கழுதைப்பால் பிசினசில் லட்சங்களைக் குவிக்கும் இளைஞர்!



ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பே கழுதைப்பாலை உணவாகவும், மருந்தாகவும், அழகு சாதனப் பொருளாகவும் எகிப்தியர்கள் பயன்படுத்தியிருப்பதாக வரலாற்று ஆய்வுகள்

சொல்கின்றன. ஃபிரான்ஸின் பேரரசர் நெப்போலியனின் தங்கை பாலின் போனபார்ட், சருமப் பாதுகாப்பிற்காக கழுதைப்பாலைப் பயன்படுத்தியிருக்கிறார்.
 இன்று இந்தியாவில் கழுதைப்பாலுக்குப் பெரிதாக சந்தையில்லை. ஆனால், மற்ற நாடுகளில் கழுதைப்பாலுக்குப் பெரும் தேவையிருக்கிறது. குறிப்பாக மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் கழுதைப்பாலின் தேவை அதிகம்.

சரியான வாடிக்கையாளர்களை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் போதும், கழுதைப்பால் பிசினஸில் லட்சங்களை அள்ளலாம். இதற்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறார் திரேன் சோலங்கி.
‘‘ஏதாவது அரசு வேலைக்கு நான் போயிருந்தால் ஆரம்பத்தில் மாதம் 30 ஆயிரம் ரூபாயை சம்பாதித்திருப்பேன். இந்தத் தொகையை இப்போது மூன்றே நாட்களில் ஈட்டுகிறேன். அரசு வேலை என்னுடைய மாதாந்திர கடன்களை அடைக்க உதவியிருக்கலாம். அது என் கனவுகளை ஒருபோதும் நிறுவேற்றியிருக்காது.

மட்டுமல்ல, அரசு வேலை கிடைத்திருந்தால் என்னை யாருக்குமே தெரிந்திருக்காது. கழுதைப்பால் பிசினஸ் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு நான் அறிமுகமாகிவிட்டேன். பலருக்கும் என்னைத் தெரிந்திருக்கிறது...’’ என்கிற திரேன் சோலங்கி, குஜராத்தின் பதான் மாவட்டத்தில் அமைந்துள்ள மானுந்த் கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர்.அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்பதுதான் சிறு வயதில் திரேனின் கனவு. 2020ல் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, அரசு வேலைக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்காக தயாரானார். மாநில அளவில் மட்டுமல்லாமல், மத்திய அளவில் நடந்த பல தேர்வுகளை எழுதினார்.

ஆனால், எந்த தேர்விலும் அவரால் வெற்றிபெற்று, அரசு வேலையைத் தன்வசப்படுத்த முடியவில்லை. இந்தத் தேர்வுகளுக்குப் படிப்பதற்காக எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே எட்டு மாதங்களுக்கு மேல் இருந்தார் திரேன். தேர்வில் தோல்வியடைந்தது அவரை வருத்தியது. இந்நிலையில் 2021ம் வருடம் கர்நாடகா மற்றும் கேரளாவில் வெற்றிகரமாக நடக்கும் கழுதைப்பால் பிசினஸைக் குறித்து ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறார் திரேனின் தந்தை.

தான், படித்ததை வியப்புடன் திரேனிடம் சொல்லியிருக்கிறார். அப்போது வட இந்தியாவில் பெரிதாக யாருமே கழுதைப்பால் பிசினஸில் ஈடுபடவில்லை.
அதே சமயம் உள்நாட்டில் கழுதைப்பாலுக்கு மிகக்குறைவான தேவையே இருந்தது. ஆனால், துருக்கி, மலேசியா, சீனா போன்ற நாடுகளில் கழுதைப்பாலுக்கான தேவை அதிகமாக இருந்ததை அந்தப் பத்திரிகையின் மூலமாகத் தெரிந்துகொண்டார் திரேன்.

இதற்குப் பிறகு கழுதைப்பால் குறித்த விஷயங்களைத் தேடித்தேடிப் படிக்க ஆரம்பித்தார் திரேன். ‘‘கழுதைப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றலும், குடலியக்கத்தை செழுமையாக்கும் திறனும் இருப்பதாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் படித்தேன். அதுபோக மாட்டுப்பால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு கழுதைப்பால் சிறந்தது, அழற்சி நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது.

