கருடன் விண்ணரசி



கிளாசிக் பியூட்டி, நேச்சுரல் லுக், பக்கத்து வீட்டு பெண் சாயல், உடன் ‘அருவி’ அதிதி பாலனின் மாமா மகள். ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தற்போது ‘கருடன்’ படத்தின் நாயகியாக கண்சிமிட்டுகிறார் இந்த மாயமான சீனி காரி ரேவதி.

எப்படி இருக்கீங்க... படிப்பு எல்லாம் முடிஞ்சிடுச்சா?

முதல் படம் செய்யும்பொழுது நான் முதலாம் ஆண்டு படிச்சுக்கிட்டு இருந்தேன். அந்த படம் வெளியாகும் பொழுது நான் மூன்றாம் ஆண்டு படிச்சுக்கிட்டு இருந்தேன். படிச்சு முடிச்சு வெளியே வந்ததும் மூன்று மாதங்களிலேயே எனக்கு இந்தப் படம் கிடைச்சிடுச்சு. 
என்னைப் பொறுத்தவரை கலினரி கலையில் (சமையல் கலையில் - படித்தது இது தொடர்பாகத்தான்) சிறப்பா வரணும்னு ஒரு கனவு இருக்கு. அதனால்தான் நடிப்பிலும் அவசரப்படாமல் படிப்பையும் இடையூறு செய்யாம படிச்சு முடிச்சிட்டேன். மேலும் அக்காவுடைய கைடன்ஸ் இருந்துச்சு. சில ஸ்கிரிப்ட் வந்துச்சு. எல்லாத்தையும் எண்ணிக்கைக்காக பண்ணக் கூடாது அப்படின்னு முடிவு செய்துட்டேன்.

‘கருடன்’..?

அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆர்.எஸ் சார் என் முதல் படத்தை பார்த்துட்டு என் பெயரை ரெகமண்ட் செய்திருக்கிறார். அப்படித்தான் இந்தப் படம் எனக்கு கிடைத்தது.
என் கேரக்டர் பேரு விண்ணரசி. ஒரு அப்பாவி கிராமத்து பொண்ணு. குடும்பம், தினசரி வாழ்க்கைனு எப்பவும் இருப்பா. படத்துடைய மெயின் கேரக்டர் சொக்கனுக்கு விண்ணரசி ஒரு சப்போர்ட்டிங் கேரக்டர்.

‘கருடன்’ல நிறைய கத்துக்கிட்டேன். படம் முழுக்கவே சசிகுமார் சார், சமுத்திரக்கனி சார், சூரி சார்னு நிறைய அனுபவமான நடிகர்கள். இயக்குநர் துரை செந்தில்குமார் சார் வேலை வாங்குகிற விதமே வித்தியாசமா இருந்துச்சு. 

ரொம்ப தெளிவா எடுத்துச் சொல்லி காட்சிக்கான நடிப்பை வாங்குவார்.  அதிலும் எனக்கு இது இரண்டாவது படம் என்கிறதால இந்தப் படம் எனக்கு கிட்டத்தட்ட ஒரு பள்ளிக்கூடம் மாதிரியே இருந்துச்சு. சூரி சாரோட டெடிகேஷன்... சான்சே கிடையாது. ஒரே ஒரு வருத்தம் சசிகுமார் சார், சமுத்திரக்கனி சார் கூட எனக்கு காட்சிகள் கிடையாது. இல்லனா இன்னும் நிறைய பாடம் கிடைச்சிருக்கும்.

சூரி சார் எப்பவுமே ஏதாவது கேள்வி கேட்டுகிட்டே இருப்பார். ஆனால், எந்தக் கேள்வியும் கடந்து போகக் கூடியதா இருக்கவே இருக்காது. எல்லாமே லெசன் மாதிரி இருக்கும்.
உன்னி முகுந்தன் சாருக்கு தமிழ் தெரியாது. வசனங்கள் எல்லாமே மலையாளத்தில் எழுதி வச்சுதான் பேசினார். ஆனாலும் படத்தில் டப்பிங் கொடுக்கணும்னு மெனக்கெட்டு கொடுத்தார். அந்த டெடிகேஷன் கத்துக்கிட்டேன்.

முதல் படமும் இரண்டாவது படமும் மிகப்பெரிய ப்ராஜெக்ட்களாக கிடைத்தது பற்றி..?

ஏதோ அதிர்ஷ்டம் இருக்குனு நினைக்கிறேன். இல்லை எனக்கு முன்பே அக்கா சரியான பாதை போட்டு வச்சிருக்காங்கன்னு தோணுது. ஏ.ஆர்.முருகதாஸ் சார் ப்ராஜெக்ட்டும் சரி, இந்த படமும் சரி நிஜமாகவே ஒரு அறிமுக நடிகை கொஞ்சமும் எதிர்பார்க்காத வாய்ப்புதான்.  

ஹோம்லி லுக் நடிகையாகத்தான் வலம் வரப் போறீங்களா?

கிளாமருக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எல்லை இருக்கும். அதே மாதிரி எனக்கும் ஓர் எல்லை உண்டு. என்னுடைய எல்லை எதுவோ அதுவரைக்கும் கிளாமர் கதாபாத்திரத்தில் நடிப்பேன்.
 
நடிப்பிற்காக ஏதேனும் பயிற்சிஎடுத்துக் கொண்டீர்களா?

எனக்குதான் மிகப்பெரிய கோச் வீட்டிலேயே இருக்காங்களே! அக்காவைப் பார்த்துதான் நடிக்கும் ஆசை வந்தது. அக்கா நிறைய சொல்லிக் கொடுத்திருக்காங்க. குறிப்பா முகபாவங்கள், கண்களுக்கான பயிற்சி, பொது இடங்களில் - சினிமா நிகழ்வுகளில் எப்படி பேசணும் என்கிற பயிற்சி. இப்பதான் படிப்பு முடிஞ்சிடுச்சே... இனிமே சினிமாவுக்காக நிறைய
தயாராகணும்.  

ட்ரீம் ரோல்..?

ரீமா கல்லிங்கல், சாய் பல்லவி, பார்வதி... என்னவோ இந்த மூணு நடிகைகளும் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறதாவே எனக்கு தோணும். இவங்க நடிக்கிற கதாபாத்திரங்கள் மாதிரியான கேரக்டர்களில் நடிக்கணும்னு ஆசை இருக்கு.

ஷாலினி நியூட்டன்