ஷாஜகானுக்கே சவால் விடும் லேட்டஸ்ட் காதலர்!



ஷாஜகான் தனது மனைவி மும்தாஜுக்காக கட்டிய தாஜ்மஹால் வரலாறு நாம் அறிந்ததே. அதேபோல் இந்த தாஜ்மஹாலை வேறு யாரும் இதேபோல் காப்பியடித்து கட்டிவிடக்கூடாது என்பதற்காக அதை கட்டிய கட்டிட கலைஞர்களின் கட்டைவிரலை வெட்டிவிட்டார் என்கிற கதையும் உண்மையோ பொய்யோ, நாம் கேள்விப்பட்டது - கேள்விப்படுவதுதான்.

ஆனால், ஷாஜகான் நினைத்தது போலவே அல்லது அச்சப்பட்டது போலவே நடந்து விட்டது. ஆம். மத்திய பிரதேசத்தில் ஒரு கணவர் தன் மனைவிக்காக அச்சு அசலாக தாஜ்மஹால் போலவே பங்களா ஒன்றை கட்டியிருக்கிறார். ஐந்தாறு அறைகள், அதில் 4 படுக்கையறைகள், சமையலறை, அழகிய வரவேற்பறை, அதனுடன் இணைந்த டைனிங் உட்பட இணையம் முழுக்க இந்த தாஜ்மஹால் காப்பி கட்டடம் ட்ரெண்டாகி வருகிறது.
‘‘தாஜ்மஹால்... ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் உள்ள 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சமாதி. தனது மனைவி மும்தாஜ் மறைவுக்குப் பின்னர், முகலாய அரசர் ஷாஜஹான் அவரை நினைவுகூரும் வகையில் இதைக் கட்டினார். மும்தாஜ், தனது 14வது குழந்தை பிறப்பின் போது மரணம் எய்தினார்.

அற்புதமான வெள்ளை மார்பிள் கற்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னமாக விளங்கும் இந்தக் கட்டடம், அதற்கே உரிய சிற்பக் கலையோடு உலக அதிசயங்களில் ஒன்றாக இன்றும் பல உலகளாவிய சுற்றுலா மக்களை ஈர்க்கிறது. 
இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றான தாஜ் மஹாலுக்கு, தினமும் சுமார் 70,000 பேர் வருகை தருகின்றனர். அந்த வரிசையில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரும் அடக்கம்.இந்த உலக அதிசயத்தைதான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழில்பதிபர் ஆனந்த் பிரகாஷ் சௌக்சி தனது மனைவிக்காக நகல் எடுத்துள்ளார்.

52 வயதான ஆனந்த் தன்னுடன் 27 வருடங்களை பங்கு போட்டுக்கொண்ட மனைவிக்காக இந்த தாஜ்மகால் வீட்டை அன்பளிப்பாகக் கட்டியிருக்கிறார்.மத்தியப் பிரதேச மாநிலத்தின் புர்கான் நகரத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதை கட்டுவதற்கு 20 மில்லியன் டாலர்களை செலவழித்துள்ளார் ஆனந்த். அதாவது நம் இந்திய மதிப்பில் 172 கோடி ரூபாய். இந்த வீட்டில் ஒரு நூலகம், மற்றும் ஒரு தியான அறையும் கட்டப்பட்டுள்ளன.

‘‘ஒவ்வொரு நாளும் எங்களது வீட்டைச் சுற்றி பலரும் சுற்றுலா போல பார்த்துச் செல்கிறார்கள். ஒரு சிலர் திருமணத்திற்கு முன், பின் புகைப்படம் மற்றும் வீடியோ உருவாக்கத்திற்கும் இங்கே வருகிறார்கள். 

யாரையும் நாங்கள் தடுப்பதில்லை. அதேபோல் அப்படி வருபவர்களுக்கும் எங்களால் முடிந்த வரவேற்புகளை கொடுக்கிறோம். ஆனால், தெரியாத மக்களுக்கு வீட்டிற்குள் மட்டும் அனுமதி கிடையாது. என்ன இருந்தாலும் இது நாங்கள் வாழும் வீடு. எனவே சுற்றி இருக்கும் பகுதிகளில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

இது வெறும் என் மனைவிக்கான அன்பளிப்பு மட்டுமல்ல, இதனை அன்பின் சின்னமாகவும் நான் பார்க்கிறேன்...’’ என்னும் ஆனந்த், இந்தக் கட்டடத்தை எப்படி துவங்கினார் என மேலும் விளக்கினார்.‘‘இதை கட்டுவதற்கு முன்பு எத்தனை முறை நான் ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹாலுக்கு சென்றேன் என்பது எனக்கே தெரியாது. அந்த அளவிற்கு அதன் அழகை நான் பலமுறை ரசித்திருக்கிறேன்.

