டாப் 10 இந்திய பணக்கார நடிகைகள்!ஆண் டாண்டு காலமாகவே ஆணுக்கு நிகர் பெண் எனப் போராடிக் கொண்டிருந்தாலும் இந்த சமநிலை மட்டும் கிடைத்தபாடில்லை. அட சமநிலை வேண்டாம். ஆண்கள் வாங்கும் சம்பளத்தில் 50% கூடவா தொட முடியாது?

‘இன்று நிலை எங்கேயோ போய்விட்டதே. எந்த உலகத்தில் இருக்கிறீர்கள், ஆணுக்கு நிகராக பெண்களும் முன்னேறி வருகிறார்களே’ எனக் கேட்கலாம். ஆனாலும் நடிகர்களின் சம்பளம் ரூ.200 கோடியை எல்லாம் சுலபமாக தாண்டிக் கொண்டிருக்க, நாயகிகளின் சம்பளம் என்னவோ அதிகபட்சமே ரூ.40 கோடியில்தான் நிற்கிறது. ரூ.40 கோடி எல்லாம் நாயகிகளுக்கு சம்பளம் தருகிறார்களா... என்றால் ஆம், இங்கே இல்லை. நம் நாட்டு நாயகிகள் ஹாலிவுட்டில் நடித்ததால் ரூ.40 கோடி சம்பளம் வரை தொட்டிருக்கிறார்கள்.

அப்படி அரும்பாடுபட்டு தங்களது சம்பளம், குறிப்பாக நெட் ஒர்த், அதாவது நிகர மதிப்பின்படி இந்தியாவின் டாப் 10 நாயகிகள் யார்?

இதோ நிகர மதிப்புடன் கூடிய பணக்கார நடிகைகளின் பட்டியல்...

10 நயன்தாரா

என்ன நயன்தாராவா என ஆச்சர்யம் அடையாதீர்கள். பட்டியலில் இருக்கும் ஒரே தென்னிந்திய நடிகை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் மட்டுமே. மற்றவர்கள் அனைவருமே பாலிவுட் கண்மணிகள்தான். மலையாளத்தில் ‘மனசினக்கரே’ படம் மூலமும், தமிழில் ‘ஐயா’ படம் மூலமும் சினிமாவில் கால் பதித்தவர். அத்தனை முன்னணி நடிகர்களுடனும் நடனம் ஆடிவிட்டார். மேலும் காஸ்மெட்டிக்ஸ், பிஸினஸ், தயாரிப்பு, முதலீடு, கார்ப்பரேட் பங்கு என லேடி சூப்பர் ஸ்டாரின் நெட் வொர்த் கிராஃப் வருடந்தோறும் ஏறிக்கொண்டே செல்கிறது.
தற்சமயம் தமிழில் ‘டெஸ்ட்’, ‘ மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ மற்றும் மலையாளத்தில் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ உள்ளிட்ட படங்
களில் பிஸி.

நெட் வொர்த்: ரூ.100 கோடி.
ஒரு படத்திற்கு சம்பளம்: ரூ.10 முதல் ரூ.11 கோடி வரை.
விளம்பர வருவாய்: ரூ.5 கோடி.

9 ஷ்ரத்தா கபூர்

கபூர் குடும்பத்து வாரிசு. 2010ம் ஆண்டு ‘டீன் பட்டி’ படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரீ கொடுத்தார். தொடர்ந்து ‘ஆஷிகி 2’ ஷ்ரத்தாவின் கிராஃபை ஜெட் வேகத்தில் மேலே ஏற்றியது.
‘ஓகே ஜானு’ (‘ஓகே கண்மணி...’ இந்தியில்), ‘ஹாஃப் கேர்ள்ஃப்ரண்ட்,’ ,‘ஹசீனா பார்க்கர்’ படங்கள் ஷ்ரத்தாவின் கரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படங்கள். தென்னிந்திய பான் இந்தியப் படமான பிரபாஸின் ‘சாஹோ’ படத்தின் தமிழ் டப்பிங் மூலம் கோடம்பாக்கத்துக்கும் வந்துவிட்டார்.