மட்டுமல்ல, ஒரு லிட்டர் கழுதைப்பாலின் விலை 3,500 ரூபாயாக இருப்பதால்தான் மக்கள் அதை வாங்க விரும்புவதில்லை. அதனால் நிறுவனங்கள் மட்டுமே வாங்குகிறது. குழந்தைகளுக்கான சோப், கிரீம், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக கழுதைப்பால் இருப்பதை தெரிந்துகொண்டேன். குறிப்பாக கொரோனா காலத்தில் கழுதைப்பாலின் தேவை ரொம்பவே அதிகமாகியிருக்கிறது...’’ என்கிற திரேன், எதைப்பற்றியும் யோசிக்காமல் கழுதைப்பால் பிசினஸில் இறங்கினார்.

மானுந்த் கிராமத்தில், 2022ம் வருடம் ‘டிடிஎஸ் டான்கி ஃபார்ம்’ என்ற பெயரில் ஒரு கழுதைப் பண்ணையைத் திறந்தார் திரேன். அவருக்குக் கழுதை வளர்ப்பு குறித்து முன் அனுபவம் எதுவுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் 40 அடி நீளம் மற்றும் 30 அடி அகலம் கொண்ட ஒரு கொட்டகையைக் கட்டினார். இதற்கு 3 லட்ச ரூபாய் செலவானது. பிறகு 37 லட்ச ரூபாயைக் கடன் வாங்கி, 20 கழுதைகளை வாங்கினார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தபடி பிசினஸ் நடக்கவில்லை. முதல் முயற்சியே பெருத்த நஷ்டத்தில் முடிந்தது.‘‘நான் கழுதைகளை வாங்கிய உடனே, அவை ஒரு நாளில் பால் கொடுக்கும்; அடுத்த நாளுக்குள் அந்த பாலை விற்றுவிடலாம் என்று நினைத்தேன்.

இது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதைப் பிறகுதான் தெரிந்துகொண்டேன். ஆம்; உள்நாட்டுக்குள் ஒரு வாடிக்கையாளரைக் கூட என்னால் பிடிக்க முடியவில்லை. வாடிக்கையாளர்களைத் தேடுவதிலேயே ஒரு வருடம் ஓடிப்போனது.

இந்த ஒரு வருடத்தில் சுமார் 3 ஆயிரம் லிட்டர் கழுதைப் பால் வீணாகிவிட்டது. இதன் மதிப்பு சுமார் 40 லட்ச ரூபாய் இருக்கும். மட்டுமல்ல, வெளிநாடுகளுக்குக் கழுதைப் பாலை அப்படியே திரவ வடிவில் அனுப்ப முடியாது; அதை பவுடராக மாற்றித்தான் அனுப்ப முடியும் என்பதையும் தெரிந்துகொண்டேன்...’’ என்கிற திரேன், வாடிக்கையாளர்களைப் பிடிப்பதற்காக ஒரு மார்க்கெட்டிங் நிறுவனத்தை அணுகினார். கமிஷன் அடிப்படையில் திரேனுக்கு உதவ அவர்கள் முன்வந்தனர்.

இதற்கிடையில் கழுதைப்பாலை பவுடராக மாற்றும் செயல்முறையைக் கற்றுக்கொண்டார் திரேன். மீண்டும் புதிதாக எல்லாவற்றையும் ஆரம்பித்தார். ஒரு கிலோ கழுதைப்பால் பவுடர் உண்டாக்குவதற்கு 17 லிட்டர் பால் தேவைப்பட்டது. ஒரு வருடத்தில் சுமார் 200 கிலோ கழுதைப்பால் பவுடரைத் தயாரித்துவிட்டார்.

அந்த மார்க்கெட்டிங் கம்பெனி மூலமாக ஒரு நிறுவனம் 50 கிலோ கழுதைப்பால் பவுடருக்கு ஆர்டர் கொடுத்தது. அப்போதே சர்வதேச சந்தையில் ஒரு கிலோ கழுதைப்பால் பவுடரின் விலை ரூ.63 ஆயிரம். இருந்தாலும் சில ஆயிரங்கள் தள்ளுபடியில் கொடுத்தார் திரேன். 

கடந்த இரண்டு வருடங்களில் மாதம் 3 லட்சம் ரூபாயை ஈட்டும் அளவுக்கு திரேனின் பிசினஸ் வளர்ந்துவிட்டது. இன்று திரேனின் கழுதைப் பண்ணையில் 50 கழுதைகள் உள்ளன. இந்தக் கழுதைகள் எல்லாம் சேர்ந்து தினமும் 15 லிட்டர் பாலைக் கொடுக்கின்றன. திரேனின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

த.சக்திவேல்