வடமாநிலங்களில் அனல் வீச என்ன காரணம்?காரணம் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், இந்தியாவில் மார்ச் - ஜூன் காலகட்டங்களில் வெப்ப அலை வீசும்... அனல் காற்று பொசுக்கும்... என கடந்த ஜனவரி மாதமே எச்சரிக்கை விடப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா?

யெஸ். 2024ம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் ஒரு சூப்பர் எல் நினோ உலகைத் தாக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்காவின் தேசிய பெருங்
கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA - National Oceanic and Atmospheric Admini stration) அலாரம் அடித்தது.NOAA-இன் முன்னறிவிப்பின்படி, சூப்பர் எல் நினோ மார்ச் மற்றும் ஜூன் 2024க்கு இடையில் ஏற்பட்டிருக்கிறது!

பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள கடல் மேற்பரப்பு வெப்பநிலை அந்த நேரத்தில் சராசரியை விட 1.5 டிகிரி செல்சியஸ் உயரும்... உலக வெப்பநிலை வெறும் 2 சதவிகிதம் அதிகரிப்பது என்பது, 30 சதவீதத்திற்கும் மேலான அதிகரிப்புக்குச் சமம்... என்ற டேட்டாவின்படியே நிகழ்ந்திருக்கிறது.

என்ன இது... மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என யோசிக்கிறீர்களா?

இதற்கான பதிலை டேட்டா பொட்டில் அடித்ததுபோல் கூறுகிறது. 1972 - 73, 1982 - 83, 1997 - 98 மற்றும் 2015 - 16ம் ஆண்டுகளில், பல நாடுகள் கடுமையான வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற நிலைமைகளை சந்தித்தது நினைவில் இருக்கலாம்.இதற்குக் காரணம் எல் நினோ.பசிபிக் பெருங்கடலில் நிலவும் வானிலைக்கே ‘எல் நினோ’ என்று பெயர். பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட எல் நினோ ஏற்படும்போது அதிகரிக்கும்.

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சாதாரண வரம்பான 32 முதல் 34 டிகிரி செல்சியஸைவிட வெப்பநிலை அதிகமாக இருந்தால், அந்த வானிலை சூப்பர் எல் நினோ எனப்படும்.இவையனைத்தும் பசிபிக் பெருங்கடலில் ஏற்படும். விளைவு... ஒட்டுமொத்த உலகிலும் எதிரொலிக்கிறது.

ஆம். உலகின் மிகப்பெரிய கடலான பசிபிக் பெருங்கடலில் பலத்த காற்று, அவற்றின் திசை மற்றும் வெப்பநிலை போன்ற காரணிகள் ஒட்டுமொத்த உலக வானிலையையே பாதிக்கிறது.
இந்த பாதிப்பு இந்தியாவிலும் காணப்படுகிறது என்பதுதான் ஹைலைட்.

மிகைப்படுத்தவில்லை. எல் நினோ காலநிலையில் தாக்கம் ஏற்படும் போதெல்லாம் இந்தியாவில் வறட்சி நிலவுகிறது என்பதை கடந்த கால அனுபவம் காட்டுகிறது.இதனடிப்படையிலேயே இந்த ஆண்டும் எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது என NOAA சிவப்புக் கொடியை ஏற்றியது.

சொன்னபடியே வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப அலை வீசியிருக்கிறது. குறிப்பாக தேசத்தின் தலைநகரான தில்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் 126 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அனல் காற்று வீசி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது. பீகாரில் பலர் வெப்பம் காரணமாக மயங்கிவிழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  

எனில் வெப்ப அலைக்கும் எல் நினோவுக்கும் மட்டும்தான் தொடர்பு இருக்கிறதா?

இல்லை. இந்தியாவில் மழைப்பொழிவுக்கும் எல் நினோவுக்கும் இடையேயும் பிரிக்க முடியாத தொடர்பு இருக்கிறது. ஏனெனில், 1981 முதல் தற்போது வரை, நாட்டில் ஏற்பட்ட வறட்சி நிலை, ஆறு எல் நினோ தாக்கங்களின் போதுதான் ஏற்பட்டது. இறுதியாக 2002 மற்றும் 2009ம் ஆண்டு வறட்சியின்போது எல் நினோ ஏற்பட்டது.

ஆனால், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் வறட்சி ஏற்படும் போதெல்லாம் எல் நினோ விளைவு இருக்கும். ஆனால், எல் நினோ ஏற்படும் போதெல்லாம் இந்தியாவில் வறட்சி ஏற்படும் என்பதில்லை! உதாரணமாக, 1997 - 98ல் எல்நினோவின் தாக்கம் கடுமையாக இருந்தபோது இந்தியாவில் வறட்சி நிலவவில்லை!

என்.ஆனந்தி