ராமராஜனின் மகள்!நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் நடிப்பில் வெளியான படம் ‘சாமானியன்’. அதில் அவருடைய மகளாக துறுதுறு நடிப்பில் மின்னியவர் நக்‌ஷா சரண். தெளிவான தமிழ் உச்சரிப்பு, சினிமாவைப் பற்றிய புரிதல் என செம ஷார்ப் நக்‌ஷா சரண்!

நக்‌ஷா சரண் எப்படி சினிமா நட்சத்திரமானார்?

நான் சென்னைவாசி. எல்லோரும் சொல்வதுபோல் சின்ன வயசுலேர்ந்து என்னையும் அறியாமல் சினிமா மீது ஆர்வம் உண்டாச்சு. தமிழ்ப் படங்கள் என்றில்லாமல் எல்லா மொழி படங்களையும் பார்ப்பேன். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தாலும் படம் ஞாபகமாகவே இருப்பேன். படத்தில் வர்ற மாதிரி நடிச்சுப் பார்ப்பேன். எனக்குள் சினிமா மோகம் பரவ ஆரம்பிச்ச சமயத்தில் ஸ்கூல் நாடகங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைச்சது.

அந்த ஆர்வம்தான் சினிமாவுக்கு வர தூண்டுதலா இருந்துச்சு. நடிகையா வரணும் என்றில்லாமல் சினிமாவில் எதாவது ஒரு துறையில் வேலை செய்யணும்னு முடிவு பண்ணினேன். டிகிரி முடிஞ்சதும் சினிமாவுல தீவிரமா வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன். ‘மார்கழி திங்கள்’, ‘சாமானியன்’ என குறுகிய காலத்தில் இரண்டு படங்கள் பண்ண முடிஞ்சது.

‘சாமானியன்’ படத்துல நடிக்கும்போது என்னவிதமான அழுத்தம் இருந்துச்சு?

கதை கேட்கும்போது ராமராஜன் சார் நடிக்கும் தகவல் தெரியாது.  பிறகுதான் ராமராஜன் சார் நடிக்கிறார் என்று தெரியும். படப்பிடிப்புக்கு முன்பே லெஜண்ட் ஆக்டருடன் நடிக்கப் போகிறோம் என்ற ஆர்வம் அதிகமாயிடுச்சு. ஏனெனில், ராமராஜன் சார் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர். அவருடைய கம் பேக் மூவியில் நானும் இருக்கிறேன் என்று நினைக்கும்போது அது அளவில்லாத சந்தோஷத்தைக் கொடுத்துச்சு.

ஷூட் சமயத்துல எப்படி நடிக்கப்போகிறோம் என்ற பதட்டம் இருந்தது உண்மைதான். ஆனால், அவருடைய பழகும் விதம் எனக்குள் இருந்த அழுத்தத்தை முழுசா குறைச்சது. அந்தளவுக்கு மிக எளிமையா பழகுவார். பெரிய ஸ்டார் என்ற பந்தா இருக்காது. படப்பிடிப்பு நடக்கும்போது ஏராளமான ரசிகர்கள் திரண்டு வருவார்கள். 
நான் கவனிச்ச வரை ரசிகர்கள் அவரை ஒரு நடிகராகப் பார்க்காமல் உடன் பிறவா சகோதரர் போலவும், மாமா, மைத்துனர் என்று உறவு முறை சொல்லி கொண்டாடும் உறவுக்காரர்கள் போலவும்தான் பழகினார்கள். அது ரசிகர்கள் அவரிடம் எடுத்துக்கொள்ளும் உரிமை என்பதைவிட அபரிமிதமான அன்பு என்று சொல்லலாம்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல், படத்தில் மகளாக நடித்த எனக்கும் அதுபோன்ற உணர்வுதான் இருந்துச்சு. நிஜ அப்பாவிடம் மகள் எப்படி தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவாரோ அதுபோன்றுதான் நானும் அவரிடம் திரையில் மட்டுமல்லாமல், நிஜத்திலும் அன்பு காட்ட முடிஞ்சது. மிகப் பெரிய உயரத்துக்குப் போனாலும் எப்போதும் எளிமையை எப்படி கடைப்பிடிப்பது என்பதை ராமராஜன் சாரிடம் கற்றுக்கொள்ளலாம்.

படத்தில் எனக்கான சவால் என்றால், இதுதான் நான் நடித்த முதல் படம். முதன் முறை கேமரா முன் நின்றது சவால் மட்டுமல்ல, மறக்க முடியாத தருணம்! வில்லேஜ் கேர்ள், சிட்டி கேர்ள் என என்னுடைய கேரக்டருக்கு இரண்டு பரிமாணங்கள். மாறுபட்ட நடிப்பைக் கொடுக்க காரணம் இயக்குநர் ராகேஷ் சார்.

கதை சொல்லும்போதே ராகேஷ் சார் எல்லா குறிப்புகளையும் ஸ்கிரிப்ட்ல கொடுத்திருந்தார். சீன் சொல்லும்போதும் புரியற மாதிரிதான் சொல்லுவார். அதனால் என்னுடைய கேரக்டரை புரிதலுடன் பண்ண முடிஞ்சது. படம் பார்த்தவர்களும் என்னுடைய கேரக்டரை பாராட்டினார்கள்.

பாரதிராஜா என்ன சொன்னார்?

