Must Watchஃபயர் ஐலேண்ட்

ஒரு ஜாலியான படம் பார்க்கவேண்டுமா? உங்களுக்காகவே ‘ஹாட் ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது, ‘ஃபயர் ஐலேண்ட்’ எனும் ஆங்கிலப்படம். ஒவ்வொரு வருடமும் தனது நெருங்கிய நண்பர்களுடன் ஃபயர் ஐலேண்டுக்குச் சென்று விடுமுறையைக் கழிப்பது நோவாவின் வழக்கம். ஒரு வாரத்துக்கு மேல் அங்கே தங்கியிருந்து, நவீன படகை எடுத்துக்கொண்டு அருகிலிருக்கும் இடங்களுக்கு எல்லாம் செல்வார்கள்.

தீவிலிருந்து கிளம்புவதற்கு முன்பு கடைசியாக எரின் வீட்டில் தங்குவது நண்பர்களின் வழக்கம். அப்படி எரினின் வீட்டில் தங்கும்போது, வீட்டை விற்கப்போவதாகவும், இதுதான் நமது கடைசி சந்திப்பு என்றும் சொல்கிறார் எரின். அதனால் அந்த நாளை ஜாலியாகக் கொண்டாடுகின்றனர்.

நண்பர்களுக்கு சார்லி என்ற பணக்காரரின் அறிமுகம் கிடைக்கிறது. நோவாவையும், அவரது நண்பர்களையும் தனது இடத்துக்கு வரச்சொல்லி அழைப்பு விடுக்கிறார் சார்லி. அங்கே சென்றபிறகு நண்பர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகள்தான் மீதிக்கதை. அமெரிக்காவின் நவீன கால இளைஞர்களின் வாழ்க்கையை விளையாட்டுப் போல சொல்லிச் சென்றிருக்கிறது இந்தப் படம். இதன் இயக்குநர் ஆண்ட்ரூ ஆன்.

இன் குட் ஹேண்ட்ஸ் 2

‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகியிருக்கும் துருக்கிய மொழிப்படம், ‘இன் குட் ஹேண்ட்ஸ் 2’. ஆங்கிலத்தில் காணக்கிடைக்கிறது. மனைவி மெலிசா இறந்ததிலிருந்து மதுவுக்கு அடிமையாகிவிடுகிறான், ஃபிராட். இதுபோல தொடர்ந்து குடித்தால் மரணம்தான் என்று எச்சரிக்கிறார் ஃபிராட்டின் குடும்ப மருத்துவர். ஃபிராட்டுக்கு ஆறு வயதில் கேன் என்ற மகன் இருக்கிறான். அப்பாவுக்கும், மகனுக்கு மிடையில் அவ்வளவாக நல்லுறவு இல்லை.

அதனால் ஃப்ராட்டை அப்பா என்றுகூட கேன் அழைப்பதில்லை. அம்மா இழந்த துக்கம் கேனையும் ரொம்பவே வாட்டுகிறது. அதனால் டைம் மெஷின் கண்டுபிடித்தால் அம்மாவிடம் செல்லலாம் என்ற நம்பிக்கையில் ஆராய்ச்சி செய்கிறான் கேன். அவனால் பள்ளியில் இயல்பாக இருக்க முடியவில்லை. பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று ஃப்ராட்டிடம் அடம் பிடிக்கிறான். இது அவர்களுக்குள் மேலும் பிளவை உண்டாக்குகிறது.

துக்கம் மட்டுமே நிறைந்த ஃபிராட் - கேனின் வாழ்க்கையில் எது மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது? அது மீதிக்கதை. ஃபீல் குட் மூவி பார்க்க விரும்புகிறவர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்தப் படம். இதன் இயக்குநர் கெட்சே.

ஐஓ கேபிடானோ

சிறந்த அயல்நாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டியின் இறுதிப்பட்டியலில் இடம் பிடித்த இத்தாலியத் திரைப்படம் ‘ஐஓ கேபிடானோ’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. செனகல் நாட்டைச் சேர்ந்த செய்டோவும், மூசாவும் உறவினர்கள். 