நெட் வொர்த்: ரூ.123 கோடி.
ஒரு படத்திற்கு சம்பளம்: ரூ. 10 முதல் ரூ.15 கோடி வரை.
விளம்பர வருவாய்: ரூ. 1.6 கோடி.

8 அலியா பட்

இந்திய மற்றும் பிரித்தானிய குடியுரிமை கொண்ட நடிகை. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் பட் மகள். பாலிவுட்டின் பட் குடும்பத்தைச் சேர்ந்தவர், தற்போது ரன்பீர் கபூரைத் திருமணம் செய்த பிறகு கபூர் குடும்பத்துப் பெண்ணாகவும் மாறிவிட்டார்.‘சங்கார்ஷ்’ (1999) என்ற அக்‌ஷய் குமார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகம். தொடர்ந்து ‘ஹைவே’, ‘2 ஸ்டேட்ஸ்’, ‘டியர் ஸிந்தகி’ உள்ளிட்ட பல படங்களில் புகழ் பெற்றார். ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. மேலும் ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ படம் மூலம் ஆஸ்கர் மேடை வரை சென்று திரும்பி விட்டார்.

நெட் வொர்த்: ரூ.229 கோடி.
ஒரு படத்திற்கு சம்பளம்: ரூ. 10 முதல் ரூ.15 கோடி வரை.
விளம்பர வருவாய்: ரூ. 2 கோடி.

7 காத்ரீனா கைஃப்

பிரிட்டனில் பிறந்து குடியுரிமை வாங்கிய பாலிவுட்டின் கிளாமர் பாம். ‘பூம்’ இந்திப் படம் மூலம் முதல் அறிமுகமே அமிதாப் பச்சனுடன்தான். தொடர்ந்து கதாநாயகியாக தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ‘மல்லீஸ்வரி’ மூலம் தென்னிந்தியாவில் கால் பதித்தார். தொடர்ந்து அக்‌ஷய் குமார், ஷாருக்கான், சல்மான் கான், ஹ்ருத்திக் ரோஷன்... என காத்ரீனா கைஃப் தமிழக இளசுகளிடமும் பிரபலமானார்.  ஆனால், அவரின் தமிழ் என்ட்ரீ விஜய் சேதுபதியுடன் ‘மேரி கிறிஸ்மஸ்’ படம் மூலம்தான் சாத்தியமானது. சொந்தமாக காஸ்மெட்டிக் பிராண்டும் வைத்திருக்கிறார் காத்ரீனா.

நெட் வொர்த்: ரூ.235 கோடி.
ஒரு படத்திற்கு சம்பளம்: ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை.
விளம்பர வருவாய்: ரூ. 6 முதல் ரூ.7 கோடி வரை.

6 மாதுரி தீட்ஷித்

‘அபோத்’ இந்திப் படம் மூலம் அறிமுகமானவர். பாலிவுட் டான்சிங் குயின் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர். ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர்கான் என கான்களின் ஜோடியாக பல படங்கள் நடித்தார். அதில் ‘ஹம் ஆப் கே ஹெய் கௌன்’, ‘அஞ்ஜாம்’, ‘தில் தோ பாகல் ஹை’, ‘தேவ்தாஸ்’ என பல படங்கள் மொழியே புரியவில்லை எனினும் தென்னிந்தியா வரை பிரபலம் ஆயின. என்றும் 16 போல் காட்சியளிக்கும் மாதுரி தற்போது சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் மாஸ் காட்டுகிறார். மேலும் சொந்தமாக ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகளுடன் டான்ஸ் அகாடமி வைத்திருக்கிறார்.

நெட் வொர்த்: ரூ.250 கோடி.
ஒரு படத்திற்கு சம்பளம்: ரூ.4 முதல் ரூ.5 கோடி வரை.
விளம்பர வருவாய்: ரூ.8 கோடி.

