொரு தவறும், எப்படி ஒரு புள்ளியில் பெரும் தாக்கத்தை உண்டாக்கப் போகிறது, அதைச் சுற்றி நடக்கும் விளைவுகள்தான் என்ன... என்பதுதான் கதை. நமக்குள் இருக்கும் நல்ல மனிதனைத் திரும்பிப் பார்க்க வைக்கும். படம் திரில்லர் ஸோனர். நிச்சயம் விறுவிறுப்பான கதைக்களம் இருக்கும் என நம்புகிறேன்.

ஷாலினி நியூட்டன்