ஷாஜகான் எப்படி இப்படி யோசித்தார், தன் மனைவி மீது அவருக்கு இவ்வளவு அன்பா என பலமுறை யோசித்ததுண்டு. 

ஆனால், இந்த அன்பு உலகத்திற்கு தெரிந்தாலும் யாருக்காக அவர் அர்ப்பணித்தாரோ அந்த நபருக்கு தெரியாமல் போனதே என்கிற வருத்தமும் எனக்கு உண்டு. அப்படி நான் அன்பின் அடையாளமாக என்னைச் சேர்ந்தவர்களுக்கு செய்யும் விஷயங்கள் அவர்கள் வாழும் போதே அனுபவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

அப்படிதான் சாதாரணமாக ஒரு பங்களா கட்டி எனது மனைவிக்கு கொடுக்க நினைத்த எனக்கு இந்த தாஜ்மஹால் ஆலோசனை தோன்றியது. இதற்காக பலமுறை தாஜ்மஹாலை 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கினோம். ஒன்றிரண்டு முறை அளக்கும் டேப் கொண்டு தாஜ்மஹாலை அளந்தேன். 

பலரும் என்னைப் பார்த்து சிரித்தார்கள். எனது ஐடியாவை சொன்னவுடன் இன்ஜினியர்கள் அதே அளவில் இல்லாமல் அளவில் சிறியதாக மாற்றி கட்டலாம் என ஆலோசனை கொடுத்தனர். ஏனெனில் அதிகம் பெரியதாக மாற மாற வீடு என்கிற அமைப்பு மாறி மகால் வடிவத்தில் மாறிவிடும் என்பதால் அளவில் சிறியதாகக் கட்ட முடிவு செய்தோம்.

அதேபோல் இஸ்லாமிய முறையிலான டிசைன்களையும் தவிர்த்து இந்திய வீடுகளின் உள்கட்டமைப்பைக் கொடுத்தோம். குறிப்பாக ஜன்னல் மற்றும் கதவுகள், தரை இவை அனைத்தும் பூக்கள் டிசைன்கள் கொண்ட வெள்ளை மக்ரானா மார்பிள்களையும் மர வேலைப்பாடுகளைக் கொண்ட இந்திய இந்து கலாசார உள்கட்டமைப்புகளையும் கொடுத்திருக்கிறோம்.

இந்த மக்ரானா மார்பிள்கள்தான் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹாலுக்கும் பயன்படுத்தப்பட்டது. அப்போதிருந்த அதே உறுதித் தன்மை இருக்குமா தெரியாது. ஆனால், அந்த வகை மார்பிள்கள்தான்.

வீட்டின் வரவேற்பு அறையில் வந்து இறங்கும் படிக்கட்டுகள் மேலே இரண்டு பக்கமும் இருக்கும் இரண்டு பெரிய படுக்கை அறைகளை இணைக்கும். தாஜ்மஹாலின் அளவில் மூன்றில் ஒரு பங்கு எங்களுடைய வீடு இருக்கும். 

வீட்டின் கூரை தரையிலிருந்து 29 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனைக் கட்ட நான்கு வருடங்களானது. இதனை இந்தியாவின் பிரபலமான ப்ரியம் சரஸ்வத் கட்டடக் கலைஞர்தான் கட்டியிருக்கிறார்...’’புன்னகைக்கும் ஆனந்த் சௌக்சியின் மனைவி மஞ்சுஷா சௌக்சி, ஒரு ஓய்வு பெற்ற மருத்துவர்.

இவர்களின் வீட்டின் நிலத்திலேயே இன்னொரு பகுதியில் இவர்களுக்கு சொந்தமான மாடர்ன் ஹை டெக் பள்ளியும் இயங்குகிறது. அங்கே 2200 மாணவர்கள் படிக்கிறார்கள். மேலும் சில தனியார் இன்ஸ்டிடியூட்டுகளையும் ஆனந்த் நடத்துகிறார். யார் தங்களது வீட்டைத் தேடி வந்தாலும் அவர்களை அன்பாக வரவேற்று உபசரித்து அனுப்புகிறார்கள் இந்த தாஜ்மகால் வீட்டு ஜோடிகள்.

ஷாலினி நியூட்டன்