5 அனுஷ்கா ஷர்மா

திருமதி விராட் கோலியாக இந்தியா முழுக்க தற்போது அறியப்படும் அனுஷ்கா ஷர்மாவின் பாலிவுட் கிராஃப் அதைவிட பெரிது. அயோத்யாவில் பிறந்த அனுஷ்கா ஷர்மாவுக்கு முதல் படமே ஷாருக்கானுடன் ‘ரப் நே பனா தி ஜோடி’. பாடல்கள், படம் என இந்தியா முழுக்க பிளாக் பஸ்டர். தொடர்ந்து ‘ஜப் தக் ஹை ஜான்’, ஆமிர் கானுடன் ‘பிகே’, ‘என்.ஹெச் 10’, ‘பாம்பே வெல்வெட்’, ‘ சுல்தான்’, ‘ஏய் தில் ஹாய் முஷ்கில்’ படங்கள் மூலம் பிரபலமடைந்தார்.  சினிமா - கிரிக்கெட் என இரு வருமானங்கள் ஒன்றிணைய அனுஷ்கா ஷார்மாவின் நெட் வொர்த் உலக அளவில் எகிறியது.

நெட் வொர்த்: ரூ.255 கோடி.
ஒரு படத்திற்கு சம்பளம்: ரூ.12 முதல் ரூ.15 கோடி வரை.
விளம்பர வருவாய்: ரூ. 8 முதல் ரூ.10 கோடி.

4 கரீனா கபூர் கான்

ரந்தீர் கபூர் மற்றும் பபிதாவின் மகள். அக்கா கரிஷ்மாவும் இவரும் பாலிவுட்டின் மாஸ் இரட்டைச் சகோதரிகள். இங்கே நக்மா - ஜோதிகா போல் அடுத்தடுத்து சினிமாவில் தனக்கென தனி அந்தஸ்து பெற்றவர்கள். அபிஷேக் பச்சனுடன் ‘ரெஃபுயூஜி’ படம் மூலம் சினிமா அறிமுகம். இவரின் பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. ‘ஜப் வி மெட்’ (‘கண்டேன் காதலை’), ‘டான்’ (அஜித்தின் ‘பில்லா’), ‘பாடிகார்ட்’ (‘காவலன்’), ‘3 இடியட்ஸ்’ (‘நண்பன்’)... இன்னும் பல. 24 வருடங்களாகவே இன்னும் முன்னணி நாயகியாக வலம் வரும் கரீனாவுக்கு தற்போதும் ‘க்ரூ’ என்னும் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. பாலிவுட்டின் நவாப் சைஃப் அலி கானை திருமணம் செய்ததில் ராயல் குடும்பத்து மனைவியாகவும் மாறினார்.

நெட் வொர்த்: ரூ.440 கோடி.
ஒரு படத்திற்கு சம்பளம்: ரூ.8 முதல் ரூ.18 கோடி வரை.
விளம்பர வருவாய்: ரூ.3 முதல் ரூ. 4 கோடி வரை.

3 தீபிகா படுகோன்

டென்மார்க் குடியுரிமை கொண்ட இந்தியாவின் டாப் நடிகை. ‘ஐஷ்வர்யா’ என்னும் கன்னடப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான தீபிகா, ஷாருக்கானின் ‘ஓம் ஷாந்தி ஓம்’ படம் மூலம் புகழடைந்தார். தொடர்ந்து பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாகவும் வலம் வரத் துவங்கினார். ‘ஹவுஸ்ஃபுல்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘கோச்சடையான்’, ‘பதான்’, ‘ஜவான்’ என தமிழிலும் தீபிகாவுக்கு தீயாய் ரசிகர்கள் இருக்கிறார்கள். நயன்தாரா போலவே ஏராளமான பிஸினஸ், காஸ்மெட்டிக்ஸ், பங்கு வர்த்தகம், அயல்நாட்டு முதலீடுகள், உடன் தனியார் ராக்கெட் கட்டுமான பங்கில் முதலீடு உட்பட தீபிகா படுகோன் படா நெட் வொர்த் கொண்டவர்.

‘ஃபைண்டிங் ஃபேன்னி’, ‘டிரிபிள் எக்ஸ்: ரிடர்ன் ஆஃப் ஸாண்டர் கேஜ்’ ஆங்கிலப் படங்கள் உட்பட ஹாலிவுட்டிலும் கால் பதித்தவர். ரன்வீர் சிங் மனைவியாக தற்போது தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறார். ஆஸ்கர் மேடையில் விருதுக்கான அறிவிப்பு கொடுத்த முதல் நடிகை என்கிற பெருமை சேர்த்தவர்.