‘மார்கழி திங்கள்’ படம் பண்ணியது என்னுடைய அதிர்ஷ்டமா என்னன்னு தெரியல. பாரதிராஜா, இளையராஜா என ஜாம்பவான்கள் இணைந்த படம்.‘சாமானியன்’ படம் பார்த்துட்டு பாரதிராஜா சார், மனோஜ் சார் பாராட்டினார்கள். பாரதிராஜா சாருடன் நடிச்சது வாழ்நாளில் மறக்க முடியாது. சார் எப்போதும் ஃப்ரெண் ட்லியா பழகுவார். நான் நல்லா நடிப்பதாக அவருடைய எல்லா பேட்டியிலும் சொல்லியிருந்தார்.

அந்தப் படத்தில் நடிக்கும்போது என்னுடைய பிறந்த நாள் வந்துச்சு. எனக்காக ஸ்பெஷல் கேக் ஆர்டர் பண்ணி கொண்டாடினார். பாரதிராஜா, ராமராஜன் போன்ற லெஜண்ட்ஸ் மிக எளிமையாக பழகினார்கள். எல்லா லெஜண்ட்ஸும் இப்படித்தான் எளிமையா பழகுவார்களோ என்று தோணுச்சு. பாரதிராஜா சார் ஆக்டிங் டிப்ஸ் நிறைய தருவார். 

மூணு டேக் எடுக்கற மாதிரி வந்தா ஒவ்வொரு டேக்கிலும் ஒரே மாதிரி எக்ஸ்பிரஷன் இல்லாம வெவ்வேறு விதமா கொடுக்கலாம்னு சொல்வார். தமிழ் பொண்ணு நடிக்க வருவதை நெனைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு என்னிடம் சொன்னதை பெருமிதமா பார்க்கிறேன்.

வேற என்ன படங்களில் நடிக்கிறீர்கள்?

‘பைக் டாக்ஸி’. இயக்கம் பாலமுருகன். வுமன் சென்ட்ரிக் படம். சுசீந்திரன் சார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘வள்ளி மயில்’ படத்துல கேமியோ ரோல். தவிர மலையாள படமும் இருக்கு.

சினிமா டிராவல் எப்படியிருக்கு?

ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிறைய உழைக்கணும், நிறைய படம் பண்ணணும் என்ற ஆர்வம் அதிகமாகியிருக்கு. கோலிவுட், டோலிவுட் என பிரிச்சுப் பார்க்காம பல மொழிகளில்
நடிக்கணும். என்னால் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்  சரளமா பேச முடியும். மலையாளமும் மேனேஜ் பண்ணுவேன். மொழிகளைத் தாண்டிய நடிகையாக பேர் வாங்கணும் என்பது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல, லட்சியமும் அதுதான்.

எதிர்காலத்தில் எதிர்பார்க்கும் வேடங்கள் என்ன?

தனிப்பட்ட விதத்தில் இந்த ரோல்தான் பண்ணணும்னு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. ரிப்பீட்டட் இல்லாமல் பண்ணணும். புதுசு புதுசா பண்ணணும். சினிமாவுக்கு வரணும்னு முடிவானதும் நிறைய ஒர்க் ஷாப்ல கலந்துக்கிட்டேன். பாண்டிச்சேரியில் உள்ள புகழ் பெற்ற ஆதிசக்தி டிராமா ஸ்கூலில் டிகிரி வாங்கியிருக்கிறேன். இப்போதும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஒர்க் ஷாப் அட்டெண்ட் பண்றேன்.

‘பைக் டாக்ஸி’ல அழுத்தமான சிட்டி கேர்ளா வர்றேன். ‘மார்கழி திங்கள்’ ஹேமா, ‘சாமானியன்’ திவ்யாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேடம். மலையாளப் படமும் பீரியட் படமா வரவுள்ளது. அப்படி எல்லாமே ரிப்பீட்டடா இல்லாம வித்தியாசமான படங்களாக வந்துள்ளது. அப்படிதான் தேர்வு செய்து நடிக்கணும்னு நினைக்கிறேன்.

கதை, கேரக்டர் பிடிச்சிருந்தால் வில்லியாகவும் நடிக்க தயங்கமாட்டேன். ஹீரோயின், வில்லி என பிரித்துப் பார்க்கமாட்டேன். என்னால் முடியும் என்று நம்பிக்கை வந்தால் எந்தரோல் பண்ண
வும் தயார்.

விஷ் லிஸ்ட்ல இருக்கும் இயக்குநர் யார்?

மணிரத்னம் சார் டைரக்‌ஷன்ல நடிக்கணும். அவருடைய ஒவ்வொரு படத்தையும் 1000 தடவையாவது பார்த்திருப்பேன். அவருடைய டைரக்‌ஷன்ல நடிக்க சான்ஸ் கிடைச்சா அதைவிட லைஃப்ல வேற சந்தோஷம் இருக்க முடியாதுன்னு நினைக்கிறேன். மணி சார் என்னுடைய கனவு இயக்குநர்.

சினிமா தவிர என்ன பிடிக்கும்?

நான் சிங்கர் என்பது பலருக்கு தெரியாது. முறையா மியூசிக் கத்துக்கிட்டேன். டிரெயின்ட் சிங்கர்னு சொல்லலாம். ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக் ஸ்கூலில்தான் படிச்சேன். நிறைய கவர் சாங் பண்ணியிருக்கிறேன். சாண்டி மாஸ்டருடன் பண்ணிய ‘இன்ஸ் டா இன்ஸ்டாகிராம்’ ஆல்பம் அதிகம் பேசப்பட்டது. பாட சான்ஸ் கிடைச்சா மிஸ் பண்ணமாட்டேன்.

எஸ்.ராஜா