Drunken Monkeys... இந்தியாவில் குடியும் வாகன விபத்தும்



மும்பை பூனே நகர இளைஞன் ஒருவன் தன் தந்தையின் காஸ்ட்லியான வெளிநாட்டு காரை எடுத்துக் கொண்டு மப்பும் மந்தாரமுமாக அந்தக் காரை சுமார் 150 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றதில் இரண்டு ஐடி இளைஞர்கள் ஸ்பாட்டிலேயே அவுட்டானதுதான் கடந்தவாரம் தேர்தல் அப்டேட்டைவிட தீயான செய்தியாக இந்தியா முழுவதும் வலம் வந்தது.
இத்தனைக்கும் அந்த இளைஞன் மைனர் என்பது பலரை திகிலூட்டியது. பெரிய இடத்துப் பையன், மற்றும் சிறுவன் என்பதால் நீதிமன்றமும் பெயில் கொடுத்து மும்பை வாசிகளின் வயித்தெரிச்சலைக் கிளறிவிட்டிருக்கிறது.

இந்த விபத்து ஒரு சாம்பிள்தான். இந்தியாவில் நடக்கும் ‘டிரங்கன் டிரைவிங்’ விபத்துக்கள் பற்றி ஏராளமான ஆய்வுகள் உண்டு. அவற்றில் சிலதைப் பார்ப்போம்.
2019ம் ஆண்டில் எடுத்த ஒரு புள்ளிவிபரப்படி அந்த ஆண்டில் இந்தியாவில் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியதால் சுமார் 5122 விபத்துக்கள் ஏற்பட்டிருக்கிறதாம். அதில் சுமார் 2376 பேர் இறந்திருக்கிறார்கள். அதாவது ஒருநாளில் 7 சாவுகள். டூ மச் இல்லையா. காரணம், நம்ம ஊர் டிரங்கன் மங்கிகளுக்கு தண்டனையும் குறைவு, தண்டமும் (ஃபைன்) குறைவு என்று அடித்துச் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இந்தியாவில் டிரங்கன் டிரைவிங்குக்கு இரண்டு வகையான சட்டங்கள் உண்டு. ஒன்று லேட்டஸ்டாக அப்டேட் செய்யப்பட்ட ‘மோட்டார் வாகனச் சட்டம் 1988’ (Motor Vehicle Act 1988). மற்றது ‘இந்திய தண்டனைச் சட்டம்’ எனும் ஐ.பி.சி (இ.பி.கோ).மோட்டார் வாகனச் சட்டப்படி ஒருவர் முதன்முறையாக குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டினால் ரூ.10 ஆயிரம் ஃபைனுடன் 6 மாத சிறைத் தண்டனையும் கட்டாயம். அதே இரண்டாவது முறை மாட்டினால் 15 ஆயிரம் ரூபாய் ஃபைன் மற்றும் 2 ஆண்டு சிறை.

குடித்துவிட்டு இன்னொருவரின் உயிரை வாங்கினால் ஐ.பி.சி படி 2 வருட சிறை அல்லது ஃபைன் உண்டு. அல்லது இரண்டுமே இருக்கும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதன் மூலம் லேசான விபத்து, சீரியசான விபத்து என்று சட்டத்தில் விதிகள் உண்டு. ஆனால், இந்த எல்லா விபத்துக்களுக்குமே பெயில் உண்டு. ‘ஹிட் அண்ட் ரன்’ என்று சொல்லப்படும் குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்தி அதனால் மரணத்தை ஏற்படுத்தி கம்பி நீட்டினால் மட்டுமே பெயில் கிடைப்பது ரொம்பக் கஷ்டம்.

ஆனாலும் இதிலும் சிலர் புகுந்துவிளையாடலாம். மொத்தத்தில் இந்தியாவில் ஒருவரின் டிரங்க் அண்ட் டிரைவ் மரணத்துக்கே இரண்டு வருட தண்டனைதான் உச்சபட்சம் என்பக் தாக இருப்பதுதான் குடிகார வாகன ஓட்டிகளுக்கு தெம்பைக் கொடுப்பதாக குறை கூறுகிறார்கள் சமூக விமர்சகர்கள். இதில் என்ன குறை என்கிறீர்களா? சில வெளிநாடுகளைப் பார்ப்போம்.
குடித்துவிட்டு வண்டி ஓட்டினாலேயே ஆஸ்திரேலியாவில் 20 வருடம், அமெரிக்கா, ஜப்பான், தென் ஆப்பிரிக்காவில் 15 வருடம் மற்றும் ஐரோப்பாவில் 14 வருடம் கம்பிக்குள்ளே இருக்கவேண்டும்.

அப்படி என்றால் விபத்தில் மரணம் ஏற்படுத்தினால் தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும் என்று ஊகிக்கலாம். ரைட். உலகளவில் இந்தியாவில் டிராஃபிக் ஜாமுக்கும் விபத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? பார்ப்போம்.உலகளவில் இந்தியாவில் டிராஃபிக் நெருக்கடியின் சதவீதம் வெறும் ஒரு சதவீதம்தான். ஆனால், சாலை விபத்தில் இந்தியாவின் பங்கு சுமார் 6 சதவீதம். இதில் இருந்தே சாலை நெருக்கடிக்கும் சாலை விபத்துக்கும் தொடர்பில்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

பிறகு எப்படி சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது? எல்லாம் ‘புட்டியால்’ என்று இலகுவாகச் சொல்லிவிடலாம். உதாரணமாக, தில்லியில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில், அங்குள்ள டிரைவர்களில் சுமார் 81.2 சதவீத டிரைவர்கள் சரக்கில்தான் மிதக்கிறார்கள் என்று சொல்கிறது ஓர் ஆய்வு. இதே சூழல்தான் இந்தியாவிலுள்ள அனைத்து நகரங்களிலும் நிலவுகிறது.ஆக, விபத்துக்கும் மப்புக்கும் ஏகப்பட்ட தொடர்புகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. Monkeyகளிடம் இருந்தாவது தப்பித்துவிடலாம். ஆனால், டிரங்கன் மங்கிகள்..?
கஷ்டம்டா சாமி.

டி.ரஞ்சித்