நெட் வொர்த்: ரூ.500 கோடி.
ஒரு படத்திற்கு சம்பளம்: ரூ.15 முதல் ரூ.30 கோடி வரை.
விளம்பர வருவாய்: ரூ. 7 முதல் ரூ.10 கோடி.

2 பிரியங் கா சோப்ரா

இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் முதல் நடிகையாக தற்போது இடம் பிடித்திருக்கும் நடிகை. தொடர்ந்து ஹாலிவுட் படங்கள், பாப் ஆல்பங்கள் என பிரியாங்காவிற்கு கை கொடுக்க, தற்போது நாயகிகளின் சம்பளத்தை ரூ.40கோடிக்கு உயர்த்தியதில் முக்கியப் பங்கு இவருக்கு உண்டு. பீகாரில் பிறந்து 2000ம் ஆண்டு உலக அழகியாக பட்டம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். 2002ம் ஆண்டு விஜய்யின் ‘தமிழன்’ படம் மூலம் அறிமுகமானவர்.

பாலிவுட்டில் பல படங்கள் நடித்தாலும் ‘ஃபேஷன்’ படமும் ‘மேரி கோம்’ படமும் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுத் தந்தன. உலக இசை மார்க்கெட்டில் உறுப்பினராக இருப்பதாலேயே இவரின் நெட்வொர்த் இன்னும் அதிகரித்தது. மேலும் தற்சமயம் நடிப்பது அத்தனையும் ஆங்கிலப் படங்கள். எனவே இவரது சம்பளம் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது.

நெட் வொர்த்: ரூ.620 கோடி.
ஒரு படத்திற்கு சம்பளம்:
ரூ.15 முதல் ரூ.40 கோடி வரை.
விளம்பர வருவாய்:
ரூ.5 கோடி.

1 ஐஸ்வர்யா ராய் பச்சன்

இந்தியாவின் பணக்கார நடிகை பட்டியலில் டாப் இடத்தில் பல வருடங்களாக மாஸ் காட்டுகிறார். 1994ம் ஆண்டு உலக அழகியாக இந்தியாவிற்கு பெருமை சேர்த்த முதல் பெண். 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தமிழிலேயே ‘ஜீன்ஸ்’, ‘ராவணன்’, ‘எந்திரன்’, ‘பொன்னியின் செல்வன் 1 & 2’ என தமிழுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நீண்ட பந்தம் உண்டு. கர்நாடகா, மங்களூரில் பிறந்த ஐஸ்வர்யா பாலிவுட்டில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் பல படங்கள் நடித்து இந்தியாவிலிருந்து கேன்ஸ் விழாவில் இடம்பிடித்த முதல் இந்திய நடிகையாகவும் உயர்ந்தார். ஐநாவின் நல்லெண்ணத் தூதர் துவங்கி அயல்நாட்டு பங்குதாரர், முதலீடு, வர்த்தக பங்கு, பிஸினஸ்... என ஐஸ்வர்யா ராயின் நெட் வொர்த் தலை சுற்ற வைக்கிறது.

நெட் வொர்த்: ரூ.800 கோடி.
ஒரு படத்திற்கு சம்பளம்: ரூ.10 கோடி.
விளம்பர வருவாய்: ரூ.6 முதல் ரூ.7 கோடி வரை.

என்னதான் ஐஸ்வர்யா ராய் இந்தியப் பணக்கார நடிகையானாலும் நடிகர்களுடன் ஒப்பிடுகையில் இதில் இன்னும் மாற்றம் தேவை என்றே தோன்றுகிறது. போலவே இத்தனை வருட காலங்களில் இந்தப் பட்டியலில் இடம் பிடித்த முதல் தென்னிந்திய நடிகையாக நயன்தாராவும் சற்று ஆறுதல் கொடுக்கிறார். எதிர் வரும் காலங்களில் மாற்றம் நிகழுமா? பார்க்கலாம்.

ஷாலினி நியூட்டன்