கடலில் கிடக்கும் ரூபாய் 1 லட்சத்து 65 ஆயிரம் கோடி பொக்கிஷம்!



உலகமே உற்று நோக்கும் பெயராக ஆகியிருக்கிறது சான் ஜோஸ்.  அனைத்து நாட்டு பத்திரிகைகளும், டிவி சேனல்களும் இப்போது சான் ஜோஸ் குறித்தே நிறைய எழுதியும் பேசியும் வருகின்றன.

ஒரு பாய்மரக் கப்பல் பற்றிப் பேச அப்படி என்ன இருக்கிறது?

ஜேம்ஸ்பாண்ட் படங்களையே தூக்கிப்போடும் அளவுக்கு அதில் அவ்வளவு விஷயங்கள் பொதிந்து இருக்கின்றன. எதிர்பாராத திருப்பங்களும், நீதிமன்றக் காட்சிகளும்கூட உண்டு. இவை எல்லாவற்றுக்கும் மேல் அதனுள் ஒரு பெரிய புதையலே அடங்கியிருக்கிறது.
அந்தப் பொக்கிஷத்திற்காகவே நான்கு தரப்பினர் உரிமை கோரி வருகின்றனர். அதன் இன்றைய மதிப்பு சுமார் 1 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் (20 பில்லியன் டாலர்) என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதனாலேயே முன்பு இது உலகில் அதிகம் தேடப்பட்டு வந்த ஒரு பொக்கிஷமாக இருந்தது. சான் ஜோஸ் கப்பல் உலகில் பிரபலமாய் மாறுவதற்குக் காரணமும் அதுவே. அதன் புகைப்படம் சமீபத்தில் வெளி வந்திருப்பதால் அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது.
1698ல் ஸ்பெயின் நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த சான் ஜோஸ் கப்பல் 64 துப்பாக்கிகளையும், பாய்மரங்களைத் தாங்கும் மூன்று கம்பங்களையும் கொண்டது. இதனை ‘Three-masted Spanish galleon’ என்கின்றனர். இது ஸ்பானிஷ் புதையல் கடற்படை என அழைக்கப்படும் கப்பல்
களில் ஒரு பகுதியாக விளங்கியது.  

அதாவது, ஸ்பெயின் மன்னர் ஐந்தாம் பிலிப்பின் போருக்கு உதவியாக, ஸ்பெயின் காலனி ஆதிக்கத்திற்குள் இருந்த தென்அமெரிக்கா நாடுகளிலிருந்து தங்கம், வெள்ளி, மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை எடுத்துவர இந்தக் கப்பல் பயன்படுத்தப்பட்டது. அதனால்தான் ஸ்பானிஷ் புதையல் கடற்படை கப்பல் எனப்படுகிறது.

18ம் நூற்றாண்டில் நடந்த ஸ்பானிஷ் வாரிசுரிமைப் போரின்போது இந்தக் கப்பல் கொலம்பியா நாட்டின் கார்டீஜினா மாகாணத்தின் அருகே உள்ள தீவுப்பகுதியில் மூழ்கிப்போனது.
அதாவது 1708ம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் படையுடன் நடந்த சண்டையில் இந்தக் கப்பல் மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது. இதில் 600 வீரர்கள் இருந்தனர். அதில் 11 பேரே மீண்டதாகக் குறிப்புகள் உள்ளன.

அப்போது இதிலிருந்த விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் கடலில் மூழ்கிப் போயின. பின்பு இந்தக் கப்பலில் 200 டன் வெள்ளி, மரகதம் மற்றும் பதினொரு மில்லியன் தங்க நாணயங்கள் உட்பட ஏராளமான புதையல்கள் மூழ்கியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. அத்துடன் இந்தக் கப்பல் நினைவிலிருந்தும் தப்பியது. 

ஆனால், ஆய்வாளர்கள்  தேடிக்கொண்டே இருந்தனர்.இந்நிலையில் 1981ம் ஆண்டு கடலுக்கடியில் புதைந்துபோன கப்பல்களை ஆய்வு செய்யும் க்ளோக்கா மோரா என்ற அமெரிக்க நிறுவனம் கப்பல் இருக்கும் இடத்தைக் கண்டறிந்ததாகச் சொன்னது. ஆனால், கொலம்பியா அரசு அவர்கள் கேட்ட பங்கை தர மறுத்தது. அதுமட்டுமில்லாமல், மேற்கொண்டு ஆய்வினைத் தொடர அனுமதியும் தரவில்லை.  

இதனால், 1989ல் அந்த நிறுவனம் கொலம்பியா அரசு மீது கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இது ஒரு புறம் நடக்க கொலம்பியா அரசு 2015ம் ஆண்டு தன்னிச்சையாக இந்தக் கப்பல் இருக்கும் இடத்தை தங்கள் ஆழ்கடல் டைவர்கள் மூலம் 600 மீட்டர் ஆழத்தில் கண்டறிந்ததாக அறிவித்தது. 

அதுவும், இதற்கு முன்பு அந்த அமெரிக்க நிறுவனம் கண்டறிந்த இடத்தில் சான் ஜோஸ் இல்லை என்றும், தற்போது சான் ஜோஸ் கண்டறியப்பட்ட இடம் ரகசியமானது என்றும் தெரிவித்தது. பின்னர் செய்யப்பட்ட ஆய்வின் போது கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

அதில் சிதறிக் கிடக்கும் தங்க நாணயங்கள், சிறு பீரங்கிகள், சீன நாட்டு பீங்கான் கோப்பைகள் உள்ளிட்டவற்றைக் காணமுடிகிறது. இதனால், சான்ஜோஸ் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில்தான் இந்தாண்டு பிப்ரவரி மாதம் இது சம்பந்தமான நடவடிக்கைகளில் உள்ள கொலம்பியா அதிகாரிகள், கப்பலிலிருந்து பொருட்களை மீட்கும் திட்டத்தை அதிரடியாக அறிவித்தனர்.

இதற்கிடையில் அந்தக் கப்பலில் உள்ள பொருட்கள் தங்களுக்குச் சொந்தம் என்றனர் பொலிவியா நாட்டிலுள்ள கரா கரா (Qhara Qhara)  பூர்வகுடிகள். ஏனெனில், இந்தப் பொருட்களை எடுத்துவர தங்கள் மூதாதையர்களைத்தான் ஸ்பெயின் படையினர் வற்புறுத்திப் பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றனர். 

இதுதவிர, ஸ்பெயின் நாடும் தங்கள் நாட்டுக்கு சொந்தமான கப்பல் என்பதால் இந்தப் பொக்கிஷத்திற்கு உரிமை கொண்டாடுகிறது. ஆக, கொலம்பியா அரசு, அமெரிக்க தனியார் நிறுவனம், ஸ்பெயின், கரா கரா மக்கள் ஆகியோர் இதற்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கொலம்பியா அதிபர் குஸ்டவோ பெட்ரோ, 2026ம் ஆண்டுடன் முடிய உள்ள தன் பதவிக்காலத்திற்குள் இந்தப் பொக்கிஷத்தை மீட்க நினைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பேராச்சி கண்ணன்