இருவரது வயதும் இருபதைக் கூட தொடவில்லை. வறுமையில் வாடுகிறது அவர்களது குடும்பங்கள். செனகலில் இருந்தால் இப்படியேதான் இருக்க வேண்டும், இத்தாலிக்குச் சென்றால் வறுமையைப் போக்கலாம் என்று திட்டமிடுகின்றனர். போலி பாஸ்போர்ட்டுடன் மாலி என்ற நாட்டின் வழியாக இத்தாலிக்குச் செல்கின்றனர்.

வழியில் காவல்துறையிடம் மாட்டிக்கொள்கின்றனர். லஞ்சம் கொடுத்து போலி பாஸ்போர்ட் விவகாரத்திலிருந்து தப்பிக்கின்றனர். அடுத்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் கலந்த ஒரு குழுவுடன் இணைந்து, கால்நடையாகவே பயணித்து லிபியாவை அடைகின்றனர். லிபியாவை அடைந்த அந்தக்குழுவிடம் இருக்கும் மதிப்பு வாய்ந்த பொருட்களை அபகரிக்கிறது ஒரு படை. அந்தப் படையைச் சேர்ந்தவர்கள் மூசாவிடம் இருக்கும் பணத்தைத் தெரிந்துகொண்டு, அவரை சிறைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

செய்டோ தனியாகப் பயணத்தைத் தொடர்கிறார்.  இதற்குப் பிறகு செய்டோ, மூசாவின் வாழ்க்கை என்னவாகிறது என்பதே திரைக்கதை.பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஆப்பிரிக்க மக்கள் சந்திக்கின்ற துயரங்களை ஆழமாகப் பதிவு செய்கிறது இந்தப்படம். இதன் இயக்குநர் மட்டேயோ காரோனே.

க்ரூ

‘நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இந்திப்படம், ‘க்ரூ’. கீதா, ஜாஸ்மின், திவ்யா ஆகிய மூன்று தோழிகளும் கோஹினூர் ஏர்லைன்ஸில் விமானப் பணிப்பெண்களாக வேலை செய்து வருகின்றனர். 

ஏர்லைன்ஸ் திவாலடைந்து விட்டதால் சில மாதங்களாக ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை. கீதாவின் கணவர் வீட்டிலிருந்தே ஆன்லைனில் உணவு பிசினஸ் செய்து வருகிறார். சொல்லும்படியாக பிசினஸ் இல்லை. வேலையில்லாத தம்பிக்கும், அவனது மனைவிக்குத் தேவையான பொருளாதார உதவிகளை கீதாதான் செய்து வருகிறாள்.

சிறு வயதிலேயே ஜாஸ்மினின் பெற்றோர்விவாகரத்து செய்துவிட்டனர். தாத்தாவின் வீட்டில்தான் வளர்ந்தாள். அடித்துப் பிடித்து விமானப் பணிப்பெண் வேலைக்கு வந்திருக்கிறாள் ஜாஸ்மின்.

விமானி வேலைக்காக பயிற்சி எடுத்தவள், திவ்யா. ஆனால், விமானப் பணிப்பெண் வேலைதான் அவளுக்குக் கிடைத்தது.வீட்டுக்குத் தெரியாமல் விமானப்பணிப்பெண் வேலை செய்து வருகிறாள் திவ்யா.

இந்த மூன்று தோழிகளும் கஸ்டம்ஸ் சோதனையில் மாட்டுகின்றனர். சூடுபிடிக்கிறது திரைக்கதை. தபு, கரீனா கபூர், கீர்த்தி சனோன் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் கலக்கியிருக்கின்றனர். படத்தின் இயக்குநர் ராஜேஷ் ஏ கிருஷ்ணன்.

தொகுப்பு:த.சக்திவேல்